நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Dean Raper

படக்குறிப்பு, நீரிழிவு ரெட்டினோபதியால் டெர்ரி க்வின் பார்வை இழக்க நேரிட்டது.
  • எழுதியவர், Christine Ro
  • பதவி, Technology Reporter

டெர்ரி க்வின் இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அடிக்கடி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளையும், வழக்கமான சோதனைகளையும் அவர் எதிர்த்தார். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக உணர அவர் விரும்பவில்லை.

என்றாவது ஒரு நாள் தன் கால் துண்டிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். நீரிழிவு நோயின் மற்றொரு சாத்தியமான சிக்கல், பார்வை இழப்பு.

அதுகுறித்து க்வின் முன்பே அறிந்திருக்கவில்லை.

“நான் என் பார்வையை இழக்க நேரிடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை”என்று மேற்கு யார்க்ஷயரில் வசிக்கும் க்வின் கூறுகிறார்.

ஆனால் ஒரு நாள் அவர் கண்ணில் ரத்தம் வருவதை கவனித்தார். அவருக்கு நீரிழிவு விழித்திரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். நீரிழிவு நோயினால் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு தான் நீரிழிவு விழித்திரை நோய்.

இதற்கு லேசர் சிகிச்சைகள் மற்றும் ஊசிகள் தேவைப்பட்டன.

சிகிச்சைகள் இருந்த போதிலும், டெர்ரியின் பார்வை தொடர்ந்து மோசமடைந்தது. அவர் நடந்து செல்லும் போது சில நேரங்களில் விளக்கு கம்பங்கள் மீது இடித்துக் கொள்வார், தோள்பட்டை வலிக்கும். மகன் முகத்தை கூட அவரால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை, வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டியிருந்தது.

“நான் எதுவும் செய்ய முடியாத மனிதனின் நிழலைப் போல உணர்ந்தேன்” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

விரக்தியிலிருந்து வெளியேற அவருக்கு உதவிய ஒரு விஷயம், பார்வையற்றோருக்கான அமைப்பிலிருந்து கிடைத்த வழிகாட்டி நாய்களின் ஆதரவாகும். அதன் மூலம் அவர் ஸ்பென்சர் என்ற கருப்பு லாப்ரடார் நாயின் உதவி கிடைத்தது.

“அவர் என் உயிரைக் காப்பாற்றினார்,” என்று அந்த வழிகாட்டி நாய் குறித்து க்வின் கூறுகிறார். அவர் இப்போது வழிகாட்டி நாய்களுக்கு நிதி திரட்டுகிறார்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரிட்டனில் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) நீரிழிவு தொடர்பான கண் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகளை சரிபார்ப்பதற்கும் பார்வை இழப்பைத் தடுக்க உதவுவதற்கும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீரிழிவு கண் பரிசோதனை செய்துகொள்ள நோயாளிகளை அழைக்கிறது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், பலர் இதை நடைமுறையில் பின்பற்றுவதில்லை.

“பரிசோதனை செய்துகொள்வது, பார்வை இழப்பைத் தடுக்கிறது என்பதற்கு மிகத் தெளிவான சான்றுகள் உள்ளன” என்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்தின் விழித்திரை நிபுணர் ரூமாசா சன்னா கூறுகிறார்.

“அமெரிக்காவில் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான முட்டுக்கட்டைகளில் செலவு, தகவல் தொடர்பு மற்றும் அதற்கான வசதி ஆகியவை அடங்கும். பரிசோதனைகளை எளிதாக அணுகுவது நோயாளிகளுக்கு உதவும்” என்று டாக்டர் சன்னா நம்புகிறார்.

நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறிய, சுகாதார வல்லுநர்கள் ஃபண்டஸ் எனப்படும் கண்ணின் பின்புற உட்புறச் சுவரின் படங்களை எடுக்கிறார்கள்.

“அதிக முறை செய்யும் வேலையாக அது உள்ளது” என்று டாக்டர் சன்னா குறிப்பிடுகிறார்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI), இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் செலவுகளைக் குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

நீரிழிவு ரெட்டினோபதி வெவ்வேறு நிலைகளில் உருவாகும் என்பதால், இந்த நிலைகளை திறம்பட கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) உதவும்.

சில சமயங்களில், கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரை செய்ய வேண்டுமா அல்லது படங்களை மதிப்பாய்வு செய்யும் நிபுணர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமா என்பதை செயற்கை நுண்ணறிவால் (AI) மதிப்பிட முடியும்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்

போர்ச்சுகலை தளமாகக் கொண்ட ரெட்மார்கர் (Retmarker) என்ற சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தால் அத்தகைய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் அமைப்பு, சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஃபண்டஸ் படங்களைக் கண்டறிந்து, அடுத்தக்கட்ட ஆய்வுக்காக மருத்துவ நிபுணருக்கு அனுப்புகிறது.

“பொதுவாக, சிகிச்சை தொடர்பான ஒரு முடிவை எடுப்பதற்கு மனிதனுக்குத் தேவையான தகவலை வழங்குவதற்கான ஆதரவுக் கருவியாக நாங்கள் இதைப் பயன்படுத்துகிறோம்” என்று ரெட்மார்க்கரின் தலைமை நிர்வாகி ஜோனோ டியோகோ ராமோஸ் கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பங்கள் குறித்தான மக்களின் தயக்கம், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் கருவிகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது என்று அவர் நினைக்கிறார்.

ரெட்மார்க்கர் பரிசோதனை (Retmarker Screening) மற்றும் ஐனுக்கின் ஐஆர்ட் (Eyenuk’s EyeArt) போன்ற அமைப்புகளின் உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட தனித்தன்மை ஆகிய இரண்டு பண்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதங்களில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணர்திறன் என்பது நோயைக் கண்டறிவதில் ஒரு சோதனை முறை எவ்வளவு சிறந்தது என்பதை குறிக்கும்.

குறிப்பிட்ட தனித்தன்மை என்பது நோய் பாதிப்பு இல்லாததைக் கண்டறிவது எவ்வளவு நல்லது என்பதை குறிக்கும்.

பொதுவாக, மிக அதிக உணர்திறன், அதிகப்படியான தவறான முடிவுகள் கிடைக்க காரணமாகலாம். தவறான முடிவுகள், கவலையையும் செலவையும் உருவாக்குகின்றன. அதனால் மருத்துவ நிபுணர்களைத் தேவையற்று சந்திக்க நேரிடும்.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில், மோசமான தரத்தில் உள்ள படங்கள் தவறான சோதனை முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கண்ணின் பின்புறச் சுவரின் படங்களை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவும்

தாய்லாந்தில் இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்ட போது, ​​கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு, இந்த அமைப்பு வேலை செய்யவில்லை.

ஒரு முக்கிய சிக்கல் என்னவென்றால், ஃபண்டஸ் படங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் நீரிழிவு ரெட்டினோபதியின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கும், கணினி பின்பற்றும் படிப்படியான செயல்முறைகள் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் , படங்கள் எடுக்கும் போது, லென்ஸ்கள் அழுக்காக இருந்திருக்கலாம். விளக்கின் ஒளி சீரற்றதாக இருக்கலாம். கேமரா ஆபரேட்டர்கள் இந்த செயல்முறை குறித்த பயிற்சியில் பல்வேறு நிலைகளில் இருக்கலாம்.

சிறந்த தரவுகளுடன் பணிபுரிவதன் முக்கியத்துவம் மற்றும் பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கூகுள், தான் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு குறித்த நம்பிக்கையுடன் உள்ளது.

அக்டோபரில், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள பங்குதார்களுக்கு உரிமம் வழங்குவதாக, கூகுள் நிறுவனம் அறிவித்தது. செயற்கை நுண்ணறிவு மாதிரியை பயன்படுத்துவதற்கான செலவு மற்றும் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தாய்லாந்து பொது சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் கூகுள் கூறியது.

புதிய தொழில்நுட்பத்தின் விலை அதன் மிக முக்கியமான அம்சமாக உள்ளது.

ரெட்மார்க்கரின் சேவையில், ஒரு முறை பரிசோதனை செய்வதற்கு சுமார் 5 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்) செலவாகும் என்று ராமோஸ் கூறுகிறார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப செலவில் மாறுபாடுகள் இருக்கும். அமெரிக்காவில் மருத்துவ பில்லிங் குறியீடுகளுக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளன என்றும் ராமோஸ் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் டேனியல் எஸ் டபிள்யூ டிங் மற்றும் அவரது நண்பர்கள் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனையில் ஈடுபடும் மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் செலவை ஒப்பிட்டனர்.

மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுக்கும் அதிக செலவாகும். மறுபுறம், அதிக எண்ணிக்கையிலான தவறான முடிவுகளின் காரணமாக, முழுவதும் தானியங்கியாக இயங்கும் பரிசோதனை முறையும் முழுவதும் ஏற்புடையது அல்ல.

மிகவும் மலிவு விலையில் செயற்கை நுண்ணறிவும், மனிதர்களும் இணைந்து செய்யும் மாதிரி உள்ளது. இந்த மாதிரியில், முடிவுகளின் ஆரம்பக்கட்ட பரிசோதனையை செயற்கை நுண்ணறிவு கையாண்டது, பின்னர் மருத்துவ நிபுணர்கள் இந்த முடிவுகளை மதிப்பாய்வு செய்து சரி பார்த்தனர்.

இந்த மாதிரியானது, இப்போது சிங்கப்பூர் சுகாதார சேவையின் தேசிய தகவல் தொழில்நுட்பத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்.

சிங்கப்பூர் ஏற்கனவே நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான வலுவான உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், செலவுகளை குறைக்க முடிந்தது என்று பேராசிரியர் டிங் நம்புகிறார்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Bilal Mateen

படக்குறிப்பு, பணக்கார நாடுகளுக்கு அப்பால் உள்ள பிற நாடுகளிலும் மருத்துவத் துறைக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என்று பிலால் மதின் கூறுகிறார்

எனவே இந்த செயற்கை நுண்ணறிவு முறையில் உள்ள காரணிகளான, செலவு மற்றும் செயல்திறன் பெரிதும் மாறுபடும்.

ஹெல்த் என்ஜிஓ PATH இன் தலைமை அதிகாரி பிலால் மதின் கூறுகையில், பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் அல்லது சீனா போன்ற சில நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பார்வையைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவற்கு ஆகும் செலவு மற்றும் அதன் செயல்திறன் தரவு மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கு அப்படி இல்லை என்று தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்குகிறோமா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிவுகளை எடுக்கும்போது செயல்திறன் தரவைக் காட்டிலும் அதிகமானவற்றைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் மேடீன் வலியுறுத்துகிறார்.

டாக்டர் சன்னா, அமெரிக்காவில் உள்ள சுகாதார சம பங்கின் இடைவெளியை சுட்டிக்காட்டுகிறார். இந்த தொழில்நுட்பம் அதனைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார். “கண் பராமரிப்புக்கு இன்னும் குறைந்த அணுகல் உள்ள இடங்களுக்கு நாங்கள் அதை விரிவுபடுத்த வேண்டும்.”என்றும் அவர் தெரிவித்தார்.

வயதானவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண் மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். நீரிழிவு கண் நோயைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு முறை வசதியாக இருந்தாலும், கண்களின் மற்ற குறைபாடுகளை கண்டறிவதன் முக்கியத்துவத்திலிருந்து, திசை திருப்பப்படாமல் இருப்பதும் முக்கியம்.

கிட்டப்பார்வை மற்றும் க்ளைகோமா போன்ற சிக்கல்களைக் கண்டறிவது, செயற்கை நுண்ணறிவு முறைகளுக்கு கடினமாக உள்ளது.

ஆனால் அந்த எச்சரிக்கைகள் இருந்தாலும் , ” செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியதாக உள்ளது ” என்கிறார் டாக்டர் சன்னா.

“நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் பரிசோதிக்கப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன். நீரிழிவு நோயின் சுமையைக் கருத்தில் கொண்டு, இது ஒரு சிறந்த தீர்வு என்று நான் நினைக்கிறேன்.” என்கிறார் அவர்.

க்வின், மீண்டும் யார்க்ஷயரில் புதிய தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

அவரது நீரிழிவு ரெட்டினோபதியை முன்கூட்டியே கண்டறிய செயற்கை நுண்ணறிவு மாதிரி இருந்திருந்தால், “நான் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பேன்”என்றார் க்வின்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)