பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், வர்ணனையாளருமான இஷா குஹா மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிரிஸ்பெனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்யும் போது இஷா குஹா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
போட்டியின்போது அவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ மற்றும் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆகியோருடன் அவர் உரையாடிக் கொண்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசினார். பும்ராவைப் பற்றிய உரையாடலின் போது, இஷா அவரை ‘அதிக மதிப்புமிக்க பிரைமேட்’ (most valuable primate) என்று அழைத்தார்.
என்ன கூறினார் இஷா?
கிரிக்கெட்டைப் பற்றி பேசும் போது, MVP அதாவது மிகவும் மதிப்புமிக்க வீரர் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. பும்ரா தொடர்பாக இஷாவுக்கும் பிரெட் லீக்கும் இடையே இதேபோன்ற உரையாடல் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் பும்ராவைக் குறிப்பிடும் போது, இஷா அவரை ஒரு வீரருக்கு பதிலாக பிரைமேட் என்று அழைத்தார். பிரைமேட் என்றால் குரங்கு.
இவ்வாறு கூறியதற்காக, இஷா குஹா சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது.
இது ஒரு இனவாதக் கருத்து என்று பலரும் கூறினர்.
இஷா குஹா ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராக உள்ளார்.
“காயப்படுத்தும் நோக்கம் இல்லை”
திங்கட்கிழமை வர்ணனையின் போது, இஷா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
“நான் நேற்று வர்ணனை செய்யும் போது பல அர்த்தங்களை கொண்ட ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினேன். இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
இஷா மேலும் கூறுகையில், “மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பது அல்லது இரக்கம் காட்டுவதில் நான் எனக்கான உயர் தரத்தை கொண்டுள்ளேன். போட்டியின் முழு வர்ணனையையும் நீங்கள் கேட்டால், இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரைக் கௌரவிப்பதே எனது நோக்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பும்ராவைப் பாராட்ட வேண்டும் என்பதே என் நோக்கம். நான் மிகவும் போற்றும் வீரர் அவர்” என்று இஷா தெரிவித்தார்.
திங்களன்று தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இஷா குஹா, பும்ராவின் உயரிய சாதனைகளைப் பற்றி பேச விரும்பியதாகவும், ஆனால் தவறான வார்த்தையைத் தான் தேர்ந்தெடுத்து விட்டதாகவும் கூறினார்.
“இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தெற்காசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதால், எனக்கு வேறு எந்த உள் நோக்கமும், காயப்படுத்தும் எண்ணமும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றும் இஷா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இஷா குஹா மன்னிப்பு கேட்டதை பாராட்டியுள்ளார். இத்துடன் இந்த விஷயத்தை கடந்து செல்ல வேண்டுமென்று என்று அவர் கூறியுள்ளார்.
“மக்கள் தவறு செய்வது இயல்பு. நாம் அனைவரும் மனிதர்கள். தவறை ஒப்புக் கொள்ளவும், மன்னிக்கவும் தைரியம் வேண்டும், அதைத்தான் இஷா செய்துள்ளார். இந்திய அணியைப் பொருத்தவரை, ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. எனவே அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகின்றனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.
பும்ராவின் சிறந்த ஆட்டம்
பிரிஸ்பென் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரிஸ்பெனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது.
பும்ரா 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழையால் பாதிக்கப்பட்ட இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
ரோஹித் சர்மா இல்லாத நிலையில், முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக இருந்தார், அதில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் இதுவரை பும்ரா அதிகபட்சமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்ச்சை
இனவாத கருத்துகள் மற்றும் சர்ச்சைகள் கிரிக்கெட்டில் புதிதல்ல.
2008-இல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஹர்பஜன் சிங் ஆண்ட்ரூ சைமண்ட்ஸைப் பற்றி இனவெறி கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வழிவகுத்தது.
ஹர்பஜன் சிங் மீது இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.
சைமண்ட்ஸை ‘குரங்கு’ என்று ஹர்பஜன் சிங் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஹர்பஜன் சிங் மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு அந்த தடை நீக்கப்பட்டது.
ஹர்பஜன் சிங், தனது இந்தி வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், யாரையும் இழிவுபடுத்தும் எந்த வார்த்தையையும் தான் பயன்படுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு