தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ! on Tuesday, December 17, 2024
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
அந்த காலப்பகுதியில், மாவட்ட மட்டத்தில் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட்ட 690 வேட்பாளர்களில் 493 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், 527 தேசிய பட்டியல் வேட்பாளர்களில் 434 பேர் தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.