மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் 18ஆம் தேதியன்று, மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது நீல்கமல் என்ற பயணிகள் படகு.
அப்போது எதிரே வந்த இந்திய கடற்படையின் படகு நீல்கமலில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
முதல்வர் கூறியது என்ன?
சட்டமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விபத்து குறித்துப் பேசினார்.
“கப்பல் படையின் படகு ஒன்று 3.55 மணி அளவில், நீல்கமல் என்ற பயணிகள் படகில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய 101 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 13 நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஃபட்னாவிஸ் அறிவித்தார்.
கடற்படை தகவலின்படி, ஒரே மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது விபத்து இது. கடந்த நவம்பர் 22ஆம் தேதியன்று கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மீன்பிடிப் படகில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 2 நபர்கள் உயிரிழந்தனர்.
உயிருடன் மீட்கப்பட்ட நபர்களில் 56 நபர்கள் ஜே.என்.பி.டி. மருத்துவமனையிலும், 9 நபர்கள் நேவி டாக்யார்ட் மருத்துவமனையிலும், 9 நபர்கள் புனித ஜார்ஜ் மருத்துவமனையிலும், ஒருவர் அஸ்வினி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடரும் மீட்பு நடவடிக்கைகள்
அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கப்பல் படை, ஜே.என்.பி.டி., கடலோர காவல் படை, யெல்லோகேட் காவல் நிலைய காவலர்கள், உள்ளூர் மீன்பிடிப் படகுகள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடற்படை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “எஞ்சின் கோளாறு காரணமாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான படகு கட்டுப்பாட்டை இழந்தது. அதன் விளைவாக பயணிகள் கப்பலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் கப்பலும் நீரில் மூழ்கியது.
இதுவரை 13 நபர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்,” என்று கூறியுள்ளது.
இரங்கல் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தங்களின் இரங்கல் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் பதிவில் ராஜ்நாத் சிங், “மும்பை துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலர் இறந்திருக்கும் செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். கடற்படை அதிகாரிகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தங்கள் உறவுகளை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடற்கரை பாதுகாவலர்கள் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டிருந்தார் ராஜ்நாத் சிங்.
இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.