பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ரகசியமாக சினிமா துறையில் இருந்து வெளியேற நினைத்தது ஏன்?
- எழுதியவர், நூர் நாஞ்சி, சாடியா கான்
- பதவி, பிபிசி செய்திகள்
லகான், 3 இடியட்ஸ் போன்ற பிரபலமான பல படங்களில் நடித்தவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடித்திருந்தார்.
அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத ஒன்று என்னவென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக அவர் சினிமாத்துறையில் இருந்து ரகசியமாக விலகியது.
“எனக்கு நடிப்பும் படமும் போதும் என்று நான் என் குடும்பத்தாரிடம் கூறினேன்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமீர் கான்
“படம் தயாரிக்கவோ, நடிக்கவோ, இயக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. நான் என்னுடைய குடும்பத்தினருடன் இருக்க விரும்பினேன்”
சினிமாவால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் அவர் சினிமாவில் இருந்து வெளியேறிருந்தால் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால், தன்னுடைய முடிவு பலராலும் கவனிக்கப்படவில்லை. ஏன் என்றால் கொரோனா பெருந்தொற்றால் மிகவும் குறைவான படங்களே தயாரிக்கப்பட்டன என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.
”யாருக்கும் இது தெரியாது” என்று அவர் கூறினார்.
ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் ஏன் என்றால் அமீர் கான் நீண்ட நாட்கள் சினிமாத்துறையில் இருந்து விலகி இருக்கவில்லை. தற்போது மீண்டும் சினிமா துறைக்கு திரும்பியிருக்கிறார்
அவர் தயாரித்த லாபட்டா லேடீஸ் என்ற இந்தி படத்தின் ‘ப்ரோமோஷன்’ பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா அதிகாரப்பூர்வமாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிள்ளைகளே ஊக்கம் அளித்தனர்’
தன்னுடைய பிள்ளைகள்தான் மீண்டும் சினிமாத் துறைக்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதாக அமீர் கான் கூறுகிறார்.
“உங்களோடு 24 மணி நேரமும் எங்களால் இருக்க முடியாது. போய் உண்மையான வாழ்க்கையை வாழுங்கள்,” என்று அவர்கள் கூறியதை மேற்கோள்காட்டிய அமீர்கான், ”மீண்டும் சினிமாவுக்கு செல்ல அவர்கள் என்னை வற்புறுத்தினர்” என்கிறார்
59 வயதான அமீர்கான் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முப்பது ஆண்டுகளாக திரைத்துறையில் வலம் வருகிறார்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கானோடு, ”பாலிவுட்டின் கான்”களில் ஒருவராக அறியப்படுகிறார் அமீர்.
சமூக பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்காக அறியப்படும் அமீர்கான், ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வசூலிலும் சாதனை படைத்திருக்கிறார்.
ஆஸ்கர் ஒன்றும் புதிதல்ல
ஆஸ்கார் ஒன்றும் அவருக்கு புதிய விசயமல்ல. 2002-ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு மொழிப் படமாக லகான், ஆஸ்கருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது உருவாக்கப்படும் ஒரு கிரிக்கெட் அணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது அந்த படம்.
லாபட்டா லேடீஸ் மூலமாக புதிய வரலாற்றை படைக்க காத்திருக்கிறார் அமீர் கான். ஆஸ்காரை மட்டும் இந்த படம் தட்டிச் சென்றால், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய படமாக அறியப்படும். பரிந்துரை பட்டியலில் இந்த படம் இடம்பெறுகிறதா என்பது செவ்வாய்க்கிழமைக்குள் தெரிந்துவிடும்.
”விருதுகளை எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறும் அவர், ”சினிமா என்பது ஒவ்வொரு நபரைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார்.
ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் அமீர்கான்.
“இந்தியர்கள் சினிமாவை கொண்டாடும் நபர்கள். நாங்கள் இந்திய திரைப்படம் ஒன்றுக்கு ஆஸ்கார் கிடைக்க வேண்டும் என்று பலகாலமாக காத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை நடைபெறவில்லை. இந்த படம் வெற்றிபெற்றால் கொண்டாடப்படும்,” என்று கூறுகிறார் அவர்.
”நாட்டு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் இந்த படம் ஆஸ்காரை வென்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று அவர் கூறினார்.
லாபட்டா லேடீஸ் படம் குறித்த பார்வை
வட இந்தியாவின் கிராமப்புறத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் லாபட்டா லேடீஸ்.
ஒரு இளைஞன், தவறாக வேறொரு மணமகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். அவருடைய மனைவியோ காணாமல் போய்விடுகிறார். தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளும் நிலைமைக்கு அந்த பெண் ஆளாகிறார்.
இளைஞன் மீண்டும் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்தாரா, அவருடன் வந்த மணமகள் என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கதை.
குடும்ப வன்முறை உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான விவரங்களில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவை பாணியில் கையாண்டிருக்கும் இந்த படம்.
இடம் மாறிய நபர்கள், நகைச்சுவை என்று இந்த படத்தின் கதை ஒரு ஷேக்ஸ்பியரின் கதையைப் போல இருக்கும் என்கிறார் அமீர் கான்.
“ஆனால் பெண்கள் பிரச்னைகள் குறித்து பல முக்கியமான விவகாரங்களை பேசுகிறது இந்த படம். அவர்களின் சுதந்திரம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான சுதந்திரம் போன்ற பல விசயங்களை தொட்டுச் செல்கிறது இப்படம்” என்கிறார் அமீர் கான்.
இதுதான் இந்த படத்தை தயாரிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் அமீர் கான்.
“சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் சில பிரச்னைகளைப் பற்றி மக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு முறையும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்றார் அவர்.
“உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். உண்மையான சவால்களை கொண்டது அவர்களது வாழ்க்கை. அப்படியான சூழலை வெளிக்கொணரும் ஒரு படம் இங்கே உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். அதனால்தான் நான் அதை தயாரிக்க நினைத்தேன்” என்று லாபட்டா லேடீஸ் குறித்து பேசுகிறார் அமீர் கான்.
தன்னுடைய முன்னாள் மனைவி கிரண் ராவ் தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தார் அமீர் கான்.
2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்கள் 2021-ஆம் ஆண்டு பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். இருப்பினும் தனிப்பட்ட வாழ்விலும், வேலையிலும் ஒன்றாக அவர்கள் பயணிக்கின்றனர்.
“நான் கிரணை தேர்வு செய்ய காரணம் உண்டு. ஏன் என்றால் அவர் மிகவும் நேர்மையாக செயல்படுவார். அதுதான் எனக்கு தேவைப்பட்டது,” என்கிறார் அமீர்.
”நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துகிறோம்.”
“எங்களின் உறவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அபிப்ராயம் ஒன்றும் குறையவில்லை,” என்கிறார் அமீர்.
”ஆனால் அனைத்தும் சுமூகமாக சென்றது என்று கூறிவிட இயலாது” என்று கூறிய அமீர் கான், படபிடிப்பு தளத்தில் விவாதங்கள் ஏற்பட்டதையும் ஒப்புக் கொண்டார்.
”விவாதம் ஏதும் இல்லாமல் ஒரு ஒரு படத்தை உருவாக்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு தருணத்திலும் விவாதத்தில் ஈடுபடுவோம். எங்களிடம் பலமான கருத்துகள் இருந்தன” என்கிறார் அமீர்.
“ஆனால் எங்கள் உணர்வுகள் ஒன்றாகவே இருக்கும். நாங்கள் அடிப்படை அம்சங்கள் மீது விவாதங்கள் செய்வதில்லை. சில நேரங்களில், சிறந்த முறையில் ஒரு விஷயத்தை தெரிவிக்க நாங்கள் முயற்சிப்போம்,” என்கிறார் அவர்.
உலக அரங்கில் இந்திய மொழிப் படங்கள்
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கில் இந்திய மொழிப்படங்கள் வெளியாகின்றன.
ரசிகர்களின் மனதில் திரைப்படங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இருக்கும் வரவேற்பை குறைத்து மதிப்பிட இயலாது.
சமீபத்தில், ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலும், தி எலெபேண்ட் விஸ்பரர்ஸ் படமும் ஆஸ்கார் விருதுகளை முறையே ஒரிஜினல் பாடல் மற்றும் சிறந்த ஆவண குறும்படப் பிரிவுகளில் பெற்றன.
ஆனால் சர்வதேச திரைப்படப் பிரிவில் இதுவரை விருது கிடைக்கவில்லை. இதற்கு காரணம் போட்டி தான் என்கிறார் அமீர் கான்.
“இந்திய பல அற்புதமான படங்களை பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது. ஆனால் சரியான படமும், சிறந்த படமும் ஆஸ்காருக்கு செல்வதில்லை. அது தவிர உங்களின் படம் ஐந்தாறு படங்களோடு போட்டியிடவில்லை. 80 – 90 படங்களோடு போட்டியிடுகிறது. அவை அனைத்தும் உலகின் சிறந்த படங்கள்,” என்று கூறுகிறார் அவர்.
பாலிவுட் படம் ஆஸ்காரை ஒரு நாள் வெல்லுமா என்று கேட்ட போது அதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் இந்தியர்கள் உலக மக்களுக்கு ஏற்றவகையில் படங்களை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார் அவர்.
“நான் சர்வதேச ரசிகர்கள் பற்றி யோசித்ததே இல்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் இது எங்களுக்கு எட்டவில்லை. உலக பார்வையாளர்களுக்கு ஏற்றவகையில் படம் எடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் தற்போது அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று கூறினார் அமீர் கான்.
6 மணிக்கு மேல் நான் பணியாற்ற விரும்பவில்லை
லாபட்டா லேடீஸ் தவிர்த்து அடுத்த ஆண்டு வெளியாக உள்ள சித்தாரே ஜமீன் பர் படத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆண்டுக்கு ஒரு படமாவது எடுக்க விரும்பும் அவர், இந்திய புராணமான மகாபாரத்தை எடுப்பது தன்னுடைய கனவுத்திட்டம் என்று கூறியுள்ளார்.
திரைத்துறைக்கு மீண்டும் வந்த பிறகு சில விஷயங்களை மாறுபட்டதாக செய்ய அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
”நீங்கள் ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபடும் நபர் என்று என்னுடைய மகன் கூறினான்” என்கிறார் அமீர்கான்
”நீங்கள் ஒரு கடிகார முள் போல. ஒரு புறம் சென்றால் படம், படம், படம் மட்டுமே. மற்றொருபுறம், இப்போது, குடும்பம், குடும்பம், குடும்பம் மட்டும்தான். ஆனால் இவை இரண்டுக்கும் நடுவே ஒரு மத்தியபுள்ளி இருக்கிறது. அதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்று தன்னுடைய மகன் கூறியதை நினைவு கூறுகிறார் அமீர் கான்.
”முயற்சி செய்து கொஞ்சம் சமநிலைக்கு வர வேண்டும்” என்று மகன் கூறியதை குறிப்பிடுகிறார் அமீர் கான்.
“எனக்கு அவன் கூறியது சரியென்றுதான் தோன்றுகிறது. அப்போது முதல் நான் அந்த சமநிலையை எட்ட முயற்சிக்கிறேன். உண்மையில் முன்பைக் காட்டிலும் அதிகமாக நான் உழைப்பது போன்று இருக்கிறது. ஆனாலும் 6 மணிக்கு மேல் நான் எந்த வேலையும் செய்வதில்லை,” என்று கூறுகிறார் அமீர் கான்.
மன நலம் சார்ந்து செயல்படும் தன்னுடைய மகளால் ஈர்க்கப்பட்டு தற்போது மன நல ஆலோசனைகளை பெற்றுவருகிறார் அமீர் கான்.
“இது உண்மையாகவே எனக்கு உதவிய ஒன்று. என்னை நன்றாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. இப்போது வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே அந்த சமநிலையை எட்டியது போல் இருக்கிறது” என்று கூறினார் அமீர் கான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.