தமிழ்நாட்டில் இருந்து பிரேசிலுக்கு சென்று தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள்
- எழுதியவர், விக்டர் டவரெஸ்
- பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
-
செவ்வாய் முதல் ஞாயிறு வரை வழிபாடுகள் நடைபெறும் தேவாலயத்தின் வாசலில் இருந்து எட்டிப் பார்க்கிறார் 30 வயதான இந்திய பாதிரியார் ஆர்செலின் எஸ்சாக். அந்த வாசலில் இருந்து அவர் காணும் அமேசான் மழைக்காடுகளை “கடவுளின் ராஜ்யம்” என்று வர்ணிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் மழைக்காடுகளை காண அவர் வெளியே செல்கிறார்.
எஸ்சாக், பிரேசிலிய அமேசானின் மேனக்யூரி நகரின் மையத்தில் உள்ள சா பெட்ரோ தேவாலயத்திற்கு அருகில் இரண்டு மாடி வீட்டில் வசித்து வருகிறார்.
தினமும் அங்கிருந்து மூன்று கி.மீ நடந்து இயற்கையின் அழகில் மூழ்கிப் போகிறார். அந்த இயற்கையை அவர் “மனித தன்மைக்கும் மேலான ஒன்றாக கருதுகிறார்.”
“இயற்கையை அதிகமாக ரசிக்க இயலும். இது கடவுளுக்கு நெருக்கமான ஒன்று” என்று கூறுகிறார் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட எஸ்சாக்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கத்தோலிக்க மதத்தினர் இடையே பிரபலமாகி வரும் பாதையை பின்பற்றி, 2016-ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் ஊழியப் பணிகளை செய்து வருகிறார் எஸ்சாக்.
பிரேசிலுக்கு மிஷனரிகளாக வந்து, போர்த்துகீசிய மொழி குறித்தும், உள்ளூர் கலாசாரம் குறித்தும் கற்றுக் கொண்டு பிறகு, அமேசானின் மையப்பகுதிகளுக்கு இந்திய கத்தோலிக்க மதத்தினர் இறைப்பணி செய்ய அனுப்பப்படுகின்றனர். பலர் தாங்கள் செல்லும் கிராமங்களிலேயே வசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
ஆனால், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் கிராமங்களில் அவர்கள் வசிக்க வேண்டும் என்ற முடிவு அவர்களைச் சூழ்ந்திருக்கும் இயற்கையோடு தொடர்புடையது.
பிபிசி நியூஸ் பிரேசிலிடம் பேசிய இந்திய மற்றும் பிரேசிலிய மதத்தலைவர்களின் கூற்றுப்படி, பிரேசிலில் கிட்டதட்ட 49% நிலப்பரப்பை உள்ளடக்கிய காடுகளுக்கு மத்தியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமிப்பது சவால்களைக் கொண்டது.
தேவாலயங்கள் இருந்த போதிலும், பாதிரியார்கள் இல்லாத காரணங்களால் ஆண்டு முழுவதும் ஒரு பிரார்த்தனைக்கு கூட செல்லாத மக்கள் இங்கே உள்ளனர்.
“பாதிரியார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இறைப்பணி மகத்தானது,” என்று கூறும் எஸ்சாக், மற்றொரு இந்திய பாதிரியாரான பாலா சுரேஷுடன் திருச்சபையின் நிர்வாகத்தை பகிர்ந்து கொள்கிறார்.
பெரும்பாலான இந்தியர்கள் கடந்த 15 ஆண்டுகளில் இரு நாடுகளிலும் செயல்படும் கத்தோலிக்க சபைகள் மூலம் பிரேசிலுக்கு வந்துள்ளனர்.
இந்தியர்கள் பணியாற்றும் முக்கியமான இரண்டு திருச்சபைகள், மிஷனரிஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் (எம்எம்ஐ) மற்றும் டிவைன் வேர்ட் மிஷனரிஸ் ஆகும்.
இன்று அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள ஹுமைத்தா , நோவோ அரிபௌனா , இட்டாகோடியரா , மனவுஸ் மற்றும் போர்பா போன்ற நகரங்களில் இந்திய பாதிரியார்கள் போர்த்துகீசிய மொழியில் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
நேஷனல் கான்ஃபிரன்ஸ் ஆஃப் பிஷப்ஸ் ஆஃப் பிரேசில் (CNBB), நாட்டில் பணியாற்றும் பாதிரியார்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தரவுகள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்தது.
இருப்பினும், வெளிநாட்டு பாதிரியார்களுக்கு பயிற்சி வழங்கும் முக்கிய மையமான இன்டர்கல்ச்சுரல் டிரெய்னிங் சென்டரின் (சென்ஃபி) தரவுகளின்படி பிரேசிலில் பணியாற்றும் பாதிரியார்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
CNBB-வின் கூற்றுப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் போர்த்துகீசிய வகுப்புகள் உட்பட, கலாசார துவக்க வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.
தற்போது இந்த பயிற்சியைப் பெறும் நபர்களில் 18 பேர் இந்தியர்கள். அவர்களைத் தொடர்ந்து 13 இந்தோனீசியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பிரேசில் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் தற்போது 100க்கும் மேற்பட்ட இந்திய பாதிரியார்கள் பணியாற்றி வருகின்றனர் என்கிறது மிஷனரிகள்.
பிரேசிலுக்கு வரும் இந்தியர்கள் ஏற்கனவே கத்தோலிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்தியாவின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 2% மட்டுமே. இந்துக்கள் அல்லது முஸ்லீம்களின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் அது மிகவும் குறைவு.
இந்தியர்களுக்கான முதல் அழைப்பு
இந்தியாவிவுக்கும் பிரேசிலுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்காக 1990களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு குழுவான மிஷனரிஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் திருச்சபையின் சிறப்பு மையம் சிடியோ பெரோலாவில் (Sítio Pérola) செயல்படுகிறது.
இந்த அமைப்பின் உருவாக்கம் சுவாரசியமான ஒன்று. ஜேசுதாஸ் ஜேசு அடிமை ஃபெர்னாண்டோ என்ற இந்தியர் ஒருவர் (தற்போது அவருக்கு வயது 78) கார் விபத்திற்கு ஆளானார்.
ஜேசுதாஸை பார்ப்பதற்காக அவருடைய தம்பி, பாதிரியார் அருள் ராஜ் பிரேசிலுக்கு வருகை புரிந்தார்.
அப்போதைய காம்போ கிராண்டே நகரின் பேராயரும் ஜேசுதாஸை பார்க்க வந்திருந்தார். சகோதரர்கள் மத்தியில் அவர் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார்.
“பேராயர் என்னைச் சந்திக்க வந்தபோது, பிரேசிலில் உள்ள தேவாலயங்களில் இறைப்பணி செய்ய பாதிரியார்களை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். மேலும் அதற்கான ஆதரவை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்,” என்று ஜேசுதாஸ் நினைவு கூர்ந்தார். அவர் 1989-ஆம் ஆண்டு பிரேசிலுக்கு வந்தவர்.
பிரேசில் நாட்டில் “பாதிரியார்கள் பற்றாக்குறை” காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 200,000 கத்தோலிக்கர்கள் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்துக்கு மாறுகின்றனர் என்று ஒரு இந்திய செய்தித்தாளில் வந்த செய்தியைப் படித்துவிட்டு பிரேசிலுக்கு வந்தார் ஜேசுதாஸ்.
காம்போ கிராண்டேவில், அவர் ஒரு புதிய தேவாலயத்தை கட்டும் கட்டுமானத் தொழிலாளர்களின் உதவியுடன் போர்த்துகீசிய மொழியைக் கற்றுக்கொண்டார்.
பின்னர் கிராமப்புறங்களுக்குச் சென்றார். அங்கே கரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார். முதல் மிஷனரிஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் மிஷனரிகளை வரவேற்று, அமேசானில் உள்ள மதத்தலைவர்களுடன் ஆரம்ப கட்ட தொடர்பை ஏற்படுத்தியவர் ஜேசுதாஸ்.
தற்போது, பிரேசில் முழுவதும் 11 மிஷனரிஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் உள்ளனர். அதில் ஐந்து நபர்கள் மாட்டோ க்ரோஸ்ஸோ டோ சுலிலும் ஆறு நபர்கள் அமேசானாஸிலும் இறைப்பணி செய்து வருகின்றனர்.
குறைந்தது எட்டு பாதிரியார்கள் இந்த திருச்சபையில் இருந்து விலகி அமேசானில் உள்ள திருச்சபைகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக பிரேசிலுக்கு வந்த ஜோசப் ராஜ் 2020-ஆம் ஆண்டில் அமேசானாஸின் போர்பாவில் உள்ள திருச்சபையில் நிரந்தரமாக பணியாற்ற சென்றுவிட்டார்.
மதேரா ஆற்றங்கரையில் உள்ள பெரிய நீல தேவாலயமான சாண்டோ அன்டோனியோ டி போர்பாவின் பேராலயத்தை நிர்வகிக்கும் ஜோசப் ராஜ், “ஒரு பாதிரியார் இங்கு வந்தால், அது ஒரு கொண்டாட்டம்” என்கிறார்.
சரளமாக போர்த்துகீசிய மொழி பேசும் அவர், “அமெரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தை நினைவு கூறுகிறார். எந்த பற்றாக்குறையும் எனக்கு அங்கே இல்லை. ஆனால் அந்த வாழ்க்கைதான் பணமும் வசதியும் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தராது என்று கற்றுக் கொடுத்தது,” என்கிறார்.
மிஷனரிஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் திருச்சபை மூலமாக வரும் பாதிரியார்களை தவிர்த்து, பிரேசில் முழுவதும் பரவியுள்ள பாரா, ரொரைமா, அமாபா, ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவோ பாலோ போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் டிவைன் வேர்ட் மிஷனரியிலும் 30 நபர்கள் பணியாற்றுகின்றனர் என்கிறார் பாதிரியார் ஜோவாசிம் ஆண்ட்ரேட். 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் குடியேறிய இந்திய மிஷனரிகள் குழுவில் இவரும் ஒருவர்.
பிரேசிலில் வசிக்கும் இந்திய மிஷனரிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் பாதிரியார் ஜோவாசிம், அந்த நாட்டில் மொத்தம் 130 இந்திய பாதிரியார்கள் உள்ளனர் என்று கூறுகிறார்.
குறைந்த ஐரோப்பிய ஆதரவுகள்
பாரம்பரியமாக ஐரோப்பாவில் இருந்து மிஷனரி பணிகளுக்காக பாதிரியார்கள் அனுப்பப்படுவது குறைந்திருப்பதை தரவுகள் கட்டுகின்றன என்கிறார் டோம் மௌரிசியோ டா சில்வா ஜார்டிம் . அவர் எபிஸ்கோபல் கமிஷன் ஃபார் மிஷனரி ஆக்சன் மற்றும் இண்டர் சர்ச் கோ-ஆப்ரேசனின் தலைவராக உள்ளார்.
“கடந்த காலத்தில், பல இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள் மற்றும் ஸ்பானியர்கள் வந்தனர். ஆனால் ஐரோப்பா இனி மிஷனரிகளை அனுப்ப முடியாது” என்று டோம் மௌரிசியோ விளக்குகிறார்.
ஆசியாவும் ஆப்பிரிக்காவும் தான் திருச்சபையின் எதிர்காலம் என்று அவர் கூறினார்.
அமேசானில், 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய பங்கைக் வெளிநாட்டு மிஷனரிகள் கொண்டிருக்கின்றன என்கிறார் வரலாற்றாசிரியர் டியாகோ ஓமர் டா சில்வீரா.
அவர் அமேசானாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் (UEA) மத ஆய்வுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.
“லத்தீன் அமெரிக்காவை ஒரு மதப்பணிக்களமாக ஐரோப்பா உணர்ந்த போது, மதகுருமார்கள் ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்தனர். 80% வெளிநாட்டினரே அப்பணியில் ஈடுபட்டனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன” என்று அமேசானில் உள்ள மதங்கள் குறித்த ஆய்வு செய்யும் அவர் கூறுகிறார்.
மிஷனரிகளின் தற்போதைய அலை எவாஞ்சலிக்கல் சபையின் வளர்ச்சியை எதிர்க்க முயல்கிறது என்று அவர் வாதிடுகிறார்.
எவாஞ்சலிக்கல் சபைகள், கத்தோலிக்க திருச்சபையுடன் ஒப்பிடுகையில் தேவாலயங்களை நிறுவுவதற்கும், போதகர்களை அமேசானுக்கு அனுப்புவதற்கும் மிகவும் குறைவான நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஏனெனில் கத்தோலிக்க திருச்சபைகள் கடுமையான அதிகாரத்துவ அமைப்பை கொண்டுள்ளன
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பில், வடக்கு பிராந்தியத்தில் (அமேசான் அமைந்துள்ள இடம்) கத்தோலிக்க மதம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது என்பது தெரிய வந்தது. 2000 மற்றும் 2010க்கு இடையில் மக்கள் தொகையில் 71.3% இலிருந்து 60.6% ஆக அவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியது. அதே நேரத்தில் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களின் பங்கானது 19.8% இல் இருந்து 28.5% ஆக அதிகரித்தது.
மத வாழ்க்கையை வழி நடத்த கடவுளால் அழைக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது என்று மத குருமார்கள் கூறுகின்றனர்.
அமேசானிய பாதிரியார்களின் எண்ணிக்கையை குறைவாக இருந்த நிலையில், இந்தியர்கள் அந்த “இடைவெளிகளை நிரப்ப” வருகிறார்கள் என்று கூறுகிறார் ஜோவாசிம் ஆண்ட்ரேட். தற்போது பான்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் (PUC-PR) இறையியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
டோம் மௌரிசியோவின் கூற்றுப்படி, பாதிரியார்களின் “பற்றாக்குறையை” விட, பிரேசில் மதகுருக்கள் சீரற்று தன்மையில் பரவி இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழ்மையான பகுதிகள், அதிக தூரத்தில் இருப்பதால் சிலர் மட்டுமே அங்கே பணியாற்ற விரும்புகின்றனர்.
இந்தியாவில் இருந்து ஏன்?
32 ஆண்டுகளுக்கு முன்பு ஜோவாசிம் பிரேசிலுக்கு வந்தார். அவர் அங்கே சந்தித்த சில நபர்கள், அவரின் சொந்த மாநிலமான கோவாவில் இருந்து வந்தவர்களாக இருந்தனர்.
கோவா ஒரு காலத்தில் போர்த்துகீசிய காலனியாக இருந்தது. இந்து பெரும்பான்மை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் வரலாறு எங்கிலும் கிறித்துவ மதம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
சிடியோ பெரோலாவில் உள்ள துரை அருள் தாஸ், இந்திய பாதிரியார்களை அழைத்து வருமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன என்கிறார்.
இறைப்பணிக்கு அவசரமாக பாதிரியார்கள் தேவை என்பதால் நாங்கள் ஏற்கனவே கேட்டுள்ளோம். மேலும் அவர்களை எப்போது அனுப்பலாம் என்று இந்தியாவில் உள்ள திருச்சபையில் யோசித்து வருகின்றனர் என்று கூறுகிறார் துரை.
அவரும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர். 2011-ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் வசித்து வருகிறார்.
இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு, அதிகமான ஆண்களை பாதிரியார்களாகத் மாற்றுவதில் பங்காற்றுகிறது என்று கூறுகிறார் துரை. பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் ஒருவர் மத வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்
அமேசானில் வாழ்க்கை
பிரேசிலில் ஒரு மாதம் கூட வாழ முடியாத இந்திய மிஷனரி பற்றி இன்னும் நினைவில் வைத்துள்ளார் பாதிரியார் ஜேசுதாஸ்.
பிரார்த்தனையில் கவனம் செலுத்த இயலவில்லை என்று இளம் பாதிரியார் ஒருவர் கூறியதை நினைவு கூர்ந்தார் அவர். மிகவும் சிறிய ஆடைகளை பெண்கள் அணிந்து வருகின்றனர் என்பது தான் அதற்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.
“நான் இங்கே இருந்தால் என்னால் திருப்பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நானும் இங்கே வந்த போது எனக்கு அது கலாசார அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் ஆடைகளை கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழைகளாக இருக்கின்றனர் என்று நான் நினைத்தேன்,” என்று ஜேசுதாஸ் கூறுகிறார்.
ஆனால் இந்த இளம் பாதிரியாரின் கதை மட்டும் வேறுபட்டது. பொதுவாக பிரேசிலுக்கு வரும் இந்தியர்கள் இந்த கலாசாரத்தை உடனே ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எளிதாக போர்த்துகீசிய மொழி கற்றுக் கொள்ள முன்வருகின்றனர்.
மிகவும் சவாலான ஒன்று உணவு. மசாலா உணவுப் பொருட்களுக்கு பழகிய இந்தியர்கள் அங்கிருந்து மசாலா பொடிகளை எடுத்துச் செல்ல கொண்டுவர வேண்டும்
”ஆரம்பத்தில் இது ஒன்றும் எளிதாக இல்லை. நாங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு கலாசாரம் இல்லாமல், விலகி நிற்கும் கலாசாரத்தில் இருந்து வருகின்றோம். நான் இங்கே தாக்குபிடிக்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் பெரியவர். என்னை ஏன் அவர் இங்கே அழைத்து வந்தார் என்று அவருக்கு தெரியும்” என்கிறார் பாதிரியார் துரை அருள் தாஸ்.
இந்தியர்களின் இருப்பு பிரேசிலில் உள்ள தேவாலயங்களை வளப்படுத்துகிறது என்று CNBB-யைச் சேர்ந்த டோம் மௌரிசியோ டா சில்வா கூறுகிறார்.
பிபிசி நியூஸ் பிரேசில் பேசிய அனைத்து இந்திய பாதிரியார்களும் பிரேசிலை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும், குறிப்பாக அமேசானில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இன்று உள்ளூர் பழங்களான அகாய், டுகுமா, குபுவாசு மற்றும் டேபெரேபா போன்றவற்றை ருசித்து உண்பதாகவும், அமேசான் நதிகளில் போடோ மற்றும் பிரானா மீன்களை பிடிக்கக் கற்றுக்கொண்டதாகவும் எஸ்சாக் கூறுகிறார்.
எஸ்சாக்கின் சொற்பிரயோகத்தில் அமேசானிய பழமொழியும் இடம் பெற்றுவிட்டது. “ஒருமுறை நீங்கள் ஜாராக்கி மீனை சாப்பிட்டுவிட்டால், நீங்கள் இங்கிருந்து போகவே மாட்டீர்கள்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.