விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியதால் யாருக்கு பாதிப்பு?

இந்தியா - சுவிட்சர்லாந்து விவகாரம், நெஸ்லே நிறுவனம், மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தின் முதலீடு 53% வரை அதிகரித்துள்ளது.
  • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாரே
  • பதவி, பிபிசி நிருபர்

சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்தது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த முடிவால் இந்தியாவுடனான வர்த்தகத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இரு நாடுகளும் செய்துள்ள முதலீடுகளில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவில் 9.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்துள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் சமீபகாலத்தில் இந்த முதலீடு அதிகரித்துள்ளது. 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தின் முதலீடு 53% வரை அதிகரித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநகரத்தின், முன்னாள் கூடுதல் வெளிநாடு வர்த்தக பொது இயக்குநர் அஜய் ஶ்ரீவஸ்தவா, இந்த பிரச்னை முதலீடு தொடர்பான விவகாரத்தில் தொடங்கியுள்ளது. இது நிச்சயமாக இரு நாட்டு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

“தற்போது, சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் ஈட்டும் ஈவுத்தொகைக்கு (dividends) 5%க்கு பதிலாக 10% வரி செலுத்த வேண்டும். சுவிஸ் நிறுவனங்களும் 10% வரியை செலுத்த வேண்டும். சுவிஸ் நிறுவனங்கள் நினைப்பது போல் 5% வரி கிடையாது,” என்று அஜய் ஶ்ரீவஸ்தவா விளக்கினார்.

”உண்மையில் இந்தியாவில் சுவிட்சர்லாந்து செய்துள்ள முதலீடுகளே அதிகம். அதனால் அவர்களுக்கே பாதிப்புகள் அதிகம் எனவே இந்தியாவில் முதலீடு செய்ய அவர்கள் யோசிப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் சர்ச்சை என்ன?

இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் எனப்படும் DTAA-வின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த மிகவும் விருப்பமான நாடு (MFN) என்ற அந்தஸ்த்தை நீக்குவதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது. இது வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் என்பது, ஒரு நிறுவனம் ஒரு நாட்டில் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது என்றால் அந்த நிறுவனம் தனக்கு கிடைக்கும் லாபத்திற்கான வரியை இரு நாட்டிலும் செலுத்த வேண்டிய தேவையை தவிர்ப்பது ஆகும்.

2023-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து இதனை செய்துள்ளது

சுவிஸ் நிறுவனமான நெஸ்லே, உச்ச நீதிமன்றத்தில், “இந்தியா ஸ்லோவேனியா, கொலாம்பியா நாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பான வகையில் வரி விலக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. அதே போன்று மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்தின் கீழ் சுவிஸ் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும்,” என்று வாதாடியது.

இந்த அந்தஸ்த்தின் கீழ் ஒரு நாட்டுக்கு சலுகை வழங்கினால், அந்த அந்தஸ்த்தைப் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் அந்த சலுகைகள் பொருந்தும் என்ற நம்பிக்கை நிலவுவதாக அஜய் ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இந்தியா - சுவிட்சர்லாந்து விவகாரம், நெஸ்லே நிறுவனம், மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான ஏ.எஃப்.என்(AFN) ஒப்பந்தத்திலும் இது கருதப்பட்டதாக தெரிவிக்கும் அஜய், அது தெளிவாக எழுதப்படவில்லை என்றும், அதனால் தான் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.

இது போன்ற விவகாரங்கள் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால், பிரச்னைகளே எழாது என்று அவர் கூறுகிறார்.

இந்தியா, மிகவும் விருப்பமான நாடு ஒப்பந்தத்தில் ஸ்லோவேனியாவுடன் 2016-ஆம் ஆண்டிலும், லிதுவேனியா மற்றும் கொலாம்பியா நாடுகளுடன் 2011-ஆம் ஆண்டிலும் கையெழுத்திட்டது.

இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் படி, இந்த நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) உறுப்பு நாடுகள் ஆகின. இந்த அமைப்பில் சுவிட்சர்லாந்தும் அங்கம் வகிக்கிறது.

இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் படி இந்த நாடுகளுக்கு ஈவுத்தொகை மீதான வரியை செலுத்த விலக்கு அளிக்கப்பட்டது. ஈவுத்தொகைக்கான வரி 5 சதவீதமாகும்.

நெஸ்லே, புதிதாக OECD-யில் இணைந்த உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளை சுவிட்சர்லாந்திற்கும் வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியது.

இந்தியா – சுவிட்சர்லாந்து இடையேயான எம்.எஃப்.என். ஒப்பந்தத்தின் மூலமாக நேரடியாக இத்தகைய சலுகைகளை பெற இயலாது என்று உச்ச நீதிமன்றம் 2023-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

வரி மற்றும் வர்த்தக நிபுணரான ஷரத் கோலி, “டெல்லி உயர் நீதிமன்றம் நெஸ்லேவுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் வருமானவரித்துறை இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது,” என்று கூறினார்.

இந்தியா - சுவிட்சர்லாந்து விவகாரம், நெஸ்லே நிறுவனம், மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் 323 சுவிஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன

எத்தகைய தாக்கம் ஏற்படும்?

இந்த அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு, மற்ற நாடுகளைப் போன்றே இவ்விரண்டு நாடுகளும் வர்த்தகங்களை நடத்தும்.

“எம்.எஃப்.என். ஒப்பந்தத்தில் இணையும் போது, வரி விலக்கு மட்டுமின்றி வேறு சில சலுகைகள் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு உரிமம் பெறுவது முதல் அனுமதி வாங்குவது வரையிலான பல செயல்முறைகளுக்கான காலம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இணைந்த நாடுகளுக்கு குறைவாக இருக்கும்,” என்று விளக்குகிறார் ஷரத்.

அதிகமாக வரி செலுத்த நேரிட்டால், நிறுவனங்களின் முதலீடு மீதான வருவாய் எனப்படும் ஆர்.ஓ.ஐ. (Return on Investment) குறையும். இத்தகைய வருவாய் குறையும் போது, அவர்கள் முதலீட்டை குறைப்பார்கள் என்று விவரிக்கிறார் ஷரத்.

சுவிஸ் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை இருக்கிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதற்கு முன்பு யோசிக்கக் கூடும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 323 சுவிஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 287 நிறுவனங்கள், 1991-ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்திய சந்தைகளுக்கு வந்த நிறுவனங்கள். 1.35 லட்சம் பேர் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

வங்கி, நிதி, கட்டுமானம், இயந்திரம், பொறியியல், உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சுவிஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

”இந்த விவகாரம் இரண்டு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்று, உடனடியான பாதிப்பு. நிறுவனங்களின் லாபங்கள் குறையும். அதனால் அவர்கள் மீண்டும் முதலீடு செய்வது குறித்து யோசிப்பார்கள். இரண்டாவது, நீண்டகால தாக்கம். 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை இந்தியா பெறமுடியாமல் போகக் கூடும்” என்று கூறுகிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.

அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை செய்ய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தில் (European Free Trade Association (EFTA)) உள்ள நான்கு நாடுகள் திட்டமிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிக்டென்ஸ்டைன் நாடுகளே அவை.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் இத்தகைய முடிவை மேற்கொண்டன. இந்த நாடுகளுக்கு சிறப்பு வரிச்சலுகைகள் ஏதும் வழங்கவில்லை என்றால் இங்கே முதலீடு செய்ய இந்த நான்கு நாடுகளும் யோசிக்கக் கூடும்.

இந்தியா - சுவிட்சர்லாந்து விவகாரம், நெஸ்லே நிறுவனம், மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கி, நிதி, கட்டுமானம், இயந்திரம், பொறியியல், உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சுவிஸ் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன

இந்தியா சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்

1948-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்ட முதல் சில நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.

1994-ஆம் ஆண்டு இரட்டை வரிவிதிப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 2010-ஆம் ஆண்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1997-ஆம் ஆண்டு முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

ஏப்ரல் 2020 முதல் நவம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியாவில் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்துள்ளது.

தொழில்நுட்பம், பொறியியல், ரசாயனம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 179 இடங்களில் 140 இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 5000 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2023-2024 காலகட்டதில் சுவிட்சர்லாந்து இந்தியாவின் 15ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 90% சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்தியா - சுவிட்சர்லாந்து விவகாரம், நெஸ்லே நிறுவனம், மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்த்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023-2024 காலகட்டதில் சுவிட்சர்லாந்து இந்தியாவின் 15ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்

இரு நாட்டு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கானது மிகவும் குறைவு. 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் படி, இரு நாடுகளும் கிட்டதட்ட 30.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

அதில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பானது சுமார் 29.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஏற்றுமதியானது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

2022-ஆம் ஆண்டில் இரு நாட்டு வர்த்தகத்தின் மதிப்பானது கிட்டதட்ட 17.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. அவற்றில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு மட்டுமே சுமார் 16.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன.

தற்போது இந்தியா சுவிட்சர்லாந்துக்கு இயற்கை ரசாயனம், முத்து, ரத்தினங்கள், நகைகள், துணி, சாயம், தோல் பொருட்கள், பருத்தி, ப்ளாஸ்டிக், காபி போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம், வெள்ளி, ரசாயனம், மருந்துகள், இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.