‘அதிமுக-பாஜக கூட்டணி அமைக்க வேண்டும்’ – தினகரன் பேச்சின் பின்னணி என்ன? கூட்டணி அமையுமா?

அ.தி.மு.க உடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் முயற்சியில் பா.ஜ.க

பட மூலாதாரம், @EPSTamilNadu

படக்குறிப்பு, ஒன்றுபட்ட அ.தி.மு.க உடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் (கோப்புப் படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

‘பா.ஜ.க உடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் அ.தி.மு.க வெற்றி பெற முடியும்’ என, செவ்வாய் அன்று (டிசம்பர் 17) அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறிய கருத்து, தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

‘பாஜக உடன் எந்தக் காலத்திலும் கூட்டணி உடன்பாடு வரப்போவதில்லை,’ எனக் கூறுகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவை ஒன்றுபடுத்தி, சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா? கூட்டணி தொடர்பான பேச்சுகள் எழுவது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம்

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார். இதன் காரணமாக, ‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,’ கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை.

அதேநேரம், 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

இந்தசூழலில், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. இந்த வாதத்தை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதா குறித்த கருத்துக்காக அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தியது

பட மூலாதாரம், Annamalai/X

படக்குறிப்பு, ஜெயலலிதா குறித்த கருத்துக்காக அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தியது

‘அதிமுக கூட்டணி… பாஜக விருப்பம்’

செவ்வாய் அன்று (டிசம்பர் 17) செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அண்ணாமலை உள்பட தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் இந்திய அளவில் உள்ள தலைவர்களும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்” என்றார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என அவர் தெரிவித்தார்.

“சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும்” என்றார் தினகரன்.

ஆனால், “அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது தனக்குத் தெரியவில்லை” எனக் கூறிய தினகரன், “அதிமுக அழிந்துவிட வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. அதிமுக ஒன்றாக இருந்தால் தான் திமுகவை வெல்ல முடியும் என நினைக்கின்றனர்” என்றார்.

“2021 சட்டமன்றத் தேர்தலின்போதே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பழனிசாமி எடுத்தத் தவறான முடிவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை” என தினகரன் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக பழனிசாமி உதவி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறிய தினகரன், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தோம். அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்திருந்தால் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்” என்றார்.

டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை, பாஜக, அதிமுக

பட மூலாதாரம், Dinakaran/X

படக்குறிப்பு, திமுகவின் தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்யும் வகையில் பழனிசாமி செயல்பட்டு வருவதாக கூறுகிறார் தினகரன்

அண்ணாமலை சொன்னது என்ன?

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “திமுக கூட்டணியைத் தவிர இங்கு யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றார்.

தினகரனின் பேட்டி குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அண்ணாமலை, அதிமுக குறித்த தினகரனின் கருத்தாக தான் அதைப் பார்ப்பதாக கூறினார்.

அதேநேரம், அதிமுக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாக பதில் அளிக்காத அண்ணாமலை, “பாஜகவின் வளர்ச்சியை அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து பேசியிருக்கிறார். பேசுபொருளாக எந்தக் கட்சி உள்ளது என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.

தங்கள் கட்சிக்கான பணிகள் நிறைய உள்ளதாக கூறிய அண்ணாமலை, “2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்தது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சி வர வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதை நிகழ்த்திக் காட்டுவோம்” என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள பாஜக நிர்வாகிகள் எல்லாம் மேலாளர்களாக மட்டுமே இருப்பதாக, இங்குள்ள பிராந்திய கட்சிகள் நினைப்பதாக கூறிய அண்ணாமலை, “டெல்லியில் என்ன முடிவெடுத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் கூறுவதைக் கேட்டுத் தான் முடிவெடுப்பார்கள். அதை பிராந்திய கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஜெயக்குமார், அதிமுக

பட மூலாதாரம், Jayakumar/X

படக்குறிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை ஒரு போட்டியாக கருத முடியாது என்கிறார் ஜெயக்குமார்

‘பாஜக வளரவில்லை…அது மாயை’ – ஜெயக்குமார்

தினகரனின் பேட்டி குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தினகரனுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. எங்களுக்கு அவர் ஆலோசனை சொல்ல வேண்டியதில்லை. எங்கள் கட்சி எடுத்த முடிவின்படி, பாஜக உடன் கூட்டணி கிடையாது” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகளை அதிமுக ஆட்சி செய்துள்ளது. திமுகவை அதிமுக என்ற கட்சியால் மட்டுமே வீழ்த்த முடியும். தாங்கள் வளர்ந்துவிட்டதாக பாஜக கூறுவது மாயை.” என்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தங்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

“ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி போட்டியிட்டதாலேயே, அவர்களுக்கு ஓரளவு வாக்கு சதவிகிதம் கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கு என தனி வாக்கு வங்கி எதுவும் இல்லை. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அவர்களை ஒரு போட்டியாகக் கருத முடியாது” என்றார்.

“2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்காக இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா?” எனக் கேட்டபோது, “நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் மட்டும் என்ன அவசியம் வந்துவிடப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

“எங்கள் தலைவர்களை கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது அண்ணாமலை மென்மையாகப் போவதை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“தமிழக அரசியலில் பாஜக கூட்டணியால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” எனக் கூறிய ஜெயக்குமார், “தனித்தன்மை வாய்ந்த இயக்கமாக அதிமுக உள்ளது. இங்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி உள்ளது” என்றார்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் பிரிந்து கிடப்பதாக தினகரன் கூறிய கருத்துக்குப் பதில் அளித்த ஜெயக்குமார், “அது வேண்டும் என்றே பரப்பப்படும் தகவல். கட்சியில் எந்தப் பிரிவும் இல்லை. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட நபர்களை கட்சியைச் சேர்ந்தவர்களாக எப்படி கருத முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் பதில் என்ன?

பாஜக, அதிமுக, நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், Annamalai/x

படக்குறிப்பு, பாஜகவை வலுப்படுத்தும் பாதையில் அண்ணாமலை பயணித்துக் கொண்டிருப்பதாக நாராயணன் திருப்பதி கூறுகிறார்

அதிமுகவின் விமர்சனம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “கூட்டணி குறித்து எந்தப் பதிலையும் அண்ணாமலை கூறவில்லை. யூகத்தின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்” எனக் கூறினார்.

“தினகரன் கூறிய கருத்தை சரி, தவறு என அண்ணாமலை கூறவில்லை” எனக் குறிப்பிட்ட நாராயணன் திருப்பதி, “அதிமுக குறித்த தினகரனின் கருத்தாக அதைப் பார்ப்பதாகக் கூறிவிட்டார்” என்றார்.

அப்படியானால், அதிமுக உடன் கூட்டணி தேவையில்லை என்ற கருத்தில் தமிழக பாஜக உறுதியாக உள்ளதா எனக் கேட்டோம்.

“தற்போது எந்த தேர்தலும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. தற்போது அதற்கான அவசியம் எழவில்லை” என்றார்.

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தங்கள் கட்சியின் நோக்கமாக உள்ளதாகக் கூறிய நாராயணன் திருப்பதி, பாஜகவை வலுப்படுத்தும் பாதையில் அண்ணாமலை பயணித்துக் கொண்டிருப்பதாக மட்டும் பதில் அளித்தார்.

பாஜகவின் வளர்ச்சி குறித்த ஜெயக்குமாரின் விமர்சனத்துக்குப் பதில் அளித்த நாராயணன் திருப்பதி, “அதிமுக தனது வாக்குவங்கியை இழந்திருக்கிறதா… இல்லையா? நாங்கள் அதைப் பற்றிப் பேசவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பாஜகவின் வளர்ச்சியைப் பற்றி பேசுகின்றனர். இதில் இருந்தே அவர்களுக்குப் புரிந்திருக்கும்” என்கிறார்.

‘விரைவில் முடிவுக்கு வரும்’ – துரை.கருணா

அதிமுக-பாஜக இடையே இணக்கமான போக்கு நிலவுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா

பட மூலாதாரம், Duraikaruna

படக்குறிப்பு, அதிமுக-பாஜக இடையே இணக்கமான போக்கு நிலவுகிறது என்கிறார், மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா

“சமீப நாட்களாக பாஜக மீது அதிமுகவில் பெரியளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான போக்கு நிலவுகிறது. விரைவில் இது வடிவம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தற்போது பாஜகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். 2026 தேர்தலில் தனித்து நின்றாலோ, அதிமுகவை தவிர்த்து தனி அணி அமைத்தாலோ பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.” என தெரிவித்தார்.

“அதனால் அண்ணாமலை உள்பட பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகளும், ‘அதிமுக கூட்டணி வேண்டும்’ என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. பாஜக தேசிய தலைமையும், ‘ஒன்றுபட்ட அதிமுக உடன் உடன்பாடு வைத்தால் வெற்றி கிடைக்கும்’ என நம்புகிறது” என்கிறார்.

அதிமுகவில் உள்ள மேற்கு மண்டல தலைவர்கள் சிலர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என்ற மனநிலையில் உள்ளதாகவும் கூறுகிறார் துரை.கருணா.

“பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் திமுகவை தோற்கடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாறாக, பாஜக அணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டால், அது திமுகவுக்கு சாதகமாக முடியும்” என்கிறார் துரை.கருணா.

பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆகியவற்றின் மீது எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்துடன் இருக்கிறார் என்றும் அவற்றை தளர்த்துவதற்கான வேலைகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் துரை.கருணா,

“அரசியலில் விமர்சனங்கள் என்பது காலப்போக்கில் மாறிவிடும். யாரும் யாரையும் கடுமையாக விமர்சித்தாலும், தேர்தல் நேரத்தில் வெற்றி எந்தப் பக்கம் என்பதைத் தான் பார்ப்பார்கள்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு