யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்

by adminDev


யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் , அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்புச் செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இத் தீர்மானமானது மாவட்டத்தின் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும். பிள்ளைகளின் நலன்கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் அமைவிடங்கள், வகுப்பறைக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பிலும் நிறுவன உரிமையாளர்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 

ஆகவே தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் / நிர்வாகிகள் இதற்கான சரியான பொறிமுறையினை மேற்கொண்டு போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பொறிமுறையினை தாமாக நடைமுறைப்படுத்த தவறும் தனியார் கல்வி நிறுவனங்கள்; தொடர்பில் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ப்படும்.

மேலும் பிரதேச செயலாளர்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தமது பிரதேசங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களை தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ் மாவட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்