நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை – என்ன காரணம்?

பிரியங்கா காந்தி, கைப்பை, வங்கதேசம், பாலத்தீனம்

பட மூலாதாரம், Priyanka Office

படக்குறிப்பு, `பாலத்தீனம்’ என்று எழுதப்பட்ட கைப்பையுடன் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம். பி. யுமான பிரியங்கா காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

பிரியங்கா காந்தி திங்களன்று நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, அவர் ‘பாலத்தீனம்’ என்று எழுதப்பட்ட ஒரு கைப்பையை தோளில் மாட்டி இருந்தார். அதில் பாலத்தீனம் தொடர்பான பல சின்னங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

இதனையடுத்து, “பிரியங்கா காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறார்” என்று பாஜக குற்றம் சாட்டியது.

பிரியங்கா காந்தி, கைப்பை, வங்கதேசம், பாலத்தீனம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த வாரம், டெல்லியில் உள்ள பாலத்தீன தூதரகத்தின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து, வயநாடு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த காலங்களில், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

`ஆணாதிக்க மனநிலை’

பிரியங்கா காந்தி காஸா பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

திங்களன்று ஒரு வீடியோவில், `கைப்பை’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

“இதற்கு முன்பு பல முறை காஸா விஷயத்தில் எனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன். நான் என்ன ஆடைகள் அணிய வேண்டும், கைப்பை அணிய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கு பெயர் தான் ஆணாதிக்கம்.” என்றார்.

பிரியங்கா காந்தியின் கைப்பையை குறிப்பிட்டு காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா, இனி காங்கிரஸ் தான் `புதிய முஸ்லிம் லீக்’ என்று கூறினார்.

இது குறித்து ட்வீட் செய்த அமித் மாளவியா, “நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முடிவில், தயவு செய்து காங்கிரஸுக்காக இரண்டு நிமிட மௌனத்தை அனுசரிக்கவும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி இனி தங்கள் பிரச்னைகளுக்கு பிரியங்கா காந்தி தீர்வு காண்பார் என்று நம்புகிறது. ராகுல் காந்தியை விட பிரியங்கா காங்கிரஸுக்கு மிகப்பெரிய ஆபத்தானவராக திகழ்வார். பாலத்தீனம் என்று எழுதப்பட்ட ஒரு பையுடன் நாடாளுமன்றத்திற்கு வருவது ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்று அவர் (பிரியங்கா காந்தி) நம்புகிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரியங்கா காந்தி, கைப்பை, வங்கதேசம், பாலத்தீனம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பிரியங்கா காந்தி

`சமாதானப் பை’ – பாஜக விமர்சனம்

“நேரு காலம் முதல் பிரியங்கா வதேரா வரை, காந்தி குடும்ப உறுப்பினர்கள், தங்கள் தோள்களில் `சமாதானப் பையை’ மாட்டிக் கொண்டு நடக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் தேச பக்தியை சுமந்து வந்ததில்லை. தேச பக்தியின் சுமையை அவர்கள் ஒருபோதும் சுமக்கவில்லை. அவர்கள் தங்களால் முடிந்தவரை சமாதானப் பையை (appeasement) மட்டுமே தாங்கிப் பிடிக்கின்றனர்.” என்று பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா கூறினார்.

பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வியும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“பாலத்தீனம் என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட பையுடன், அறியாமை, ஆணவத்துடன், அவர்கள் பெரிய காரியங்களை சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். `குறைகுடம் கூத்தாடும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் அப்படி தான்” என்று அவர் கூறியுள்ளார்.

`பாலத்தீன பிரச்னையை முஸ்லிம் பிரச்னை என்று அணுகுவது அநீதி’

சிபிஐ எம். பி. சந்தோஷ் குமார், இந்த விவகாரம் குறித்து செய்தி முகமை ஏஎன்ஐ கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.

“பாலத்தீனம் என்று எழுதப்பட்ட ஒரு பையை எடுத்துச் செல்வது முஸ்லிம்களை திருப்திப்படுத்த அல்ல. பாலத்தீனப் பிரச்னையை முஸ்லிம் பிரச்னை என்று நினைப்பவர்கள், அந்த மக்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்று அர்த்தம். இது ஒரு மனிதாபிமானப் பிரச்னை. நீங்கள் ஒரு நியாயமான பிரச்னையை எழுப்பும் போது, அதை ஒரு முஸ்லிம் பிரச்னை, இந்து பிரச்னை அல்லது கிறிஸ்தவ பிரச்னை என்று அழைக்க முடியாது. இது ஒரு சர்வதேச பிரச்னை” என்றார் அவர்.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாலத்தீனத்துடன் நிற்கிறது. பாலத்தீனப் பிரச்னையை எழுப்புவது என்பது ஹமாஸைப் பாதுகாப்பது எனப் பொருள்படாது. என்னை பொருத்தவரை பிரியங்கா செய்தது சரி” என்றும் கூறினார்.

இந்த விஷயத்தில் பாஜக முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து பிரியங்கா காந்தியிடம் பி. டி. ஐ செய்தி முகமை கேள்வி எழுப்பியது.

“வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்று வரும் அட்டூழியங்களை தடுக்க ஏதாவது செய்யச் சொல்லுங்கள், முதலில் வங்கதேச அரசாங்கத்துடன் பேசி அட்டூழியங்களை நிறுத்துங்கள்.அதை விட்டுவிட்டு இப்படி முட்டாள்தனமாக பேசி கொண்டிருக்க வேண்டாம் ” என்றார் அவர்.

காஸா குறித்து பிரியங்கா பதிவிட்ட முந்தைய கருத்துகள்

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸா தொடர்பான ஐ. நா. தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததற்கு பிரியங்கா காந்தி இந்திய அரசாங்கத்தை குற்றம்சாட்டி விமர்சித்தார்.

“மனிதாபிமானமும், அனைத்து சட்டங்களும் ஓரங்கட்டப்பட்டு அட்டூழியம் நடக்கும் நேரத்தில் ஒருவர் தனது நிலைப்பாட்டை முன்வைக்காமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது தவறு.” என்று பிரியங்கா குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் வாசகத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கும் உணர்வோடு இருப்பது உலகம் முழுவதையும் குருடாக்கும். காஸாவில் போர் நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பில் நம் நாடு கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து நான் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறேன்.” என்று கூறியிருந்தார்.

“நமது நாடு அகிம்சை மற்றும் உண்மை கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அதற்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். இந்தக் கொள்கைகளே அரசியலமைப்பின் அடிப்படையாகவும், நமது தேசியவாதத்தை வரையறுக்கும் அடிப்படையாகவும் உள்ளன “

“லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவம், தகவல் தொடர்பு, பொருட்கள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாலத்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படும் போது, ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்து, அமைதியாக நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது தவறு. இந்த செயல்பாடு ஒரு நாடாக இந்தியா முந்தைய காலங்களில் போராடியதற்கு நேர்மாறானது” என்று பிரியங்கா விவரித்தார்.

நவம்பர் 5, 2023 அன்று அவர் பதிவிட்ட ட்வீட்டில், “கிட்டத்தட்ட 10,000 பொதுமக்கள் இறந்துள்ளனர், அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பது திகிலூட்டுகிறது. இது வெட்கக்கேடானது. முழு குடும்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன, மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது குண்டு வீசப்பட்டன. அகதிகள் முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன ” என்று பிரியங்கா குறிப்பிட்டிருந்தார்.

பாலத்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

பிரியங்கா காந்தி, கைப்பை, வங்கதேசம், பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலை பிரதமர் நரேந்திர மோதி கண்டித்தார்.

அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 44,875 பேர் இறந்துள்ளனர் மற்றும் 100,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டார்.

“இஸ்ரேலின் அப்பாவி பொதுமக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. பாலத்தீன மக்களின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான நியாயமான கோரிக்கைகளை, இஸ்ரேல் நியாயமான தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் அதே வேளையில் ஒரு பேச்சுவார்த்தை செயல்முறையின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்த தீர்வு பலனளிக்கும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் நம்புகிறது. எந்த வகையான வன்முறையும் ஒருபோதும் எந்த தீர்வையும் வழங்க முடியாது, அது நிறுத்தப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

பாலத்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாலத்தீன மக்களுக்கான இறையாண்மை கொண்ட, சுதந்திரமான பாலத்தீன நாட்டை ஸ்தாபிப்பதற்கான நேரடிப் பேச்சுவார்த்தைகளை இந்தியா பல சந்தர்ப்பங்களில் முன்வைத்துள்ளது. பாலத்தீனர்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய எல்லைகளைக் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும். அதுவும் இஸ்ரேலுடன் சமாதானமாக அமைய வேண்டும்” என்றார்.

பாலத்தீனர்கள் விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாக்சி தெளிவுபடுத்தினார்.

இந்தியாவின் நிலைப்பாடு ‘இரு நாடுகள் தீர்வு’ என்ற அடிப்படையிலேயே உள்ளது.

‘வங்கதேசம்’ என்று எழுதப்பட்ட பையுடன் வந்த பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி, கைப்பை, வங்கதேசம், பாலத்தீனம்

பட மூலாதாரம், @drshamamohd

காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு பையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். பிரியங்கா காந்தி ‘வங்கதேசம்’ என்று எழுதப்பட்ட பையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான எம்.பி.க்களும் அவருடன் இதேபோன்ற பைகளுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

அவரது பையில், “வங்கதேச இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நில்லுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

பிரியங்கா தலைமையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே முழக்கங்களை எழுப்பினர்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை குறித்து பிரதமர் நரேந்திர மோதி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு