மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா?

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரிஸ்பேனில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

கடைசி நாளான இன்று பிற்பகலுக்கு பின் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 3வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்டின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர் பும்ரா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடைசி நாளில் என்ன நடந்தது?

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 260 ரன்கள் சேர்த்து பாலோ-ஆனைத் தவிர்த்தது. 185 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், 2.1 ஓவர்களில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்டநேரமாகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. மைதானத்தில் வெளிச்சமும் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை முடிப்பதாக நடுவர்கள் அறிவித்தனர்.

கடைசி நாளான இன்று வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 8 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் வியூகம் என்ன?

இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய பின், விரைவாக ஒரு பெரிய ஸ்கோரை அடித்து பெரிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். கடைசி நாளில் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதிரடியாக பேட் செய்து, ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ஆடினர்.

புதிய பந்தில் ஆடுகளம் வேறுவிதமாக செயல்படும் என்பதைத் தெரிந்தும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் பேட் செய்தனர். 18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மீதமுள்ள 54 ஓவர்களில் 275 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்திய அணியை சுருட்ட ஆஸ்திரேலிய அணி வியூகம் அமைத்தது. ஆனால், மழை காரணமாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது.

அடுத்ததாக வரும் 26-ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

‘பாக்ஸிங் டே டெஸ்டை எதிர்பார்க்கிறோம்’

போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “போட்டியின் இடையே மழையின் இடையூறுகள் இருந்தன. மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் மெல்போர்ன் டெஸ்டை எதிர்கொள்வோம். அணியில் ஏதாவது ஒருவீரர் நிலைத்து நின்று, ஆட்டத்தை கொண்டு செல்ல விரும்பினோம்.

ஜடேஜா, ராகுல் இருவரும் பொறுப்புடன் பேட் செய்தனர். பந்துவீச்சில் பும்ரா, ஆகாஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆகாஷ் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் என்றாலும், பல விஷயங்களை ஆகாஷ் கற்றுக்கொடுத்தார். மற்ற 2 பந்துவீச்சாளர்கள் அவருக்கு துணையாக இருந்து அவருக்கு உதவி செய்தனர்” எனத் தெரிவித்தார்

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இரு அணிகளின் நிலையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இந்திய அணி 17 போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி ,2 டிராவுடன் 114 புள்ளிகளுடன் 55.89 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 106 புள்ளிகளுடன், 58.89 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் 76 புள்ளிகளுடன், 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 3வது முறையாக விளையாட அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60க்கு மேல் உயரும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அந்த அணியால் பைனலுக்கு தகுதி பெற இயலாது.

இந்திய அணி அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். அதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை இலங்கை டிரா செய்தால் இந்திய அணி பைனலுக்குச் செல்லும். இந்திய அணி கடைசி இரு டெஸ்ட்களிலும் தோற்றால் பைனல் வாய்ப்பு சாத்தியமில்லை.

ஒருவேளை கடைசி இரு டெஸ்ட்களில் இந்திய அணி ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோல்வி அடைந்தால். இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை 2-0 என தோற்கடிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால், இந்திய அணி பைனலுக்குச் செல்லும்.

தென் ஆப்பிரிக்க அணி பைனலுக்குள் செல்ல ஒரு வெற்றி மட்டுமே தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் தென் ஆப்பிரிக்கா பைனலுக்குச் சென்றுவிடும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை இழந்தால், இந்திய அணி பைனலுக்குள் செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டும் பெற்றால் போதுமானது. இலங்கை-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு பைனலில் ஆடும் 2வது அணி யார் என்பதை முடிவு செய்யும்.

ஆதலால், இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால்கூட பைனலுக்கு முன்னேறலாம். ஆனால், அதற்கு பிற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியிருக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.