கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR – Augmented Reality in Education)

by wamdiness

Mrs. Thanushiya Rajasekar (SLEAS II)

கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR – Augmented Reality in Education) 

(சித்தா)

நிஜத்தில் நேரடியாகக் காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வுத் தகவல்களை முப்பரிமாணத்தில் நிகழ்நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பு மிகுவித்த மெய்ந்நிலை (Augmented Reality) எனப்படும். ஒரு மிகுவித்த மெய்ந்நிலை அமைப்பில், ஒருங்கிணைந்த டிஜிட்டல் தகவல்களை தொலைபேசி கேமராக்கள் போன்ற ஊடகத்தைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும், ஆனால் இவற்றை நிஜ உலகில் பார்க்க முடியாது.  இந்த டிஜிட்டல் தகவல்கள் முப்பரிமாண அமைப்பில் தோற்றுவிக்கப்படும்.

ஆக்மென்டட் ரியாலிட்டி அல்லது AR என்பது டிஜிட்டல் வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட பயனரின் நிகழ் நேர சூழலில் நேரடி வீடியோவை உள்ளடக்கிய தகவலை ஒருங்கிணைப்பதாகும்.  நேரடி வீடியோக்களின் வினைத்திறனை அதிகரிக்கும் போது, டிஜிட்டல் சூழலுடன் வீடியோ படத்தை ஒருங்கிணைப்பது, மற்றும் பௌதீக உலக அம்சங்களில் இருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒரு பொருளை அடையாளம் காண்பதை இது உள்ளடக்கியது மற்றும் வீடியோ படமாக கருதப்படும் எந்த வடிவத்திலும் இது கைப்பற்றப்படும். அதாவது பௌதீக உலகத்திலிருந்தே டிஜிட்டல் பொருளைக் கட்டுப்படுத்தத் தேவையான நிலைக்கு உருவாக்கப்பட்ட வீடியோ படத்தின் வினைத்திறனை அதிகரிப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். 

கல்விக்கான ஆக்மென்ட் ரியாலிட்டி

மிகுவித்த மெய்ந்நிலை (AR) செயலியின் பயன்பாடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. 1990 களில், செயலிகளில் (Apps)  பயன்படுத்தப்பட்ட AR முதன்முதலில் தொழிநுட்பத்துறைசார் கல்வியுடன் இணைக்கப்பட்ட பயன்பாடுகளுக்கும் விமானப்படையின் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. AR என்பது இப்போது கல்வித் துறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான தொழில்நுட்பமாகும். கற்றல் அனுபவங்களை அதிகரிக்க மெய்நிகர் பொருள்கள் மற்றும் உண்மையான சூழல்கள் அர்த்தமுள்ள முறையில் இணைந்திருக்கும் ஒரு கலவையான யதார்த்தத்தை உருவாக்கப் பயன்படுகின்றது. 

சமீபத்திய ஆண்டுகளில் AR ஒரு முக்கிய ஆய்வு மையமாக மாறியுள்ளது.  AR தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாட்டிற்கான மிக முக்கியமான காரணிகளில் அதற்கு விலையுயர்ந்த வன்பொருள் மற்றும் தலையில் பொருத்தப்பட்ட திரைகள் போன்ற மேம்பட்ட இயந்திரங்கள் தேவைப்படாது என்பது முக்கியமானவையாகும். சியாங், யாங் ரூ ஹ்வாங்கின் கூற்றுப்படி   மிகுவித்த மெய்ந்நிலை (AR) இப்போது கல்வித் துறையில்  பல்கலைக்கழக  மட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  Ferrer -Torregrosa   (2015) என்பவரும் மிகுவித்த மெய்ந்நிலை (AR) இப்போது வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.  கல்வித் துறையில் இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்பான கற்கைகளுள்ள பல்வேறு  கல்வித்துறைகளை உருவாக்க முடியும். இவை காலப்போக்கில் அறிவாற்றல் மிகுந்த குடிமக்களை உருவாக்கும். இது அறிவாற்றல் மிகுந்த நகரங்களையும் அதில் தகவல் அமைப்புகளிலிருந்து போக்குவரத்து தொழில்நுட்பங்கள் வரை, நூலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலை முதல் பிற சமூக சேவைகள் வரை ஒவ்வொரு கட்டமைப்பும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றகரமான கட்டமைப்பை உருவாக்க இம் மிகுவித்த மெய்ந்நிலை உடனிணைந்த கற்றல் உதவிபுரியும். மிகுவித்த மெய்ந்நிலை (AR) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கலாச்சார கட்டமைப்பின் புரிதலை அதிகரிப்பதற்கும், நேரடி சூழல் அமைப்புகளில் கற்றவர்களின் அனுபவங்களை அதிகரிப்பதற்கும் சாத்தியமான பலன்களை வழங்குகின்றது என்பதே இதன் முக்கிய தொடர்பாகும்.

மிகுவித்த மெய்ந்நிலை (AR) படிப்படியாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக உட்படுத்தல் கல்வியில் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதோடு இது அனைவராலும் ஆய்வு மற்றும் அனுபவத்தின் மூலம் சமமான நிலையில் கற்றலை மாற்றியமைக்கிறது.  வளர்ச்சியடைந்த நாடுகளின் பல்கலைக்கழகக் கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR) இனைப் பயன்படுத்துவது தொடர்பான கற்கைநெறிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பல்வேறு பாடத்துறை சார்ந்து மிகுவித்த மெய்ந்நிலை (AR) யின் பயன்பாட்டினைச் சுருக்கமாக நோக்குவோம். 

• மொழிக் கற்றலில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)                                                    

சமீபத்தில், சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (PISA)  முடிவுகளின்படி OECD நாடுகளில் கற்பவர்களில் 8% பேர் மட்டுமே சிறந்த வாசகர்களாக உள்ளனர்.  வகுப்பறைக்குள் மிகுவித்த மெய்ந்நிலை (AR) தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவது மூலம் வாசிப்பு உள்ளிட்ட கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் அனிமேஷன்கள், ஒலிகள், வீடியோக்கள் மற்றும் படங்களின் பயன்பாடு மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவங்கள் மேம்படுத்தப்பட்டு வாசிப்புத்திறனை அதிகரிக்கச் செய்யலாம். வாசிப்புத்திறனை மேம்படுத்தலானது மொழிக்கல்வியில் மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் ஒரு வழிமுறையாகும்.

கற்பவரின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற உந்துதல்களைப் புரிந்துகொண்டு, நல்ல ஒன்றிணைக்கப்பட்ட சூழ்நிலையை மிகுவித்த மெய்ந்நிலை (AR) ஊடாக உருவாக்குவதன் மூலம் அதைச் செயல்படுத்த வேண்டும்.  இவ் அதிகரித்த உண்மை நிலையானது இயற்கையான சூழலில் தடையின்றி கற்பதற்கு உதவும் திறனையும் கொண்டுள்ளது.  இடம்சார்ந்த மொழிக்கற்றல், மொழி இணைப்புகள், நீண்ட கால நினைவாற்றல், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் என்பனவற்றையும் கற்போனிடம் ஏற்படுத்தி அதிவேகமான கல்வி அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இத் தொழில்நுட்பம் வகுப்பறைக்கு வெளியே நடக்கும் கற்றலை செயல்படுத்துகிறது.

• ICT கல்விக்கான மிகுவித்த மெய்ந்நிலை (AR) 

நிகழ்நிலை (Online)  மற்றும் மிகுவித்த மெய்ந்நிலை (AR) அடிப்படையில் கலப்பு கற்றல் அணுகுமுறையை ICT கல்வியில் பயன்படுத்தும் போது கற்பவர்களுக்கு கல்வி கற்பதில் ஒரு தனித்துவமான விளைவை ஏற்படுத்துகின்றது. மிகுவித்த மெய்ந்நிலை (AR) பயன்பாடுகளை ஒரு ICT கல்விப் பாடத்திட்டத்தில் இணைக்கும்போது, கல்வி இலக்கு, கட்டமைப்பு, மட்டுமன்றி கையடக்கத் தொலைபேசித்திரை சார்ந்த கற்றலாகக் கூட இத் தொழில்நுட்பம் இணைந்துள்ளதால் அதிகளவில் வினைத்திறனான கற்றல் அனுபவங்களை வழங்கக் கூடியதாகயுள்ளது.

• விஞ்ஞான கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)                                                                                        பௌதீக – விலையுயர்ந்த அல்லது போதிய ஆய்வக உபகரணங்கள், உபகரணங்களின் பழுதுகள், பிழைகள், சில சோதனை சூழ்நிலைகளை உருவகப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிரமம்  போன்ற விஞ்ஞான துறைகளின் உள்ளார்ந்த பல சிக்கல்களை சமாளிக்க மிகுவித்த மெய்ந்நிலை (AR) ஒரு வெற்றிகரமான அணுகுமுறையாக இருக்கும்.

சுகாதார விஞ்ஞானம், மருத்துவ உடற்கூறியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பற்றி கற்றுக்கொள்வதில், மிகுவித்த மெய்ந்நிலையை (AR)  ஒரு கற்றல் கருவியாகப் பயன்படுத்துவதும் மிகவும் உதவியாக இருக்கும்.  தேவையான கட்டமைப்பை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டிய சூழலில், இந்த கோணங்களைக் காட்டும் கருவியைப் பயன்படுத்தி உடற்கூறியல் கற்றல் சிறப்பாகச் செய்யப்படுகிறது.  மிகுவித்த மெய்ந்நிலை (AR) என்பது கோணங்களைக் காண்பிப்பதற்கான சிறந்த கருவிகளில் ஒன்றாகும். ஏனெனில் மிகுவித்த மெய்ந்நிலை (AR) மூலம் மேம்படுத்தப்பட்ட பொருள் ஒன்று எவ்வாறு சுழலும் மற்றும் சூழலில் காண்பிக்கப்படும் என்பதை கற்பவர்களால் எளிதாகக் கையாள முடியும்.  பாரம்பரிய கற்பித்தல் முறைகளுடன் ஒப்பிடுகையில் மெய்நிகர் உண்மை (VR) மற்றும் மிகுவித்த மெய்ந்நிலை (AR) ஆகியவை மேம்பட்ட கற்பித்தல் சூழலை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.  3D கற்றல் சூழல்கள் கற்பவர்களின் உந்துதல் / ஈடுபாட்டை அதிகரிக்கலாம், இடஞ்சார்ந்த தகவல்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தலாம், கற்றல் சூழலை மேம்படுத்தலாம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப திறன்களை உருவாக்கலாம்.  முந்தைய பல நூற்றாண்டுகளில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை உலகில் ஒரு தொழில்நுட்ப புரட்சியை அனுபவித்தது. மெய்நிகர் உண்மை (VR) மற்றும் மிகுவித்த மெய்ந்நிலை (AR) ஆகியவற்றின் முன்னேற்றங்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை, உடற்பயிற்சி மற்றும் குடியுரிமைக் கல்வி ஆகியவற்றினை ஒருங்கிணைப்பதற்கான தற்போதைய சிறந்த வழிமுறைகளாகும்.

• சமூக அறிவியல் மற்றும் வரலாற்றுக் கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)                              மிகுவித்த மெய்ந்நிலை (AR) தொழில்நுட்பம் மெய்நிகர் உருப்படிகளை நிஜ உலகப் படங்களுடன் தடையின்றி இணைக்கப் பயன்படுகிறது.  மெய்நிகர் உருப்படிகளினூடு தொலைதூர பௌதீக அனுபவத்தை இது வழங்கும். அதாவது தனிநபர்கள் அல்லது பொருட்களுடன் உடல் ரீதியாக இல்லாமல் ஊடாடக் கூடியதாக தொடர்பு கொள்ள முடியும் என்பதைக் குறிக்கிறது.  உதாரணமாக வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியங்களை மிகுவித்த மெய்ந்நிலை (AR) மூலம் கற்பதன் மூலம் குறித்த ஓவியங்கள் உருவாக்கப்பட்ட சூழலில் அல்லது அதன் காலப்பகுதியிலேயே நுழைந்து கற்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம். அதாவது சமூக விஞ்ஞானம் மற்றும் வரலாற்றைக் கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றின் விதிமுறைகளை மிகுவித்த மெய்ந்நிலை (AR) தொழில்நுட்பம் மாற்றுகிறது என்றே கூறலாம்.

• தொழில் பயிற்சிக் கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)                                                         கணினி உருவாக்கிய சூழலுடன் உண்மையான நேரடி சூழலை ஒருங்கிணைத்தல், உரையாடலை வழங்குதல் மற்றும் 3D உருப்படிகளைக் காட்டுதல் தூண்டலை அதிகரித்தல் மூலம் தொழில் பயிற்சியாளர்களின் உள ஆற்றற் திறன்களை வளர்ப்பதற்கு உண்மையில் மிகுவித்த மெய்ந்நிலை (AR) உதவியாக அமைகின்றது. பயிற்சிகளில் பல்வேறு தூண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில்துறை அடிப்படையிலான பயிற்சியின் முறைகளை எளிதாகப் பிரதிபலிக்க முடியும்.  மூன்றாம் நிலைத் தொழிற்கல்வி நிறுவனங்களில் கற்பவர்களின் பரந்த அளவிலான பயிற்சித் தேவையின் காரணமாக கற்பிப்பவர்கள் குறிப்பிடத்தக்க சவால்களைக் எதிர்நோக்குகின்றனர். உதாரணமாக வாகன பராமரிப்பு தொழிற்பயிற்சி நெறியில் பயன்படுத்தப்படும் Paint – cAR  செயலி (App) வாகனத்தில் நிறப்பூச்சுப் பூசுவதைக் கற்பிக்கும் ஒரு கையடக்கமான, Mobile (அசையும்), மிகுவித்த மெய்ந்நிலை (AR) செயலி (App) ஆகும்.

• விசேட கல்வியில்  மிகுவித்த மெய்ந்நிலை (AR)                                                                               விஷேட தேவையுடைய கற்றவர்கள் உலகளவில் கணிசமாகவும் மற்றும் மக்கள் தொகையில் அதிக சதவீத அடிப்படையிலும் வளர்ந்து வருகின்றனர்.  பாரம்பரிய கற்பித்தல் முறைகள் அவர்களின் குறிப்பிட்ட கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.  அதேவேளை நடமாடும் மிகுவித்த மெய்ந்நிலை (AR) மற்றும் அதன் தனி அம்சங்கள் இந்த நிலையை சரிசெய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.  தனித்துவமான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அதிநவீன காட்சி தொழில்நுட்பத்தை அறிவுறுத்தல் செயல்பாடுகளுடன் இணைப்பதற்கான புதிய வழியை இவ் மிகுவித்த மெய்ந்நிலை (AR) வழங்கி இவர்களுக்கான சிறந்த மேம்பட்ட கற்றல் அனுபவத்தையும் அதன் மூலமான கறறல் இடமாற்றத்திற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.

• கணிதக் கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)                                     ஒரு ஒருங்கிணைந்த STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கற்றல் அறுகுமுறையானது நிஜ உலகச் சூழ்நிலைகளில் மாணவர்களின் ஆர்வத்தையும், கற்றலில் பங்கேற்பையும் வளர்க்க உதவுகின்றது. நிஜ உலக STEM சூழ்நிலைகள் இயற்கையாகவே ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள STEM உள்ளடக்கங்கள் என்பன கல்வியாளர்களால் அரிதாகவே கற்பிக்கப்படுகின்றன.  இந்த  STEM உள்ளடக்கப் பாடங்களில் ஒன்று கணிதம். உதாரணமாக, கணிதத்தில் கேத்திர கணித திண்மங்கள் பற்றிக்  கற்றுக்கொள்வதில் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக மிகுவித்த மெய்ந்நிலை (AR) தொழில்நுட்பத்தை கற்பித்தல் செயல்பாடுகளுடன் இணைத்து கற்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கான சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கமுடியும். இது ஆய்வுரீதியாகவும் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

• ஆரம்பக் கல்வியில் மிகுவித்த மெய்ந்நிலை (AR)

மிகுவித்த மெய்ந்நிலை (AR) தொழில்நுட்பம் கல்வியின் வெளியீடுகளை கணிசமானளவு மேம்படுத்த முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.  அதனடிப்படையில், இலக்க முறை (Digital) அடிப்படையிலான விளையாட்டு கற்கைகள், சூழல் சார்ந்த விடயங்களைக் கற்பித்தல்.  உதாரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய கற்கைகள் போன்ற நிஜ உலக உண்மையான விடயங்களைக் கற்பவர்கள் பங்கேற்றலுடன் கற்க  மிகுவித்த மெய்ந்நிலை (AR) உதவுகிறது.

அந்தவகையில்

1. நிஜ மற்றும் கற்பனையுலக இணை கற்றல் அனுபவம்

2.    முப்பரிமாண கற்பனைப் பொருட்களுடன் இணைந்த கற்றல்

3.    கற்பவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கற்றல் செயல்பாடுகளை  

       திருப்திகரமாக முன்னெடுத்தல்

4. கற்றவர்கள் இலகுவில் கற்றலைப் புரிந்து கொள்தல்

5. கற்றல் திறனை மேம்படுத்தல்

6. கற்றலுக்கான சிறந்த தூண்டலை ஏற்படுத்தல்

7. வினைத்திறனான கற்றல் அனுபவத்தை வழங்குதல்

8. பிரயோகரீதியான கற்றலை வழங்குதல்

போன்ற பல்வேறு சிறப்பான விடயங்களைக் கற்போனுக்கு வழங்கவல்ல இம் மிகுவித்த மெய்ந்நிலை (AR) கல்வியில் ஓர் சிறப்பான கற்றல் கற்பித்தல் தொழிநுட்பம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

தொடர்புடைய செய்திகள்