on Wednesday, December 18, 2024
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மாவட்ட பொலிஸ் தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து செய்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை, மரைக்காயர்பட்டினம், களிமண்குண்டு, குந்துகால் உள்ளிட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்கள், கஞ்சா, மெத்தபெட்டன் உள்ளிட்ட பொருட்கள் கடல் வழியாக நாட்டுப் படகில் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் ராஜா முகமது வீட்டை சுற்றிவளைத்தனர்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் பின்புறம் சாக்கு மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட சுமார் 450 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த தனி பிரிவு போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகரிடம் ஒப்படைத்ததுடன் . பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.