மயக்க மருந்து கொடுத்து ஓட்டோக்களைத் திருடி விற்பனை : ஒருவர் கைது ! on Monday, December 16, 2024
வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து ஓட்டோக்களைத் திருடி விற்பனை செய்த நிலையில் இரு ஓட்டோக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா நகரப் பகுதியில் இருந்து சிவப்பு நிற ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே தள்ளி வீழ்த்தி விட்டு, அந்த ஓட்டோவை கடத்திச் சென்ற சம்பவம் பதிவாகியிருந்தது.
இதேபோன்று வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் நோக்கி ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்று சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஓட்டோ ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலன் பெரேராவின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்களான திஸநாயக்க, ரன்வெல, பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக, விதுசன், சாரதியான திஸநாயக்க உள்ளிட்ட பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வவுனியா நகரப் பகுதியில் கடத்தப்பட்ட ஓட்டோ நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு கெக்கிராவ பகுதியில் நின்ற நிலையில் மீட்கப்பட்டது.
அத்துடன் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து உளுக்குளம் சென்ற போது கடத்திச் செல்லப்பட்ட பச்சை நிற ஓட்டோ 9 இலட்சம் ரூபாய்க்கு இலக்கத்தகடு மாற்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
இந்த இரு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வருவோர் தரும் குடிபானங்களை அருந்தாது விழிப்புடன் செயல்படுமாறு வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.