மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு குறித்து சானக்க எம்.பி. கேள்வி !

by guasw2

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு குறித்து சானக்க எம்.பி. கேள்வி ! on Tuesday, December 17, 2024

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஒரே அளவிலான பாதுகாப்பை வழங்குவது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக்க இன்று (17) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக கடமையாற்றியிருந்த முப்படைகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரையும் நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“இன்று மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை முற்றாக நீக்கியுள்ளோம் என ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டுள்ளன. முப்படைகளின் பாதுகாப்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. 60 பொலிஸ் அதிகாரிகளே பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றனர். ஊடகங்களும் இவ்வாறே தகவல் வௌியிட்டிருந்தன. ஒரு கைதியை அழைத்துச் செல்ல இரண்டு விசேட அதிரடிப்படை வாகனங்கள் தேவை, ஆனால் நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கான விசேட அதிரடிப்படை அகற்றப்பட்டு இராணுவமும் அகற்றப்பட்டுள்ளது. என்ன செய்யப் பார்க்கிறார்கள்? பாதாள உலகத் தலைவருக்கும் இரண்டு STF வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 60 பொலிஸாரே காணப்படுகின்றனர். 60 சாதாரண பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியை பாதுகாக்க முடியுமா? புலிகளும், புலம்பெயர் மக்களும் விரும்புவது போல் இதை செய்யாதீர்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எப்படி ஒரே அளவில் பாதுகாப்பு கிடைத்தது? இருவருக்கும் ஒரே அச்சுறுத்தலா காணப்படுகிறது” என்றார்.

அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் பதில் அளித்ததுடன், அச்சுறுத்தல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு (அச்சுறுத்தல் மதிப்பீடு) பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தாம் தீர்மானம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்