மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?
- எழுதியவர், பால் கிர்பி
- பதவி, ஐரோப்பா இணைய செய்திப் பிரிவு ஆசிரியர்
ரஷ்யாவின் அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுதப் படையின் (NBC) தலைவராக இருந்த இகோர் கிரில்லோவ், மாஸ்கோவில் ஒரு குண்டுவெடிப்பில் இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, யுக்ரேன் போரில் கிரில்லோவ், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டதாகவும் மேற்கத்திய நாடுகள் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தன.
ஆனால், ரஷ்யாவில் அவர் ஒரு தேசபக்தராக பார்க்கப்பட்டார், உண்மைக்காக போராடுபவர் என்றும் மேற்கத்திய நாடுகளின் “குற்றங்களை” அம்பலப்படுத்தியவர் என்றும் பல ரஷ்யர்கள் கருதினர்.
தென்கிழக்கு மாஸ்கோவில் உள்ள `ரியாசான்ஸ்கி பிராஸ்பெக்ட்’ என்னும் பகுதியில் அவர் வசித்து வந்த கட்டடத்தை விட்டு வெளியே வந்த போது, மின்சார ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் கிரில்லோவ் மற்றும் ஒரு உதவியாளர் கொல்லப்பட்டனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இகோர் கிரில்லோவ் யார்?
கிரில்லோவ் 2017 ஆம் ஆண்டில் ரஷ்ய ராணுவத்தின் அணு ஆயுதம், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதப் படைக்கு தலைமை தாங்குவதற்கு முன்பு, ரஷ்யாவின் `டிமோஷென்கோ’ பாதுகாப்பு அகாடமிக்கு தலைமை தாங்கினார். அவர் ரஷ்யாவில் பல உயர்மட்ட பொறுப்புகளில் இருந்தவர்.
பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் அவரை “கிரெம்ளின் பரப்பும் தவறான தகவல்களுக்கான முக்கிய ஊதுகுழல்” என்று கூறியது.
கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரில்லோவ்
கிரில்லோவ் தலைமை வகித்த படையின் முக்கியப் பணிகள், ஆபத்துகளைக் கண்டறிதல் மட்டுமின்றி, ஆபத்தான வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதிரிக்கு இழப்பு ஏற்படுத்துவதும் அடங்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
கிரில்லோவ் கட்டளையிட்ட படை யுக்ரேனில் காட்டுமிராண்டித்தனமான ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் கூறியது. அவரது படை, மூச்சு திணறல் ஏற்படுத்தும் குளோரோபிரின் என்ற நச்சுப் பொருளை பயன்படுத்தியதாக பல அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
கிரில்லோவ் கொலைக்கு முன்னதாக, யுக்ரேனில் கிழக்கு மற்றும் தெற்கு போர் முனைகளில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பெருமளவில் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் நபராக அவரை யுக்ரேனின் எஸ். பி. யு ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு அறிவித்தது.
டிரோன் தாக்குதல்களிலும், கையெறி குண்டுகளிலும் ரஷ்யப் படைகள் நச்சு பொருட்களை பயன்படுத்தியதாக அது கூறியது.
கிரில்லோவ் முன்வைத்த விமர்சனங்கள்
கிரில்லோவ் போரின் தொடக்கத்திலிருந்தே யுக்ரேன் மற்றும் மேற்கத்திய நாடுகளை நோக்கிய தொடர்ச்சியாக முன்வைத்த விமர்சனங்கள் மூலம் கவனம் பெற்றார். அவரின் கூற்றுகளில் எதுவும் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
அவரது கூற்றுகளில், “அமெரிக்கா யுக்ரேனில் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது” என்பதும் ஒன்று.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா அதன் சிறிய அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியில் இந்த குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டவை என்று கூறி 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சில ஆவணங்களை வெளியிட்டார். அந்த ஆவணங்களை ரஷ்ய அரசு சார்பு ஊடகங்கள் பரப்பின. ஆனால், அவற்றை சுயாதீனமாக செயல்படும் நிபுணர்கள் நிராகரித்துவிட்டனர்.
யுக்ரேனுக்கு எதிரான கிரில்லோவின் மோசமான குற்றச்சாட்டுகள் இந்த ஆண்டும் தொடர்ந்தன.
“ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் யுக்ரேன் நடத்தும் தாக்குதலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று குர்ஸ்க் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றுவது தான்” என்று கடந்த மாதம் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் யுக்ரேனிய அறிக்கை அடிப்படையில் ஒரு ஸ்லைட் ஷோவை (slideshow) வெளியிட்டார். அதில் விபத்து ஏற்பட்டால் ரஷ்யாவின் பகுதி மட்டுமே கதிர்வீச்சு ஆபத்துக்கு ஆளாகும் என்று குற்றம் சாட்டினார்.
யுக்ரேன் “dirty bomb” (அணுகுண்டை விட திறன் குறைந்த, ஆனால் கதிரியக்க தன்மை வாய்ந்த யுரேனியம் உள்ளிட்ட தனிமங்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆயுதம்)ஒன்றை உருவாக்க முற்படுகிறது என்பது கிரில்லோவின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் “யுக்ரேனில் உள்ள இரண்டு அமைப்புகள் ‘டர்ட்டி பாம்’ என்று அழைக்கப்படும் ஆயுதத்தை உருவாக்க குறிப்பிட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளன. அதன் உருவாக்கம் இறுதி கட்டத்தில் உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
அவரது கூற்றுகள் மேற்கத்திய நாடுகளால் ” பொய்” என்று நிராகரிக்கப்பட்டன.
ஆனால் கிரில்லோவின் கூற்றுகள் யுக்ரேனின் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தது. “யுக்ரேன் அத்தகைய ஆயுதத்தை தயாரிப்பதாக ரஷ்யா கூறுகிறது எனில், அது ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கிறது, அதாவது ரஷ்யா ஏற்கனவே அதை தயார் செய்து வருகிறது.” என்று அவர் கூறினார்.
`ரஷ்யாவுக்கு விழுந்த பலத்த அடி’
கிரில்லோவ் கடந்த கோடையில் தனது ‘டர்ட்டி பாம்’ குற்றச்சாட்டை மீண்டும் சொல்லத் தொடங்கினார். இந்த முறை கிழக்கு யுக்ரேனில் ரஷ்யர்கள் கடந்த பிப்ரவரியில் கைப்பற்றிய நகரமான அவ்டிவ்காவிற்கு அருகில் ரசாயன ஆயுத ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
யுக்ரேன் சர்வதேச ரசாயன ஆயுத மாநாட்டு (CWC) விதிகளை மீறியதாக அவர் கூறினார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உளவியல் வேதியியல் போர் ஏஜெண்ட் BZ , ஹைட்ரோசயனிக் அமிலம் மற்றும் சயனோஜென் குளோரைடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பயன்பாட்டை யுக்ரேன் செய்வதாக கிரில்லோவ் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அவரது மரணம் யுக்ரேனுக்கு ரஷ்யாவில் உள்ள உயர் அதிகாரிகளை குறிவைக்கும் திறன் உள்ளது என்பதற்கான சான்றாகவும் பார்க்கப்படுகிறது.
“அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபையின் துணை சபாநாயகர் கான்ஸ்டான்டின் கொசச்சேவ் தெரிவித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு