கழிப்பறைக்கு சென்ற பெண்ணிடம் இரவில் வழிப்பறி கொள்ளை ; இருவர் கைது ! on Friday, December 20, 2024
அநுராதபுரம் – திரப்பனை பிரதேசத்தில் இரவில் கழிப்பறைக்கு சென்ற பெண் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திரப்பனை, தம்மென்னாகல பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த பெண் இரவு நேரத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறைக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது, சந்தேக நபர்கள் இருவர் இந்த பெண்ணின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு பெண்ணின் கழுத்திலிருந்த 03 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர், இந்த பெண் இது தொடர்பில் திரப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திரப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.