சமூக ஊடக பிரபலம் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தமக்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 16ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு அடுத்த வருடம்(2025) பெப்ரவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனிடையே அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செத்துள்ளார்.
வழக்கு இன்றைய தினம் (18) கட்டானை வழங்குவது தொடர்பில் யாழ் மாவட்ட நிதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சத்தியமூர்த்தி எதிராக இராமநாதன் அர்ச்சுனாவால் பகிரப்பட்ட விடயங்கள் மற்றும் யாழ் வைத்தியசாலையில் அத்து மீறி நுழைந்து நடந்துகொண்ட விடயம் தொடர்பில் முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி என்பவற்றை சுட்டிக்காட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி இனிவருங்காலங்களில் சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான விடயங்களை பரப்ப கூடாது என உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.