- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21ஆம் தேதி, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.
அதாவது, 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத் செல்கிறார்.
முன்னதாக 2009இல், அப்போதைய இந்திய துணை குடியரசுத் தலைவர், ஹமீது அன்சாரி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகக் கருதப்பட்டது.
பிரதமரின் பயணத்துக்கு முன்னதாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் சென்று பிரதமர் மோதியின் இந்த முக்கியமான பயணத்திற்கான களத்தை தயார் செய்துள்ளனர்.
இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எரிசக்தி பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையில் ஆட்சியாளர்கள் பெரிதாகப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வணிக, கலாசார உறவுகள் உள்ளன.
குவைத்தில் எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்று ரீதியாக, இரு நாடுகளும் நட்புறவைக் கொண்டிருந்தன. 1961 வரை குவைத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவு 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், இந்தியா குவைத்தில் வர்த்தக ஆணையரை நியமித்தது.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே அரசியல் தலைவர்களின் உயர்மட்ட பயணங்கள் நிகழ்ந்துள்ளன. 1965இல் அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் குவைத்துக்கு பயணம் செய்தார்.
குவைத்தின் முக்கிய தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். 2013ஆம் ஆண்டு குவைத் பிரதமர் ஷேக் ஜாபர் அல் முபாரக் அல் ஹமத் அல் சபா இந்தியாவுக்கு வருகை தந்தார்.
முன்னதாக 2006ஆம் ஆண்டு அப்போதைய குவைத் அமீராக இருந்த ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா இந்தியா வந்திருந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகஸ்ட் 2024இல் குவைத் சென்றார். குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி அல் யஹ்யா டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
இந்தப் பயணத்தின்போது அவர், பிரதமர் நரேந்திர மோதியை குவைத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, இந்த மாதம் குவைத் வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணத்தின்போது, கூட்டு ஒத்துழைப்பு ஆணையமும் (ஜேசிசி) நிறுவப்பட்டது.
நடைமுறை வெளியுறவுக் கொள்கை
பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சர்வதேச அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டார். அவர் மத்திய கிழக்கு நாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.
இந்த குவைத் பயணம், அரபு நாடுகளுக்கு நரேந்திர மோதி மேற்கொள்ளும் 14வது பயணம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏழு முறையும், கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கு தலா இரண்டு முறையும், ஓமன் மற்றும் பஹ்ரைனுக்கு தலா ஒரு முறையும் மோதி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
தற்போது, மத்திய கிழக்கின் அரபு நாடுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமான மூலோபாய மற்றும் ராஜ்ஜீய முன்னுரிமையாக உருவாகி வருகின்றன.
மன்மோகன் சிங் தனது பத்து ஆண்டுகள் பதவிக் காலத்தில் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு மூன்று முறை மட்டுமே பயணம் மேற்கொண்டார். கத்தார், ஓமன், செளதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறை சென்றுள்ளார்.
அதேநேரம் பிரதமர் நரேந்திர மோதி தற்போது குவைத் பயணத்தோடு சேர்த்து கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அரபு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
“உலக அளவில் இந்தியாவின் அடையாளத்தை உயர்த்த பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மத்திய கிழக்கில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கான முக்கிய காரணம் வணிக உறவுகள்தான். அண்டை நாடுகள் மட்டுமின்றி தொலைதூர அண்டை நாடுகளுக்கும் மோதி பயணிக்கிறார்” என்று சர்வதேச விவகாரங்களின் நிபுணர் பேராசிரியர் ஸ்வஸ்தி ராவ் கூறுகிறார்.
இந்திய சர்வதேச விவகார கவுன்சிலின் மூத்த உறுப்பினரான டாக்டர் ஃபஸூர் ரஹ்மான், “மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை புதிய ஆற்றலுடன் மோதி முன்னெடுத்துள்ளார். பிரதமர் மோதியும் தனக்கு முன் இருந்த இந்திய தலைவர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்தி, நிரூபிக்க விரும்புகிறார். உலக அரசியலின் மாறிவரும் தன்மைக்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அவர் மாற்றி அமைத்துள்ளார்” என்றார்.
மத்திய கிழக்கில் அதிகம் வாழும் இந்தியர்கள்
மத்திய கிழக்கு உடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், இந்தப் பிராந்தியத்தில் வாழும் இந்திய மக்கள் தொகை அதிகம் என்பதுதான்.
குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 35 லட்சம் இந்தியர்களும், செளதி அரேபியாவில் சுமார் 26 லட்சம் இந்தியர்களும் உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் பணம் அனுப்புகின்றனர். இந்த மக்களை இணைக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோதி ஈடுபட்டுள்ளார்.
குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் ஆண்டுதோறும் சுமார் 4.7 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இது இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொத்த வருமானத்தில் 6.7 சதவீதம்.
“வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த மோதி முயல்கிறார் என்பதில் சந்தேகமில்லை, மேலும் மோதி மீதான ஈர்ப்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) மத்தியில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் எந்த சிறப்பான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனாலும் உலக அளவில், பிரதமர் மோதி என்.ஆர்.ஐ-களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என்கிறார் பேராசிரியர் ராவ்.
மத்திய கிழக்கில் வாழும் இந்திய மக்கள் தொகை, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் பேராசிரியர் ஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
“மத்திய கிழக்கில் வாழும் இந்திய மக்கள் தொகை, இந்தியாவின் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளதை பிரதமர் மோதி புரிந்து கொண்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியதன் மூலம், வெளிநாடு வாழ் இந்திய மக்களின் நம்பிக்கையை அவர் பலப்படுத்தியுள்ளார்” என்றும் விவரித்தார்.
இந்தியாவின் எரிசக்தி தேவை
இந்தியா தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அரபு நாடுகளைச் சார்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது உறவை வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எண்ணெய் தேவையில் மூன்று சதவீதத்தை குவைத் பூர்த்தி செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கினாலும், அதிகளவில் மத்திய கிழக்கையே சார்ந்திருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ளது, மத்திய கிழக்கு உடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான காரணம்” என்று பேராசிரியர் ஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
பிரதமர் நரேந்திர மோதியும் மத்திய கிழக்கு ஆட்சியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் உறவை வலுப்படுத்தி வருகிறார். இந்தியா தனது எண்ணெய் தேவைக்காக மத்திய கிழக்கை நம்பியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் பேராசிரியர் ராவ்.
இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் 26 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகம், 2023-24 ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி சுமார் $10.47 பில்லியன். இருப்பினும், இந்த வர்த்தகத்தின் பெரும்பகுதி குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் எண்ணெய் மற்றும் பிற எரிசக்தி பொருட்கள் ஆகும்.
இந்தியா குவைத்துக்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை ஏற்றுமதி செய்தது. குவைத் இந்தியாவின் ஆறாவது பெரிய எண்ணெய் வழங்குநர். இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் மூன்று சதவீதத்தை குவைத்தில் இருந்து பெறப்படும் எண்ணெயில் இருந்து பூர்த்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, குவைத் இந்தியாவில் சுமார் பத்து பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
அரபு நாடுகளின் பொருளாதார பலம்
குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, பஹ்ரைன் ஆகியவை பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடுகள். இந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், உலக அளவில் பெரியளவிலான பொருளாதார சக்தியைக் கொண்டுள்ளன.
“மாறிவரும் சர்வதேச சூழலில் இந்தியா வித்தியாசமான குரலாக மாற முயல்கிறது. உலகப் பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் நட்பு நாடுகளை இந்தியா விரும்புகிறது. தேவைப்படும்போது அந்த நாடுகள் இந்தியாவுடன் நிற்கும் என்பதே இதற்குக் காரணம். மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு நடைமுறை காரணம் இந்த நாடுகளின் பொருளாதார பலம்” என்கிறார் பேராசிரியர் ராவ்.
மத்திய கிழக்கு, இந்தியாவின் தொலைதூர அண்டை பிரதேசம். மத்திய கிழக்கில் பல சீரமைப்புக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது, அதாவது ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
“இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிடையே சமமான கொள்கையைக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதிக்கு முன், எந்த இந்திய பிரதமரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றதில்லை. இன்று இந்தியா அந்த நாட்டுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்று இந்தியாவின் வலுவான நட்பு நாடாக உள்ளது” என்றும் அவர் விளக்கினார்.
“பிரதமர் செளதி அரேபியாவுக்கு இரண்டு முறை பயணம் செய்து அரபு நாடுகளின் தலைவர்களை ஜி20 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். மத்திய கிழக்கின் முக்கியத்துவத்தை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்பதையும், சர்வதேச அளவில் தனது அடையாளத்தை மேம்படுத்த மத்திய கிழக்கை தன்னுடன் சேர்த்துக்கொண்டு இந்தியா முன்னேறி வருவதையும் இது காட்டுகிறது.”
மத்திய கிழக்கில் இயல்பாகி வரும் சூழல்
காஸா போருக்கு முன்பும், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி செய்த காலத்திலும், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளைச் சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தின. செளதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இஸ்ரேல் உள்ளது. அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பான நிலையை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இஸ்ரேல் உடனான உறவை வலுப்படுத்திக் கொண்டு அரபு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியது.
“இந்தியா ஒரு சமநிலையான கொள்கையை ஏற்றுக்கொண்டது. இஸ்ரேலுடன் வெளிப்படையாக உறவுகளைக் கொண்டிருந்தது. ஆபிரகாம் ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் பயனளித்தன” என்று பேராசிரியர் ரஹ்மான் கூறுகிறார்.
“தற்போது, காஸா போரின் காரணமாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம், தடம் புரண்டது. ஆனால் இது மிக முக்கியமான ஒப்பந்தம். இந்தியா இஸ்ரேல் பக்கமும் நிற்கிறது. அதேநேரம் மத்திய கிழக்கின் அரபு நாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்டியது. இது இந்தியா ஒரு எதார்த்தமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதைக் காட்டுகிறது” என்கிறார் பேராசிரியர் ராவ்.
பாதுகாப்பு மற்றும் ஆதரவு
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அரபு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரபு நாடுகளுடனும் இந்தியா நடைமுறை உறவுகளைப் பேணுகிறது.
பேராசிரியர் ரஹ்மான், “இன்று உலக அளவில் சுற்றுச்சூழல், பயங்கரவாதம், பாதுகாப்பு போன்ற பல பொதுவான சவால்கள் உள்ளன. பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற அரபு நாடுகளுடன் இந்தியா பாதுகாப்பு தகவல்களைப் பரிமாறி வருகிறது” என்றார்.
பேராசிரியர் ராவ், “பயங்கரவாதம் என்பது ஒரு பொதுவான சவால். இந்தியா இஸ்ரேலுடன் உறவு வைத்திருக்கும் அதே வேளையில், அரபு நாடுகளுடன் நல்ல பாதுகாப்பு உறவுகளையும் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதில் இந்தியாவும் அதன் சொந்த நலன்களைக் கொண்டுள்ளது” என்கிறார்.
சர்வதேச அளவில் பலவீனமடைந்து வரும் பாகிஸ்தான்
கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச அளவில் பாகிஸ்தான் பலவீனமடைந்துவிட்டது. இப்போது மத்திய கிழக்கு மற்றும் இந்தியா இடையிலான உறவுகளில் பாகிஸ்தான் ஒரு தடையாக இல்லை.
“இந்தியா மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கி வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இப்போது இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் பாகிஸ்தான் இல்லாததுதான்” என்கிறார் பேராசிரியர் ரஹ்மான்.
ஸ்வஸ்தி ராவ் கூறுகையில், “உலகளவில் நிலவும் தற்போதைய சூழலில் இந்தியா மிகப்பெரிய சந்தையாகவும் நட்பு நாடாகவும் உள்ளது. அதனால்தான் அரபு நாடுகள் பாகிஸ்தானுக்கு பதிலாக தங்கள் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு