அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமித் ஷா தனது உரையின்போது, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்று அமித்ஷா கூறினார்.

“இது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா பேசிய முழு உரையின் இந்தச் சிறிய பகுதி குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“மனுஸ்மிருதியை நம்புவோருக்கு அம்பேத்கருடன் நிச்சயம் பிரச்னை இருக்கும்” என்று சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகலில், பிரதமர் நரேந்திர மோதியும் அமித்ஷாவின் பேச்சு குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்த இருண்ட அத்தியாயத்தை அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். அம்பேத்கருக்கு எதிராக இழைக்கப்பட்ட பாவங்களின் நீண்ட பட்டியல் காங்கிரஸிடம் உள்ளது. அதில் அவரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்ததும் அடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன சொன்னார்?

அமித் ஷா தனது உரையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

அமித் ஷா தனது உரையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீம்ராவ் அம்பேத்கர், 1947 முதல் 1951 வரை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார்.

நீங்கள் இப்போது அம்பேத்கரின் பெயரை நூறு முறை சொன்னாலும், உங்களுக்கு அவர் மீதுள்ள உண்மையான உணர்வுகளையும் நீங்கள் பேச வேண்டும் என்று காங்கிரஸை குறிப்பிட்டு அமித் ஷா கூறினார்.

“நாட்டின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் ராஜினாமா செய்தார்?” என்று குறிப்பிட்ட அவர், “பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடியினரை அரசு நடத்திய விதம் குறித்து அவர் பலமுறை அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் வெளியுறவுக் கொள்கை மற்றும் 370வது பிரிவிலும் அம்பேத்கர் உடன்படவில்லை.

அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார்” என்றார் அமித் ஷா.

அம்பேத்கரின் கொள்கைகளை எதிர்க்கும் அதேவேளையில் வாக்குகளுக்காக அம்பேத்கரின் பெயரைச் சொல்வது குறித்தும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

அம்பேத்கரின் கொள்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் வாக்குகளுக்காக அம்பேத்கரின் பெயரைச் சொல்வது குறித்தும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா தெரிவித்த இந்த கருத்துக்குப் பிறகு, அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமித் ஷா தெரிவித்த இந்த கருத்துக்குப் பிறகு, அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“பாபா சாகேப் அம்பேத்கரை இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததன் மூலம், மூவர்ணக் கொடிக்கு, பாஜக/ ஆர்எஸ்எஸ் எதிரானது என்று மீண்டும் நிரூபித்துள்ளது. அவர்களின் முன்னோர்கள் அசோக சக்கரத்தை எதிர்த்தனர். சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடக்கத்தில் இருந்தே, அரசியலமைப்புக்கு பதிலாக மனுஸ்மிருதியை அமல்படுத்த விரும்பினர்” என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

“அம்பேத்கர் மனுஸ்மிருதிக்கு எதிரானவர், அதனால்தான் அவர் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது” என்றும் கார்கே கூறியுள்ளார்.

“என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களைப் பொறுத்தவரை, டாக்டர்.பாபா சாகேப் அம்பேத்கர் கடவுளுக்குச் சற்றும் குறைந்தவர் அல்ல. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின் தூதுவரான அம்பேத்கர் எப்போதும் அப்படியே இருப்பார்.

மோதி அரசின் அமைச்சர்கள் இதைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கும் தொனியில் கார்கே பதிவிட்டுள்ளார்.

‘உரையை முழுவதும் கேளுங்கள்…’

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பல காங்கிரஸ் தலைவர்களின் சமூக ஊடக பதிவுகளுக்குப் பிறகு, அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்தது. மேலும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள, அமித் ஷா பேசிய உரையின் காணொளி முழுமையடையாதது என்றும் பாஜக கூறியுள்ளது.

அமித் ஷா உரையின் நீண்ட பகுதியை வெளியிட்டு, ‘அம்பேத்கர் பற்றி நேரு என்ன சொன்னார்?’ என அமித் ஷா காங்கிரஸுக்கு ஒரு கண்ணாடியைக் காட்டியுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ள உரையின் பகுதி முழுமையடையாதது எனவும் மக்கள் முழு உரையின் காணொளியையும் பார்க்க வேண்டும் எனவும் மற்ற கட்சித் தலைவர்களும் கூறியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியாவும் அமித் ஷா உரையின் காணொளியைப் பகிர்ந்து காங்கிரஸை தாக்கிப் பேசியுள்ளார்.

“காங்கிரஸின் நம்பகத்தன்மை பூஜ்ஜியமாகிவிட்டது. அதனால்தான், காங்கிரஸ் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முழு உரையும் பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தின் மீது காங்கிரஸ் கொண்டுள்ள வெறுப்பை அம்பலப்படுத்துகிறது, அந்த முழு உரையையும் கேளுங்கள்” என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் பேச்சு ‘மன்னிக்க முடியாதது’

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வதேராவும் அரசாங்கத்தை குறிவைத்து பேசினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மக்களவையில் பிரதமரின் பேச்சால் சலிப்படைந்ததாக, காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதையொட்டி, மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் நீண்ட உரை நிகழ்த்தினார்.

நரேந்திர மோதியின் உரை முழுவதும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸின் நீண்ட கால ஆட்சியைக் குறிவைத்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் 50 நிமிடம் நீடித்த அவரது உரையில், காங்கிரஸின் பெயரைக் குறிப்பிடாமல் 55 ஆண்டுக் காலமாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நீடித்ததாக, பிரதமர் மோதி கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதற்கு முன், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாவர்க்கரின் பெயரை எடுத்துக்கொண்டு, அரசியலமைப்பு மீதான அவரது கருத்து குறித்து கேள்விகளை எழுப்பினார். அதே நேரத்தில் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்த அவரது சகோதரியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தியும் அரசாங்கத்தைக் குறிவைத்துப் பேசினார்.

“பிரதமர் எந்தவொரு புதிய விஷயத்தையும் சொல்லவில்லை, அவரது உரை எங்களை முழுவதுமாக சலிப்படையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளியில் கணித வகுப்பில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன். பிரதமர் எதாவது புதிதாகவும், நன்றாகவும் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பதிலாக வெற்று வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார். ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லை என்று அவர் பேசினால், அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும்” என்று பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டினார்.

அமித் ஷாவின் உரையில் அம்பேத்கர் குறித்த கருத்து காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது

பட மூலாதாரம், DHANANJAY KEER

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மோதியின் உரையை, மிக நீண்ட பேச்சு என்று குறிப்பிட்டார். மேலும், முழக்கங்களில் யார் சிறந்தவர்கள் என்பதை, ஊடகவியலாளர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறினார். “மோதி அவரது உரையில் குறிப்பிட்ட 11 முழக்கங்களை நாங்கள் இன்று கேட்டோம்” என்றும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் நாகினாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர், “அமித் ஷாவின் கருத்து, அம்பேத்கரின் போராட்டத்தை அவமதிக்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார்.

“உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பையும், சமூக நீதிக்கான அவரது போராட்டத்தையும் அவமதிப்பதாக உள்ளது. பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ‘பேஷன்’ இல்லை.

மாறாக, அவரது பெயர் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் கிடைக்கக் காரணமாயிருந்து, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சமூக மாற்றத்திற்கான புரட்சியின் சின்னம்,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர்களின் இந்தக் கருத்து, உணர்வின்மையின் அடையாளம் மட்டுமல்ல, சமூக ஒற்றுமை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அவமரியாதையின் அடையாளம் என்றும் சந்திரசேகர் கூறியுள்ளார்.

அம்பேத்கர் சர்ச்சை, அமித் ஷா விளக்கம்

பட மூலாதாரம், BJP

படக்குறிப்பு, அமித் ஷா, இந்திய உள்துறை அமைச்சர்

அமித் ஷா விளக்கம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், புதன்கிழமை மாலை இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

“காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மைகளை திரித்து கருத்துகளை முன்வைத்து வருகிறது, இது கண்டிக்கத்தக்கது” என்று அமித் ஷா கூறினார்.

“நாடாளுமன்றம் போன்ற நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக மன்றத்தில் விவாதம் நடைபெறும் போது, அது உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நான் வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன்” என்றார் அவர்.

“இதற்கு முன்பு அவர்கள் நரேந்திர மோதியின் கருத்துகளை திரித்து கூறினர். தேர்தலின் போது, எனது அறிக்கைகளை செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி திரித்தனர். அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்க முடியாத கட்சியைச் சேர்ந்தவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம் “என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.