பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி,
எமது பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
நீர் நிறைந்த விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் சென்று வரக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எம்மிடம் போதிய மருந்துகள் காணப்படுகின்றது.
மேலதிகமாக மருந்துகள் தேவைப்படுமானால் சுகாதாரத் திணைக்களம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக எமக்கு தெரிவித்துள்ளது.
எமது பிரதேசத்தில் சுகாதாரத் துறை சார்ந்து ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் மருத்துவ மாணவர்களின் உதவியும் கிடைத்துள்ளது என்றார்.