சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி – ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

இஸ்ரேல், கோலன் குன்றுகள், சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலன் குன்றுகளில் மொத்தமாக 30 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
  • எழுதியவர், எமிலி ஆட்கின்சன், ஜாக் பர்கெஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு.

இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு ‘புதிய அமைப்பு ‘ உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாட்கள் போருக்கு பிறகு கோலன் குன்றுகளை கைப்பற்றியது இஸ்ரேல். இஸ்ரேல் கோலன் குன்றுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என சர்வதேச சட்டப்படி கருதப்படுகிறது. அங்கு தற்போது உள்ள மக்கள் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

அசத் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கோலன் குன்றுகளை சிரியாவில் இருந்து பிரிக்கும் மோதலற்ற பகுதிக்கு இஸ்ரேலிய படையினர் முன்னேறினர்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் கட்டுப்பாடுகள் மாறியுள்ளதால் போர்நிறுத்த நடவடிக்கைகள் சீர் குலைந்துவிட்டன என்று கூறி அந்த படையினர் முன்னேறியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இருப்பினும், ஞாயிறு மாலை அன்று பெஞ்சமின் வெளியிட்ட அறிக்கையில், ”சிரியாவுடன் எந்தவிதமான மோதலிலும் ஈடுபட விருப்பம் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

“சிரியா தொடர்பான இஸ்ரேலிய கொள்கையை நாங்கள் கள நிலவரத்திற்கு ஏற்ப தீர்மானிப்போம்,” என்று அவர் கூறினார்.

கோலன் குன்றுகளில் மொத்தமாக 30 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

சர்வதேச சட்டங்களின் படி, அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களாக அறியப்படுகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்களோடு 20 ஆயிரம் சிரியா மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ட்ரூஸ் அரேபியர்கள் ஆவார்கள். இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்கு அந்த பகுதி வந்த பிறகு அங்கிருந்து செல்லாதவர்கள் ட்ரூஸ் அரேபியர்கள்.

நெதன்யாகு அந்த பகுதியை இஸ்ரேல் தன்னுடைய கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கும் என்றும் அந்த பகுதியை வளமாக மாற்றி அங்கே குடியேற்றங்களை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேல், கோலன் குன்றுகள், சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடர்ச்சியான கிளர்ச்சி மற்றும் போரால் துவண்டு போன சிரியா புதிய பிரச்னைகளை அனுமதிக்காது என்று அபு முகமது அல் ஜொலானி பேசியுள்ளார்.

எந்த சச்சரவையும் சிரியா அனுமதிக்காது

ஆனால் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுத் ஓல்மெர்ட், கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவாக்குவதற்கான தேவை ஏதும் இருப்பதாக தோன்றவில்லை என்று தெரிவித்தார்.

“நெதன்யாகு, சிரியாவுடன் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை. புதிதாக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் அதற்கு மாறாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க காரணம் என்ன?” என்று பிபிசி உலக சேவையின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார் ஓல்மெர்ட்.

”ஏற்கனவே நமக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிரியாவின் புதிய தலைவராக கருதப்படும் அபு முகமது அல் ஜொலானி ( அஹமது அல்-ஷரா), இஸ்ரேல் சிரியா நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக விமர்சனம் செய்தார். இதற்கு ஒரு நாள் கழித்து நெதன்யாகுவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹூமன் ரைட்ஸ் என்ற போர் கண்காணிப்பு குழு, டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல் 450 தாக்குதல்களை சிரியாவில் நடத்தியுள்ளது என்று கூறியுள்ளது.

அபு முகமது அல் ஜொலானி இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் சிவப்பு கோட்டை மீறிவிட்டது என்று தெரிவித்தார். மேலும் அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் கூறினார்.

மேலும் சிரியா எந்த அண்டை நாட்டினருடனும் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

சிரியா தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், தொடர்ச்சியான கிளர்ச்சி மற்றும் போரால் துவண்டு போன சிரியா புதிய பிரச்னைகளை அனுமதிக்காது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு, ”ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்றுவிடுவதை தடுக்க இந்த தாக்குதல்கள் தேவையானது” என்று வாதிட்டது.

இஸ்ரேல், கோலன் குன்றுகள், சிரியா, பஷர் அல் அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனைவி அஸ்மா அல்-அசத்துடன் சிரிய அதிபர் பஷர் அல்-அசத் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் (கோப்புப் படம்)

‘ஒரு வாய்ப்பு வழங்குவது அவசியம்’

டமாஸ்கஸ் மீது ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் சில பிரிவினர் தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு, சிரியா அதிபர் பஷர் அல் அசத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது அந்த குழுவே சிரியாவில் இடைகால ஆட்சியை அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் அறிவிக்கப்படாத தலைவராக ஜொலானி உள்ளார்

சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளின்கன், வாஷிங்கடன் நேரடியாக ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சி குழுவோடு பேசியது என்று குறிப்பிட்டார்.

ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழுவை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் சிரியா தூதர் கெய்ர் பெடெர்சென் ஞாயிற்றுக் கிழமை அன்று, சிரியாவில் பொருளாதார நிலைமைகள் சீரடைய, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தடைகள் நீக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

“பொருளாதார தடைகளுக்கு ஒரு முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பிறகு தான் சிரியாவை மீண்டும் கட்டமைக்க முடியும்,” என்று டமாஸ்கஸ் வந்த அவர் கூறினார்.

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் யசர் குலெர், சிரியாவின் புதிய அரசுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்ய துருக்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

“புதிய நிர்வாகம் என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று குலெர் கூறியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு மற்றும் பிற துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.