by wp_fhdn

சந்திரிகா காலத்தில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பணம் பெற்றோரின் பட்டியலும் விரைவில் வெளியாகும் : அமைச்சரவைப் பேச்சாளர் ! on Thursday, December 19, 2024

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் பலர் இலட்சக்கணக்கான நிதியைப் பெற்றிருக்கின்றனர். அது தொடர்பான ஆவணங்களையும் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1978ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதிய சட்டத்தின் கீழ் 5 கட்டங்களின் கீழ் நிதியை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதில் இறுதித் தொகுதியில் சபையால் தீர்மானிக்கப்படுபவர்களுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் உண்மையான தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை.

நாட்டிலுள்ள சாதாரண மக்கள் ஏதேனும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டால் அதற்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு கூட பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோரப்படும் நிதி கிடைப்பதுமில்லை. ஆனால், என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தைப் பார்க்கும்போது முற்றிலும் தலை கீழான நிலைமையே காணப்படுகிறது.

2005 – 2024 வரையான பட்டியலையே நான் முன்வைத்திருக்கிறேன். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் இவ்வாறு பலர் நிதியைப் பெற்றுள்ளனர். என்னால் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் தவிர, பிரதேச சபை உறுப்பினர்கள், தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுள்ளனர்.

இது உண்மையில் ஒழுக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். ஒரு சிலருக்கு சுமார் 100 இலட்சம் ரூபா என்ற பாரிய தொகை கூட கட்டம் கட்டமாக அன்றி நேரடியாக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செயற்பட்டிருக்கின்றனர். இது தொடர்பில் மேலும் பல ஆவணங்களை தேட வேண்டியுள்ளது. அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெகு விரைவில் இதனை விட தெளிவாக மேலும் பல ஆவணங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்