நீட், ஐஐடி: கோட்டா நகரில் வீழ்ந்து வரும் பயிற்சி மையங்கள் – மாணவர்கள் வருகை குறைந்தது ஏன்?
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
சோனு கௌதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு மாடிகள் கொண்ட விடுதியின் முதல் தளத்தில் உள்ள அறையில் வசித்து வருகிறார். இவர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்.
புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் எங்கும் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு கட்டிலில் அவர் அமர்ந்திருக்கிறார். மாதம் ரூ.2,500 வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த அறையில் சோனு தனியாக வசித்து வருகிறார். அவரது பெரும்பாலான நண்பர்கள் ராஜஸ்தானின் கோட்டா நகரை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஒரு காலத்தில், அவர் தங்கியிருந்த விடுதி மாணவர்களால் பரபரப்பாக இருந்தது. இப்போது அந்த விடுதி கிட்டத்தட்ட காலியாக உள்ளது.
“இப்போது இங்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பயிற்சி வகுப்புகளில் கூட முன்பைப் போல் மாணவர்களை பார்ப்பதில்லை. இரண்டு வருடமாக நான் என் வீட்டுக்கு செல்லவில்லை. வீட்டுக்குப் போனால் ஏன் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று ஊர் மக்கள் கேட்பார்கள்” என்கிறார் சோனு.
ஹிந்தி மீடியத்தில் படித்த சோனுவுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி எடுப்பது என்பது சவாலான விஷயமாக உள்ளது. மேலும், நகரத்தின் மாறிவரும் சூழலும் பிரச்னையாக உள்ளது.
இப்போது பேசுவதற்கு ஆளில்லாததால், படிப்பதிலும் தனக்குத்தானே பேசுவதிலும் செலவிடுகிறார் சோனு. விடுதியில் பாதிக்கும் மேற்பட்ட அறைகள் பூட்டியே கிடக்கின்றன.
இந்த நிலை சோனு கௌதமின் விடுதியில் மட்டும் இல்லை. நகரத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் 25 ஆயிரம் மாணவர்களுக்காக நிறுவப்பட்ட ஒட்டுமொத்த ‘கோரல் பார்க் சிட்டி’யும் இந்த வெறுமையின் தாக்கத்தை அனுபவித்து வருகிறது.
இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்காக 350க்கும் மேற்பட்ட விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோட்டா நகரை வெற்றிக் கனவுகளுடனும், உலகை வெல்லும் ஆர்வத்துடனும், முன்னேறும் நம்பிக்கையுடனும் அடைகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில், சுமார் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட கோட்டா நகரில் பல பகுதிகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குத் தயாராகும் மாணவர்கள் எங்கு பார்த்தாலும் காணப்பட்டனர்.
ஆனால், இப்போது கோட்டா நகரின் பிரகாசம் மெல்ல மெல்ல மங்கி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோட்டாவின் கோச்சிங் தொழில், இப்போது அதன் அடையாளத்தை இழந்துவருகிறது.
மாணவர்கள் பரபரப்பாக இயங்கி வந்த விடுதிகளின் அறைகள் பூட்டப்பட்டு காலியாக கிடக்கின்றன.
இதனால் தங்கும் விடுதி தொழில் மட்டுமின்றி நகரின் மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறையும் போது, அது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐ.ஐ.டி., நீட் பயிற்சி என்ற பெயரில் மக்கள் மனதில் முதலில் இடம்பிடிக்கும் கோட்டா நகரில் ஏன் இப்படி ஒரு நிலை? ஏன் குறைவான மாணவர்களே பயிற்சிக்கு வருகிறார்கள்? மேலும் இந்த நெருக்கடியை கோட்டா நகரால் சமாளிக்க முடியுமா?
மாணவர்களின் வருகை எவ்வளவு குறைந்துள்ளது?
1990களில், வி.கே. பன்சால் கோட்டாவின் விக்யான் நகரில் இருந்து பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார். சில மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், விரைவிலேயே பெரியளவில் முன்னேற்றம் அடைந்தது.
அதன் பிறகு, பல பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, கோட்டா நகரை பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை தயார் செய்யும் மையமாக மாற்றினர்.
தேசிய தேர்வு முகமையின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில், சுமார் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வையும், சுமார் 12 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வையும் எழுதினர்.
கடந்த இருபது ஆண்டுகளில் கோட்டா நகருக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 25 முதல் 30 சதவிகிதம் வரை குறைந்திருப்பது இதுவே முதல் முறை என்று, கோட்டா விடுதி சங்கத் தலைவர் நவீன் மிட்டல் கூறுகிறார்.
இகோர்ஸ் (eCourse) இன் நிறுவனர் மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக கோட்டா பயிற்சித் துறையில் பணியாற்றிய டாக்டர் சோம்விர் தயலும் இதையே கூறுகிறார்.
அவர் கூறுகையில், “கொரோனாவுக்குப் பிறகு, எதிர்பாராத அளவுக்கு கோட்டா நகருக்கு மாணவர்கள் வந்தனர். ஆனால் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு சுமார் ஒன்று அல்லது 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே கோட்டா நகருக்கு வந்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.
விடுதிகளின் நிலைமை
கோட்டா நகரில் எங்கு பார்த்தாலும், பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகள் தெரியும். தெற்கு கோட்டாவின் விக்யான் நகர், மகாவீர் நகர், இந்திரா காலனி, ராஜீவ் நகர், தல்வாண்டி மற்றும் வடக்கு கோட்டாவின் கோரல் சிட்டி ஆகியவை இத்தகைய மாணவர்களின் கோட்டைகளாகும்.
ஆனால், இப்போது இந்தப் பகுதிகளில் விடுதிகள் அல்லது வீடுகளுக்கு வெளியே எல்லா இடங்களிலும் ‘டூ லெட்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
வெளியே பளபளக்கும் பல கட்டடங்களுக்குள் அறைகளுக்கு வெளியே பூட்டுகள் போடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், குறைந்த வாடகை மட்டுமே கொடுக்கப்படுவதால் பல விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
“சுமார் 30 சதவிகித மாணவர்களின் பற்றாக்குறையால் எங்கள் தொழிலின் வருவாய் ரூ.6,000 கோடியில் இருந்து ரூ.3,000 கோடியாக குறைந்துள்ளது’ என்கிறார் நவீன் மிட்டல்.
விக்யான் நகரில் உள்ள உணவகத்துடன் சேர்ந்து தங்கும் விடுதியை நடத்தி வரும் சந்தீப் ஜெயின் கூறும்போது, ”கோட்டாவில் உள்ள மிகப் பழமையான பயிற்சி வகுப்புகள் உள்ள பகுதி இது. இங்கிருந்துதான் பன்சால் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார்” என்றார்.
கோட்டாவில் வசிக்கும் தீபக் கோஹ்லியின் நிலையும் இப்படித்தான் உள்ளது. இவர், கடந்த 25 ஆண்டுகளாக விடுதித் தொழிலுடன் தொடர்புடையவர். ராஜீவ் நகரில் 50 அறைகள் கொண்ட தங்கும் விடுதியும், விக்யான் நகரில் 20 அறைகள் கொண்ட தங்கும் விடுதியும், கோரல் சிட்டியில் 50 அறைகள் கொண்ட தங்கும் விடுதியும் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், “ஒரு வருடத்திற்கு முன்பு ராஜீவ் நகரில் ஒரு அறைக்கு வாடகையாக ரூ.15,000 வசூலித்தோம், இன்று ரூ.8,000 ஆக குறைந்துள்ளது, அதேசமயம் விக்யான் நகரில் ரூ.5,000 வசூலித்தோம். இப்போதும் ரூ.3,000க்கு வாடகைக்கு விட்டாலும் யாரும் வருவதில்லை. எங்கள் விடுதிகள் அனைத்தும் பாதிக்கு மேல் காலியாக உள்ளன” என்றார்.
கோரல் சிட்டியில் தங்கும் விடுதியை நடத்தி வரும் முகுல் சர்மாவும் கவலையடைந்துள்ளதாக தெரிகிறது. 2009-ஆம் ஆண்டு முதல் விடுதித் தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், இங்கு 75 அறைகள் கொண்ட விடுதியை நடத்தி வருகிறார்.
”விடுதி முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அதில் பாதிக்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. விடுதி கட்டுவதற்கு சுமார் 4 கோடி ரூபாய் செலவானது. அதன்படி, மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் தற்போது ஒரு லட்ச ரூபாயை கூட சேமிக்க முடியாத நிலை உள்ளது” என்றார் சர்மா.
“மாணவர்கள் குறைவாக வருவதால் விடுதி கட்டணம் குறைந்துள்ளது. முன்பு அவர்களிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வசூலித்தோம், தற்போது, 8,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறோம். அதே நேரத்தில், பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடன் தவணையை திருப்பிச் செலுத்துவதில் சிரமமாக உள்ளது.” என்றார் அவர்.
பொருளாதாரத்தின் மீதான தாக்கம்
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பயிற்சி மையங்களுக்கு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது.
கோட்டாவில் பழைய சைக்கிள்களை வாங்கி விற்பது பெரிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் இந்நகருக்கு வந்ததும் முதலில் செய்வது தங்களுக்கு ஒரு சைக்கிள் ஏற்பாடு செய்வதுதான்.
விக்யான் நகரில் உள்ள ராஜு சைக்கிள் ஸ்டோரின் மேலாளர் தினேஷ் குமார் பவ்னானி கூறுகையில், “புதிய சைக்கிள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், பழைய சைக்கிளுக்கு 2,500 முதல் 3 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பதால், பெரும்பாலான மாணவர்கள் பழைய சைக்கிள்களை வாங்குகின்றனர்” என்றார்.
“முன்பெல்லாம் கடையில் நான்கு பேர் வேலை செய்தோம், இப்போது ஒருவரின் செலவுக்குக் கூட சிரமமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த தொழிலே நின்றுவிடும்” என்கிறார்.
20 ஆண்டுகளாக விக்யான் நகரில் தங்கும் விடுதியுடன் சேர்ந்து உணவகம் நடத்தி வரும் சந்தீப் ஜெயின், இந்த கடினமான சூழ்நிலையிலும் போராடி வருகிறார்.
“முன்பு 500 முதல் 700 மாணவர்கள் இங்கு சாப்பிடுவார்கள். ஆனால், தற்போது இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. முன்பு 20 பேர் இங்கு வேலை செய்துவந்த நிலையில், இந்த ஆண்டு ஐந்து பேரை மட்டுமே வைத்து நிர்வகிக்க வேண்டியுள்ளது.” என்றார்.
மஹாவீர் நகரில் டீக்கடை நடத்தி வரும் முரளிதர் யாதவ் கூறுகையில், “முன்பு கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நிமிடம் கூட பேச நேரம் கிடைக்காது. தினமும் 80 கிலோ பால் விற்பனை செய்தோம், இன்று 40 கிலோ பாலை கூட விற்க முடியவில்லை” என்கிறார்.
பயிற்சி மையங்களின் மற்றொரு கோட்டையான கோரல் பார்க் சிட்டியில் ஆட்டோ ஓட்டும் பிரேம் சிங் கூறுகையில், ”முன்பெல்லாம் தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தோம், இப்போது 500 ரூபாய் சம்பாதிப்பது கூட கடினமாக உள்ளது” என தெரிவித்தார்.
“இங்கு எங்களின் தொழில் மாணவர்களால் தான் நடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால் எங்கள் ஆட்டோவை கடன் கொடுத்தவர்கள் எடுத்துச் சென்று விடுவார்கள்” என்கிறார் பிரேம் சிங்.
தெற்கு கோட்டா துணை மேயர் பவன் மீனாவும் நகரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
“ஒட்டுமொத்த கோட்டா நகரும் மாணவர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த மாணவர்கள் நகரத்தின் பொருளாதாரத்திற்கு நிறைய பங்களிக்கிறார்கள்.” என்றார் அவர்.
“மாநகராட்சி அளவில், மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், மேலும் குழந்தைகள் நகரத்திற்கு வரும் வகையில், குடிநீர், மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தி வருகிறோம்,” என்கிறார் மீனா.
கோட்டா நகரின் மீது ஏமாற்றம் ஏன்?
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியளவில் கோட்டாவை விட்டு வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
கடந்த 2023-ஆம் ஆண்டு கோட்டா நகரில் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர்கள் இவ்வளவு பெரியளவில் இத்தகைய செயலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
பிகாரில் வசிக்கும் ஆதித்ய குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது வகுப்பைச் சேர்ந்த 10 மாணவர்களுடன் கோட்டாவுக்குச் சென்றுள்ளார்.
ஐஐடியில் சேர வேண்டும் என்பதே அவருடைய இலக்காக இருந்தது. ஆனால், இப்போது அவரும் அவரது நண்பர்கள் அனைவரும் பாட்னா அல்லது பிகாரின் பிற நகரங்களுக்குத் திரும்பி வந்து அங்கேயே தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
பாட்னாவில் உள்ள பிபிசி நிருபர் சிது திவாரியிடம் பேசிய ஆதித்யா, “2024 -ஆம் ஆண்டில், நாங்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டோம். தற்கொலை குறித்த தொடர் செய்திகளால் நாங்கள் கவலையடைந்தோம்.” என்கிறார்.
கோட்டாவிலிருந்து அவருடன் திரும்பிய சாகேத் கூறுகையில், “நீங்கள் யாருடன் அமர்ந்து உணவு உண்டீர்களோ, அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்திகள் வந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது” என்றார்.
இந்த மாணவர்களுக்கு பாட்னாவில் பயிற்சி அளித்து வரும் டாக்டர் குமார்யா மனோஜ், “90களில் பீகார் சூழல் மோசமாக இருந்தது, அதன் காரணமாகவே கோட்டா நகரம் பயிற்சி வகுப்புகளின் மையமாக உருவானது” என்கிறார்.
“பிகாரில் முன்பு குழந்தைகளை மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கடத்தலில் இருந்து காப்பாற்ற, ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கோட்டாவுக்கு அனுப்புவார்கள்.”
“தற்போது பிகாரின் சூழல் நன்றாக உள்ளது. நாட்டின் பெரிய பயிற்சி நிறுவனங்கள் பாட்னாவில் தங்கள் மையங்களைத் திறந்துள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோட்டாவுக்கு அனுப்பாமல், பாட்னாவிலேயே படிக்க வைக்க விரும்புகிறார்கள். பிகாரிலிருந்து கோட்டா செல்வதற்கு 26 மணி நேரம் ஆகும். அதேசமயம், பாட்னாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஓரிரு மணி நேரத்தில் சந்திக்க முடிகிறது” என தெரிவித்தார் குமார்யா மனோஜ்.
விதிகளில் மாற்றமும் ஒரு காரணமா?
கோட்டாவில் அதிகரித்து வரும் தற்கொலை மற்றும் படிப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்க, கல்வி அமைச்சகம் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் பயிற்சி மையத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது .
16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயிற்சி மையங்களில் சேர முடியாது என்பது, அதன் முக்கிய விதிகளில் ஒன்று.
முன்பு ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்த நிறுவனங்கள் இங்கு இருந்தன. ஆனால் இப்போது அவை மூடப்பட்டுள்ளன.
நவீன் மிட்டலின் கூற்றுப்படி, அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவிகிதம். இந்த விதிகளை மிட்டல் எதிர்க்கிறார்.
“அப்படிப்பட்ட கட்டாயம் இருக்கக்கூடாது. 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். விளையாட்டில் அத்தகைய விதி இல்லாதபோது, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியிலும் இதைச் செய்யக்கூடாது. ஏனென்றால் எல்லா துறையிலும் அழுத்தம் இருக்கிறது.” என்றார் மிட்டல்.
மறுபுறம், eCourse இன் நிறுவனர் கோம்வீர் தயால், கோட்டாவில் குழந்தைகள் குறைவது நகரத்திற்கு ஒரு பிரச்னை என்றும் அதேசமயம் மாணவர்களுக்கும் கல்வித் துறைக்கும் நேர்மறையான சூழல் என்றும் கூறுகிறார்.
“கோட்டா பயிற்சித் துறையின் கோட்டையாக மாறியது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெரிய பயிற்சி நிறுவனங்கள் வருவாயை பெருக்கி மற்ற மாநிலங்களுக்கும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தியது.” என்றார் அவர்
இருப்பினும், இந்த பயத்தையும் மீறி, தங்கள் குழந்தைகளை கோட்டாவுக்கு பயிற்சிக்காக அனுப்பும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
தோல்பூரில் வசிக்கும் ப்ரீத்தி ஜடான் மற்றும் அவரது கணவர் ஜெய் சிங் ஜடான் ஆகியோர் தங்கள் மகள் கனாக் ஜடானைச் சந்திக்க ஒவ்வொரு மாதமும் கோட்டாவுக்கு வருகிறார்கள்.
ப்ரீத்தி ஜடானின் மகன் புனித் கோட்டாவில் தங்கி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
“குழந்தைகள் இம்மாதிரியான சூழலில் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள். படிக்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நான் ஒவ்வொரு மாதமும் வந்து என் மகளை சந்திக்க முயற்சிக்கிறேன், அதனால் அவளுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்” என்றார் ப்ரீத்தி
“ஊடகங்களில் தற்கொலை செய்திகளைப் பார்க்கும்போது, நாங்களும் வருத்தப்படுகிறோம், ஆனால் நாங்கள் எங்கள் மகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கடந்த முறை, நான் என் மகளுடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன்.” என்றார் அவர்
மறுபுறம், கோட்டா விடுதி சங்கத் தலைவர் நவீன் மிட்டல், தற்கொலைகள் என்ற பெயரில் கோட்டா பயிற்சி மையங்கள் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக நம்புகிறார்.
“தேசிய குற்றப்பிரிவின் புள்ளிவிபரங்களைப் பார்த்தால், கோட்டா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கோட்டா ஒரு பயிற்சி நகரம் மட்டுமல்ல, இது ஒரு அக்கறையுள்ள நகரமாகும். இப்போது நாங்கள் கோட்டா மாணவர்களுக்கான பிரீமியர் லீக்கை ஏற்பாடு செய்துள்ளோம், இதில் 16 அணிகள் உள்ளன. மாணவர்களுக்கு நல்ல சூழல் அமைய வேண்டும் என்பதற்காகவே இதை நடத்துகிறோம்” என்றார் அவர்
மறுபுறம், பயிற்சித் துறையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக சோம்வீர் தயால் நம்புகிறார்.
“இடையில், ஜேஇஇ முறையை மாற்றியபோது, கோட்டா நகரில் பயிற்சி மையங்கள் பிழைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதிலிருந்தும், கோட்டா வலிமையாக வெளிவந்து தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. இப்போதும், கோட்டா நகரம் இப்பிரச்னையை சமாளிக்க வழியை கண்டுபிடிக்கும் என நம்புகிறேன்” என்றார் அவர்.
முக்கிய தகவல்
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும், இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன)
இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிஹேவியர் அண்ட் அலைட் சயின்சஸ்-9868396824, 9868396841, 011-22574820
ஹிட்குஸ் ஹெல்ப்லைன், மும்பை- 022- 24131212
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்-080 – 26995000
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு