மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்?

கமலினி, மகளிர் பிரீமியர் லீக், மதுரை

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, கமலினி
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அவர் மீது திரும்பியுள்ளது.

ஒரே நாளில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பிய கமலினி யார்? சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே கிரிக்கெட் சாதித்தது எப்படி?

கமலினி, மகளிர் பிரீமியர் லீக், மதுரை

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கமலினியை ஏலம் எடுக்க கடும் போட்டி

2025ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் கமலினியை வாங்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. ஒவ்வொரு வீராங்கனைக்கும் அடிப்படை ஏலத் தொகையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் கமலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் முனைப்பு காட்டின. இரு அணிகளும் போட்டிபோட்டு ஏலம் கேட்டதால் கமலினியின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது. முடிவில் 1.60 கோடி ரூபாய்க்கு (ஒரு கோடியே 60 லட்சம்) கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது..

கமலினி, மகளிர் பிரீமியர் லீக், மதுரை

யார் இந்த கமலினி?

16 வயதேயான கமலினி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குணாளன் – சரண்யா தம்பதியின் மகள் ஆவார். லாரி உரிமையாளரான குணாளன், கல்லூரி மாணவராக இருந்த போது கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில் தனது மகனை கிரிக்கெட் வீரராக்க அவர் விரும்பியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய குணாளன், “கொரோனா கால கட்டத்தில் என் மகனுக்கு வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் வலை கட்டி தினசரி கிரிக்கெட் பயிற்சி அளித்தேன். எங்களுக்கு உதவியாக கமலினி கூடைகளில் பந்துகளை சேகரித்து கொடுத்து வந்தார். அப்போது 12 வயதாக இருந்த கமலினி பந்தை எடுத்து அசாதாரணமாக வீசியதை பார்த்து பிரமித்துப் போனேன். அதன் பின்னரே மகளுக்கும் கிரிக்கெட் பயிற்சி அளித்தேன்.” என்று கூறினார்.

குணாளன் அளித்த பயிற்சியில் நன்றாக விளையாட தொடங்கி இருக்கிறார். ஆனால் மதுரையில் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான உயர்தர புல் தரை மைதானம் இல்லாததால் அவர் குடும்பத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

அதன் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து கமலினி பயிற்சி பெற்றார். மாதம் ரூ.8 ஆயிரம் கட்டி தினமும் 5 மணி நேரம் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய கமலினி, உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெற்றார்.

2021ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக கமலினி விளையாடினார். 36 மாநிலங்கள் கலந்து கொண்ட அந்த தொடரில் அதிக ரன்கள் (485 ரன்கள்) குவித்து அவர் முதல் இடத்தை பிடித்தார். ஆனால் தமிழ்நாடு அணி அரை இறுதியில் தோல்வியடைந்தது.

பின்னர் 19 வயதுக்குட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடம் பிடித்தார்.

அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கமலினி, அவ்வப்போது சுழற்பந்து வீசவும் செய்வார். தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் கமலினி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கமலினி, மகளிர் பிரீமியர் லீக், மதுரை

பட மூலாதாரம், SOCIAL MEDIA

“என் மகளின் கனவு நனவாகியுள்ளது”

“என் மகளை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் விளையாட ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது, பேச வார்த்தைகள் இல்லை” என கமலினியின் தந்தை குணாளன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“என் மகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது கனவு. அதற்காக மூன்று முறை பயிற்சிக்காக மும்பை சென்றுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி கமலினியை ஏலத்தில் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் குடும்பத்தின் ஐந்து வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு. மகளிர் பிரீமியர் லீக்கில் என் மகள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

எனது மகள் ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும் போது என்னிடம் ஒரு சில அறிவுரைகளை கேட்டு பெற்று விளையாடி வருகிறார். எனவே ஒரு தந்தை என்பதை காட்டிலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”, என்றார் குணாளன்.

கமலினி, மகளிர் பிரீமியர் லீக், மதுரை

பட மூலாதாரம், Kamalini

படக்குறிப்பு, குடும்பத்தினருடன் கமலினி

திட்டிய உறவினர்கள்

” என் குடும்பத்தார் ‘பெண் பிள்ளையை கிரிக்கெட் விளையாட அனுப்பி ஏன் இப்படி கஷ்டப்படுத்துற’ என்று பலமுறை என்னை திட்டியதுண்டு. அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாட அனுப்பியதன் பலனாக என் மகள் இன்று கிரிக்கெட் அரங்கில் சாதிக்கிறார்”, என்று கூறுகிறார் அவரது தாய் சரண்யா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாங்கள் சாதாரண பொருளாதார பின்புலத்தை கொண்டவர்கள். எனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. எதிர்காலத்தில் இருவரும் நல்ல கிரிக்கெட் வீரர்களாக வர வேண்டும் என்பதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோம்”, என்றார்.

“குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்தோம். அதன் பலனாக என் மகளின் கனவு இப்போது நனவாகி இருப்பதை நினைத்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி என் மகளை ஏலத்தில் எடுத்த செய்தி அறிந்ததும் மலேசியாவில் உள்ள என் மகள் கமலினி வீடியோ கால் மூலம் எங்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையை ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது”, என்றும் சரண்யா கூறினார்.

“பெண் குழந்தையை கிரிக்கெட் விளையாட அனுப்பியதற்காக என்னுடைய தாயும், தந்தையும் உறவினர்களும் கூட என்னை திட்டினர். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் கமலினியை கிரிக்கெட் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தி அனுப்பினோம். இன்று அவர் சாதித்து காட்டியுள்ளார்” என்று கூறினார் கமலினியின் தாய் சரண்யா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.