ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு ! on Monday, December 16, 2024
மூன்று உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர்.
இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார்.
இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார்.
அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.