நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு அவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் கடந்த 09ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பனம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.
மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவனங்களை பொறுபுக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார்.
இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.