சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?
கடந்த 12 வருட காலமாக சோஃபிக்கு வலிமிக்க மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
அவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 10 பெண்களில் ஒருவருக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை பெற சோஃபி போராடினார்.
தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதே, இதற்கான சிகிச்சை பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்தான், கோர்ட்னி சிம்மாங் (Kourtney Simmang) என்பவரது பக்கம் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
PCOS பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை அடையாளம் காணவில்லை. ஆனால் “மூல காரணத்தை கண்டுபிடித்து அதனை குணப்படுத்தப் போவதாக” கோர்ட்னி உறுதியளித்திருந்தார்.
அவர் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனைகள், என்ன உணவு உண்ண வேண்டும் மற்றும் பிற ஊட்டச்சத்து குறித்த முறையான திட்டம் மற்றும் விரிவான பயிற்சி முறைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இதற்காக அவர்களிடம் இருந்து 3,600 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறுகிறார்.
நூற்றுக்கணக்கான டாலர்களை செலுத்தி, கோர்ட்னியிடம் இருந்து சோஃபி அவற்றை வாங்கியுள்ளார்.
“அந்த மருத்துவ பரிசோதனைகளை மக்களுக்கு பரிந்துரை செய்ய கோர்ட்னிக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. அவை குறைந்த அளவிலே மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் சோதனைகள் ஆகும்”, என்று மகப்பேறு மருத்துவரும், பெண்கள் உடல்நலம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவருமான மருத்துவர் ஜென் கண்டர் கூறுகிறார்.
சுமார் ஒரு வருடத்திற்கு கோர்ட்னியின் மருத்துவ திட்டங்களை பின்பற்றிய பின்னரும், சோஃபிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால் அவர் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதை கைவிட்டார்.
“எனது PCOS பிரச்னைக்கான தீர்வில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது போல தோன்றியது. உடல்நிலை மற்றும் உணவு பழக்கம் மிகவும் மோசமானதால், நான் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதில் இருந்து விலகினேன்”, என்று சோஃபி கூறினார்.
இந்த கட்டுரைக்காக கோர்ட்னியிடம் பேச முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.
PCOS பாதிப்புக்கு எளிதான மருத்துவ தீர்வு இல்லாததால், மருத்துவரல்லாத சமூக ஊடகங்களில் மில்லியன்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்கள் பலர் தங்களை நிபுணர்களாக காட்டிக்கொண்டு போலியான மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் சிலர் தங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது “ஹார்மோன் பயிற்சியாளர்கள்” என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ” PCOS” ஹேஷ்டேக் கொண்ட அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களை பிபிசி உலக சேவை கண்காணித்து வந்தது, அவற்றில் பாதி தவறான தகவல்களைப் பரப்புவதாக இருந்தது என்று கண்டறிந்தது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகில் 70% வரையிலான பெண்கள் தங்களுக்கு PCOS பாதிப்பு இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றனர். மேலும் அவ்வாறு கண்டறியப்பட்டாலும் கூட, அதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைக் கண்டறிய பெண்கள் போராடுகிறார்கள்.
“உரிய சிகிச்சை கிடைப்பதில் இடைவெளி இருக்கும் போது கிடைக்கும் வாய்ப்பினை இதுபோன்ற போலி மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்”, என்று மருத்துவர் கண்டர் தெரிவித்தார்.
சமூக ஊடக இன்ஃப்ளூயென்சர்கள் இது போன்ற தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர்:
- உணவு பழக்கங்கள் மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும்
- குறைந்த மாவுச் சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள கீட்டோ டயட் போன்ற உணவுமுறை மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும்
- கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பு ஏற்படுத்தும் அல்லது நோய் அறிகுறிகளை மோசமாக்கும்
- இந்த மருந்துகள் எல்லாம் PCOS பாதிப்பை கட்டுப்படுத்த மட்டுமே உதவும், ஆனால் அதற்கான “மூல காரணத்தை” சரி செய்யாது
மிகவும் குறைவான கலோரி கொண்ட உணவுகள் சிறந்த பலன் அளிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. கீட்டோ டயட் இருப்பது PCOS பாதிப்பை இன்னும் மோசமாக்கலாம்.
கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக அது பல பெண்களுக்கு உதவியாகவே இருக்கின்றன, ஆனால் அது அனைவருக்கும் பலன்னளிக்காது. PCOS பாதிப்பிற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று எதுவும் கண்டறியப்படவில்லை, அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை.
“எங்கள் நிறுவனம் தவறான உள்ளடக்கத்தை தளத்தில் பதிவிட அனுமதிக்காது. அது பார்வையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்”, என்று டிக்டாக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பெண்களின் ஆரோக்கியம் குறித்த பயனர்களின் உள்ளடக்கம் “எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல்” தளத்தில் பதிவிட அனுமதிக்கப்படுகிறது என்றும், உடல்நலம் தொடர்பான தவறான தகவல்களைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்று அழைக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் 8-13% PCOS-யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை PCOS அறிகுறிகளில் அடங்கும் என்று தேசிய சுகாதார சேவை (NHS ) தெரிவிக்கின்றது. கருவுறாமைக்கு PCOS மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றும் NHS குறிப்பிட்டது. ஆனால் இந்த பாதிப்பு ஏற்படும் பெரும்பாலான பெண்கள் சிகிச்சை மூலம் கர்ப்பமாகலாம்.
கென்யா, நைஜீரியா, பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 பெண்களிடம் பிபிசி இந்த கட்டுரைக்காக பேசியது. அவர்கள் சமூக ஊடகங்களில் இன்ஃப்ளூயென்சர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை பயன்படுத்தியுள்ளனர்.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட டாலீன் ஹேக்டோரியனின் பெயரை இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட உணவியல் நிபுணரான டாலீன் 219 அமெரிக்க டாலர்களுக்கு ஊட்டச்சத்துகளை விற்பனை செய்து வருகிறார். அவர் உடல் எடையை குறைப்பதற்கான தனது செயலியை மக்கள் பயன்படுத்த 29 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக பெறுகிறார்.
PCOS பாதிப்பு உள்ள பெண்களுக்கு உதவியாக இருப்பதாக கண்டறியப்பட்ட கருக்கலைப்பு மாத்திரை, நீரழிவு நோய்க்கான மாத்திரை, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை எச்சரித்து வருகிறார்.
அதற்கு பதிலாக, தனது வாடிக்கையாளர்களிடம் அவர் தனது ஊட்டச்சத்து திட்டத்தை பயன்படுத்தி “இயற்கையாக” குணமடைய ஊக்குவிக்கிறார். அவர் எடை மற்றும் “PCOS தொப்பை” என்று கூறப்படும் அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஏமி, தனது மருத்துவரின் சிகிச்சை மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த போராடிய பிறகு, டாலீனின் சில ஆலோசனைகளைப் பின்பற்ற முடிவு செய்தார்.
“PCOS-யால் உனக்கு இருக்கும் தொப்பையே உனது பலவீனம்”, என்று டாலீன் என்னிடம் கூறினார்.
நான் க்ளூட்டன் மற்றும் பால் உணவுப் பொருட்களை குறைவாக உண்ண வேண்டும் என்று டாலீன் எனக்கு ஆலோசனை வழங்கினார். ஒரு நல்ல உணவு பழக்கத்தினால் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றாலும், க்ளூட்டன் அல்லது பால் பொருட்களைத் தவிர்ப்பது உண்மையில் பலன் அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
க்ளூட்டன் மற்றும் பால் பொருட்களைக் குறைத்து உண்ண ஏமி மிகவும் சிரமப்பட்டார்.
“இது உங்களை தோல்வியடைந்ததைப் போல் உணர வைக்கிறது,” என்று அவர் கூறினார்.
“அதிக உடல் எடையுடன் இல்லை என்றாலும் இவர்கள் என்னை மோசமாக உணர வைப்பார்கள். இந்த சிகிச்சைக்காக உங்களை பல டயட்களை மேற்கொள்ள வைப்பார்கள் அல்லது கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வைப்பார்கள்”, என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இன்ஃப்ளூயன்சர்கள் பரிந்துரைக்கும் உணவு முறைகளால் உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர் கண்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தான் விற்கும் ஊட்டச்சத்து பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவை உயர் தரத்தில் இருப்பவை என்றும் டாலீன் பிபிசியிடம் கூறினார்.
மற்ற மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில்லை என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் வரும் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்த ஆதார அடிப்படையிலான தகவல்களை வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
தன்னைத்தானே நேசிப்பதையும், தனது உடலை ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிப்பதே அவரது அணுகுமுறை என்று அவர் கூறினார்.
PCOS பாதிப்பை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லாத காரணத்தினால், தனது அறிகுறிகளை சீர்படுத்த ஹார்மோன் மாத்திரைகளை அவரது மருத்துவர் ஏமிக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், மீண்டும் தன்னிடம் வந்து சிகிச்சை எடுக்குமாறு ஏமிக்கு அவரது மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
“இவர்கள், இதற்கான சிகிச்சை கிடைக்காத நிலையில், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தால் தவிக்கும் மக்கள் ஆவார்கள்”, என்று மருத்துவர் கண்டர் கூறினார்.
தவறான தகவல்களால் இவர்கள் மருத்துவ உதவி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2) போன்ற மேலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
நைஜீரியாவில், மருத்துவ மாணவியான மெட்லின், PCOS பாதிப்பினால் வரும் அவமானங்களை சமாளிக்க முயற்சிக்கிறார். டயட் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் என எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர் இப்போது மற்ற பெண்களை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கவும், அதற்கான உரிய சிகிச்சையை எடுக்கவும் ஊக்குவிக்கிறார்.
“உங்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்பட்டால், அது உங்களுக்கு அவமானம் தருகிறது. நாங்கள் சோம்பேறி என்று மக்கள் நினைக்கிறார்கள், நாங்கள் எங்களை கவனித்துக் கொள்ளவில்லை, நாங்கள் குழந்தை பெற வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். எனவே யாரும் எங்களை காதலிக்க மாட்டார்கள். எங்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்”, என்று அவர் கூறினார்.
ஆனால் அவர் இப்போது தனது PCOS பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ளார். “எனது PCOS பாதிப்பு, எனது முடி, எடை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது கடினமான ஒரு பயணம். இது மற்றவர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்தி காட்டுகிறது”, என்று அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.