by smngrx01

எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமை குறித்த சான்றிதழ்கள் ஹன்சாட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ on Thursday, December 19, 2024

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வி தகைமை குறித்த சான்றிதழ்களை சபையில் காண்பித்த போதிலும், அவற்றை ஹன்சாட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பித்த பின்னர் அதன் உண்மை தன்மை குறித்து ஆராயப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19 ) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் ஏனைய எம்.பி.க்களுக்கு தமது தகைமைகளை நிரூபிப்பதில் சிக்கல் இல்லை. முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் போலியானதல்ல. ஆனால் அவரால் தற்போது அதனை நிரூபிக்க முடியாதுள்ளது. அதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். ஏனைய வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் பட்டங்கள் குறித்து எமது நாட்டுக்குள்ளேயே உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி என்ற பதவி கிடைக்கப் பெற்றிருந்தது. அவர் அரசாங்கத்தின் உயர் சட்டத்தரணியாக செயற்படும் போது மாத்திரமே அந்தப் பதவியைப் பயன்படுத்தினார். சட்டமா திணைக்களப்பணிகளிலிருந்து விலகிய பின்னர் அவர் அந்த பதவியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் 2009இல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட அஜித் பி பெரேரா தன்னை சிரேஷ்ட சட்டத்தரணி என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை நிரூபிக்குமாறு மாத்திரமே சவால் விடுக்கப்பட்டது. அவர் தனது பிறப்பு பதிவு சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில் சபை அமர்வின் போது அவர் சான்றிதழை காண்பித்திருந்த போதிலும், ஹன்சாட்டில் உள்வாங்குவதற்காக அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை. இன்று (நேற்று) காலையும் அவர் அதனை சமர்ப்பித்திருக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் தனது சான்றிதழை சமர்ப்பித்ததன் பின்னர் அதன் உண்மை தன்மை குறித்து ஆராயப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்