வீதி மின் விளக்கு கம்பத்தில் படர்ந்திருந்த கொடியினை உண்ட பசு மாடொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் , தட்டாதெரு சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் தாவர கொடி ஒன்று படர்ந்திருந்தது, அதனை அப்பகுதியில் வந்த பசுமாடு ஒன்று உணவாக உட்கொண்ட போது , பசுமாடு மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.
கம்பத்தில் படர்ந்திருந்த கொடி , மின் வடத்துடன் தொடுகையுற்று காணப்பட்டமையால் , கொடியில் மின்சாரம் கடத்தப்பட்டு மாட்டினை மின்சாரம் தாக்கியுள்ளது.
இது தொடர்பில் மின்சார சபையினருக்கு அறிவித்ததை , அடுத்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சாரத்தை துண்டித்து , கொடியினை அகற்றி இருந்தனர்
சம்பவ இடத்தில் கூடி இருந்த மக்கள் , பசுமாட்டுக்கு மின் சாரம் தாக்கிய போன்று பாதசாரிகள் யாருக்காவது மின் சாரம் தாக்கி இருந்தா ? அவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் , உயிரிழந்த மாட்டுக்கு நீதி கோரியும் மின்சார சபை ஊழியர்களை மறித்து வைத்திருந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என கோரி இருந்தனர்.
அதற்கு மின்சார சபை ஊழியர்கள் . தாம் அவசர சேவை பிரிவை சேர்ந்தவர்கள் , எம்மால் அதிக நேரம் ஓர் இடத்தில் தரித்து நிற்க முடியாது. அதுமட்டும் அன்றி இந்த விபத்துக்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமம் இல்லை. வீதியில் பொருத்தப்படும் மின் விளக்குகள் , வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபையினுடைய பொறுப்பில் உள்ளது. கொடிகள் படர்ந்து இருந்தால் அவற்றை அகற்ற வேண்டியது அவர்களே என கூறி, அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
அதனை அடுத்து , பசு மாட்டின் உயிரிழப்புக்கு நீதி கோரி சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.