மோடி-அனுர கூறும் மனிதாபிமானம் என்ன?

by wp_fhdn

இலங்கை கடலை இந்திய மீனவர்களிற்கு தாரை வார்க்கும் ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டதான குற்றச்சாட்டினை டக்ளஸ் தேவானந்தா எதிர்கொண்டுள்ள நிலையில் அனுர அரசிடம் கேள்வி எழுப்பப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை – இந்தியா இடையே கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது. அதனடிப்படையில் செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன்.  

அதேவேளை கடற்றொழிராளர் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த விஜயத்தின்போது எட்டப்பட்டதாக தெரியவில்லை. அதேநேரம் மனிதாபிமான அடிப்படையில் விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது. 

அதாவது இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடியாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே அந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்