ஒரே நாடு ஒரே தேர்தல்: மசோதாக்களில் என்ன இருக்கிறது? எளிமையான விளக்கம்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மசோதாக்களில் என்ன இருக்கிறது? எளிமையான விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கக் கூடியது. பாஜக இதை அண்மைக் காலமாக அழுத்தமாக வலியுறுத்தி வருகிறது.

செவ்வாய்க்கிழமை (டிச. 17) இதுதொடர்பான மசோதாக்களை, மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் யூனியன் பிரதேச சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மசோதாக்கள் சட்டமாகும் பட்சத்தில், மக்களவைக்கும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் எவ்வாறு தேர்தல் நடத்தப்படும்? பதவிக் காலம் முடிவடையும் முன்பே ஆட்சி கவிழ்ந்து, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும்?

மக்களவைத் தேர்தலுடன் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும்? இவை குறித்து இந்த மசோதாக்களில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த மசோதாக்கள் தற்போதுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து மட்டுமே பேசுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், மோதி அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது.

கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் இந்தக் குழு தனது அறிக்கையை அளித்தது. அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தாக்கல் செய்த மசோதாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி நடத்தப்படும்?

ஒரே நாடு, ஒரே தேர்தல், ராம்நாத் கோவிந்த், நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், X/President of India

படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளித்தது

அரசமைப்பு சட்டப்பிரிவு 82(A) எனும் புதிய பிரிவு, இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கீழ்காணும் ஏழு புதிய ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,

  • பொதுத்தேர்தல் முடிவுற்ற பிறகு மக்களவைக் கூட்டம் கூடும் முதல் நாளன்று, இந்த மாற்றங்களை குடியரசுத் தலைவர் நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் பொது அறிவிப்பாணையை வெளியிடலாம். அதன்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியும். இது, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் தேதி என அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தேதிக்குப் பின்னர், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற எந்த மாநிலத்திலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே சட்டமன்றத்தின் ஆட்சிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வரும். அதேபோன்று, மக்களவைத் தேர்தல் எப்போது நடந்திருந்தாலும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்காக, அதன் ஆட்சிக் காலமும் முடிவுக்கு வரும். அதாவது, மாநில சட்டமன்றங்கள் மற்றும் மக்களவை இரண்டின் ஆட்சிக்காலமும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும்.
  • இதன்பிறகு, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

  • இங்கு ‘ஒரே தேர்தல்’ (Simultaneous election) என்பது, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதைக் குறிக்கிறது.
  • மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து எந்தவொரு மாநிலத்திற்காவது சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கருதினால், அந்த மாநிலத்திற்கு பின்னர் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து அதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கலாம்.
  • அப்படி தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையும், மக்களவை ஆட்சிக்காலம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதே தேதியில்தான் முடிவுக்கு வரும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலை அறிவிக்கும் நேரத்திலேயே, அந்த மாநிலத்தின் ஆட்சிக்காலம் எப்போது முடிவுக்கு வரும் என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கலாம்.

மக்களவை கலைக்கப்பட்டால் என்ன நடக்கும்?

அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு, ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாவை செவ்வாய்க் கிழமை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்

மக்களவை கலைக்கப்பட்டால், என்ன நடக்கும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 83 (பிரிவு 2)-க்குப் பிறகு கூடுதலாகக் கீழ்காணும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறும் தேதியிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுக் காலம்தான் அதன் முழு பதவிக் காலமாகக் குறிப்பிடப்படலாம்.
  • முழு ஆட்சிக்காலமும் முடிவுறுவதற்கு முன்னதாகவே மக்களவை கலைக்கப்படும் பட்சத்தில், அவை கலைக்கப்பட்ட தேதிக்கும், அதன் முழு ஆட்சிக் காலத்திற்கும் (முதல் கூட்டம் நடைபெற்ற தேதியில் இருந்து வரும் ஐந்து ஆண்டுகள்) இடைப்பட்ட காலம்தான், அடுத்து தேர்தல் நடைபெற்று ஆட்சிக்கு வரும் புதிய மக்களவையின் ஆட்சிக்காலமாகும். உதாரணமாக, மக்களவை இரண்டரை ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். புதிய மக்களவையின் ஆட்சிக்காலம், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும்.
  • புதிய மக்களவை ஏற்கெனவே கலைக்கப்பட்ட அவையின் தொடர்ச்சியாக இருக்காது.
  • இப்படி அவை கலைக்கப்பட்டு புதிய மக்களவையைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்தல் இடைக்கால தேர்தலாக கருதப்படும். இதன் ஆட்சிக்காலம் முடிந்து நடைபெறும் தேர்தல், பொதுத் தேர்தலாகக் கருதப்படலாம்.

சட்டமன்றம் கலைக்கப்பட்டால் என்ன ஆகும்?

ஒரே நாடு, ஒரே தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதும் மசோதாக்களில் விளக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரையறைகளைப் போலவே, சட்டமன்றங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களவைக்கு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், சட்டமன்றத்திற்கும் பொருந்தும் வகையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 172இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மற்றொரு சட்ட மசோதா என்ன?

யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்திருத்த மசோதா, 2024 (Bill no. 276) என்ற மற்றொரு மசோதாவும் செவ்வாய்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, யூனியன் பிரதேச அரசுகள் சட்டம், 1963இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம் 1991, ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டம் 2019 ஆகியவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கான ஆட்சிக்காலம், முழு ஆட்சிக்காலம் முடிவுறுவதற்கு முன்பு கலைக்கப்பட்டால் என்ன நடக்கும், புதிய சட்டமன்றத்தின் ஆட்சிக்காலம் என்ன என்பது குறித்த வரையறைகள் இந்தத் திருத்தங்களில் விளக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்களும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைப் போலவே உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு