நெடுந்தீவுக்கான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

by 9vbzz1

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கடற்படையினரிடம் கோரியுள்ளார். 

  ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்  நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.  

அதன் போது, நெடுந்தீவிலிருந்து நோயாளர்களை கொண்டுவரும் சேவை ஹியூமெடிக்கா நிறுவனத்தின் அம்புலன்ஸ் படகுச்சேவை மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மாதாந்தம் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள். 

இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார். 

இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றமைiயும் குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் ஹியூமெடிக்கா நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

அதேவேளை கடந்த நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக படகு சேவைகள் இடம்பெறாத நிலையில் , நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளர்கள் விமானப்படையினரின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்