இந்தியாவில் இராஜதந்திர சந்திப்புக்களைத் தொடங்கினார் அனுரகுமார திஸாநாயக்க

by wamdiness

இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்று (15) புதுடெல்லியில் உள்ள ITC மௌரியா ஹோட்டலில் இந்திய முக்கிய அதிகாரிகளை சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இதில் இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோர் அடங்குவர்.

இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் சீதாராமன் ஆகியோருக்கு இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பது, இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவது மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவற்றையும் இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளடக்கியது.

கலாநிதி ஜெய்சங்கருடனான ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் சந்திப்பானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்காக இந்தியாவின் பரந்த சந்தையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலா, முதலீடு மற்றும் எரிசக்தி துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை டாக்டர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார்.

கடற்றொழில் துறையை முன்னேற்றுதல் மற்றும் இலங்கையில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பது போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பின்னர், ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவலைச் சந்தித்து பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதியுடன் இலங்கை அதிகாரிகள் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெரேரா ஆகியோர் சந்திப்பில் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்