கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்

NASA, விண்மீன் திரள், பிரபஞ்சம்

பட மூலாதாரம், NASA

  • எழுதியவர், பல்லப் கோஷ்
  • பதவி, அறிவியல் நிருபர்

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) எனப்படும் விண்வெளி தொலைநோக்கி முதன்முறையாக நமது விண்மீன் திரள் உருவாகும்போது எப்படி இருந்ததோ அதைப்போலவே இருக்கும் ஒரு விண்மீன் திரளை படம்பிடித்துள்ளது. இதை கண்டதும் விஞ்ஞானிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை போல உணர்வதாக உற்சாகம் அடைந்துள்ளனர்.

“இது பிரபஞ்சம் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது இருந்த விண்மீன் திரள் எப்படி இருந்ததோ அது போலவே தெரிகிறது. கிறிஸ்துமஸ் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல இருக்கும் இந்த ஒளிரும் விண்மீன் திரளை மிகவும் விரும்புகிறேன்”, என்று ஸ்காட்லாந்து விண்வெளி ஆய்வாளர் பேராசிரியர் கேத்தரின் ஹெய்மன்ஸ் பிபிசியிடம் கூறினார்.

இந்த படத்தில் 10 நட்சத்திரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள அலங்கார பந்துகளைப் போல தெரிகின்றன.

நம்முடைய பால் வீதி போன்ற ஒரு விண்மீன் திரள் உருவாக நட்சத்திரங்கள் ஒன்று திரளும் காட்சியை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுள்ளனர். இது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை பற்றிய சில குறிப்புகளை அளிக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கு விஞ்ஞானிகள் “ஃபயர்ஃபிளை ஸ்பார்க்கில்” (Firefly Sparkle) என்று பெயரிட்டுள்ளனர்.

இதுவரை கட்டமைக்கப்பட்டதில் மிகவும் சக்தி வாய்ந்ததான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் ஏற்கனவே உருவான விண்மீன் திரள்களைக் காட்டியுள்ளது. ஆனால் புதிதாக உருவாக இருக்கும் இதுபோன்ற விண்மீன் திரளை இவ்வளவு விரிவாக இதற்கு முன்பு அது நமக்கு காட்டியதில்லை.

“பிரபஞ்சத்தின் ஆரம்ப கட்டத்தில் என்ன நடந்தது என்பதற்கான தரவு மிகவும் அரிதானது” என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மாசசூசெட்ஸில் உள்ள வெல்லஸ்லி கல்லூரியைச் சேர்ந்த லாமியா மௌலா கூறுகிறார்.

“நாம் உண்மையில் ஒரு விண்மீன் திரள் எவ்வாறு படிப்படியாக உருவாகி வருகிறது என்பதை பார்க்கிறோம். நம்மைச் சுற்றி நாம் பொதுவாகக் காணும் விண்மீன் திரள்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன, எனவே இந்த விண்வெளி திரள் உருவாவதை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை” என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

NASA, விண்மீன் திரள், பிரபஞ்சம்

பட மூலாதாரம், NASA

இந்த ஆராய்ச்சி குழுவில் சுயாதீனமாக பணியாற்றும் ஸ்காட்லாந்து வானியல் ஆய்வாளர் பேராசிரியர் ஹெய்மன்ஸ், இந்த கண்டுபிடிப்பை “அழகானது, அறிவியல் ரீதியாக முக்கியமானது மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒத்தது” என்று விவரித்தார்.

“மனிதர்கள் ஒரு தொலைநோக்கியை உருவாக்கி, அதன் மூலம் நமது ஆரம்ப காலத்தை பார்க்க முடிகிறது என்பதை நான் ஒரு அற்புதமாக கருதுகிறேன். இதன் மூலம் நாம் இந்த விண்மீன் திரளின் ஆரம்ப கட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் அழகான விழாவை ஒத்தது போல நாம் உணர முடியும்” என்று அவர் கூறினார்.

“ஒரு விண்மீன் திரள் உருவாகும் போது ஆரம்பத்தில் மிகவும் வேகமாக செயல்முறைகள் நடக்கும், அதை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

NASA, விண்மீன் திரள், பிரபஞ்சம்

பட மூலாதாரம், NASA

“இதன் உள்ளே பல விஷயங்கள் நடக்கின்றன, புதிய நட்சத்திரங்கள் பிறக்கின்றன, பல நட்சத்திரங்கள் இறக்கின்றன, அந்த விண்வெளி திரளை சுற்றி அதிக அளவில் வாயு மற்றும் தூசி உள்ளது. நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனும் உள்ளன. விண்மீன் திரள் உருவாக்கத்தின் தற்போதைய நிலையால், இந்த அழகான வண்ணங்களும் தெரிகின்றன”.

“ஒவ்வொரு விண்மீன் திரளின் வயது, அவற்றில் உள்ள தனிமங்களின் கலவை மற்றும் அவை உருவான வெப்பநிலை பற்றி எங்களால் ஏதாவது சொல்ல முடிகிறது.”

இது போன்ற, இவ்வளவு தெளிவான மற்றும் வேறுபட்ட நிறங்களில் உள்ள விண்மீன் திரளை பார்த்ததில்லை என்று டாக்டர் மௌலா தெரிவித்தார். இதனால் அவர் இந்த அமைப்பில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக கருதுகிறார். எனவே அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அவர் பற்றி அவர் அறிந்தார்.

இந்த விண்மீன் திரள் 13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது என்பது டாக்டர் மௌலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த விண்மீன் திரள் மிகவும் சிறியது மற்றும் மிகவும் தொலைவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த JWST தொலைநோக்கி கூட அதை சாதாரணமாக பார்க்க முடியாது. இருப்பினும், விண்வெளியில் மிகவும் அதிர்ஷ்டமான நிகழ்வின் காரணமாக தற்போது நம்மால் அதைப் பார்க்க முடிந்தது.

NASA, விண்மீன் திரள், பிரபஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

ஃபயர்ஃபிளை ஸ்பார்க்கிள் விண்மீன் திரளுக்கும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிக்கும் இடையே ஏராளமான விண்மீன் திரள்கள் உள்ளன. அவை, தொலைதூர விண்மீன் திரளிலிருந்து வரும் ஒளியை நீட்டி, ஒரு பிரமாண்டமான பூதக்கண்ணாடி போல திறம்பட செயல்பட்டன.

வானியலாளர்கள் இந்த செயல்முறையை ‘கிராவிடேஷனல் லென்சிங்’ என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வே, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்யும் குழுவின் இணைத் தலைவர் டாக்டர் கார்த்திக் ஐயர் மற்றும் மற்ற உறுப்பினர்கள், நமது பால்வீதி போன்ற விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவாயின என்பது குறித்த விவரங்களை முதல் முறையாக அறிய உதவியது.

“இந்த நிகழ்வு ஃபயர்பிளை ஸ்பார்க்கிள் விண்மீன் திரளில் இருந்து வரும் ஒளியை வளைத்து, பெருக்குகிறது. ஆகவே, நம்மால் அதனைப் பார்த்து அற்புதமான விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது”, என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இந்த விண்மீன் திரள் இன்னும் உருவாவதை நாம் பார்க்க முடிகிறது. இது புதிய நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த பகுதிகள் மற்ற நட்சத்திரங்களிலிருந்து மங்கலான ஒளியால் சூழப்பட்டுள்ளன.”

“இந்த செயல்பாடுகள் நடக்கும் போது, ​​இந்த நம்ப முடியாத தொலைதூர விண்மீன் திரளை நாம் பார்க்க முடியும், அது என்னை மிகவும் ஆச்சரியமாக உணர வைக்கிறது.” என்று கார்த்திக் ஐயர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.