- எழுதியவர், ஒனுர் எரம்
- பதவி, பிபிசி உலக சேவை
உலகில் ஆண்டு முழுவதும் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். எதிர்காலத்தில் அது குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
கடந்த பத்தாண்டுகளாக புலம் பெயர விரும்பும் மக்களுக்கு பல தடைகள் நிலவுகின்றன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய முதல் ஆட்சியின் போது “சுவரை எழுப்புவோம்,” என்று குரல் கொடுத்தார். பிறகு கொரோனா பெருந்தொற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தடைகளும், பிரெக்ஸிட்டும் அமெரிக்கா – பிரிட்டன் இடையே மக்களின் சுதந்திரமான இயக்கத்திற்கு முடிவு கட்டின.
புலம் பெயரும் மக்களின் இலக்குகளாக உள்ள அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் ஏற்பட இருக்கும் முக்கிய அரசியல் மாற்றங்களோடு 2025-ஆம் ஆண்டு ஆரம்பமாக உள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வர உள்ளார்.
பிப்ரவரியின் கடைசியில் ஜெர்மனியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடுமையான புலம்பெயர் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சியினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டிசம்பர் 18-ஆம் தேதி அன்று சர்வதேச புலம்பெயர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் புலம்பெயர்தலில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
உலகளாவிய புலம்பெயர் நிகழ்வுகள் எவ்வாறு உள்ளது?
கடந்த முப்பது ஆண்டுகளில் உலகம் முழுவதும் புலம் பெயரும் நிகழ்வு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு புலம் பெயரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
“நாங்கள் 25 ஆண்டுகால புலம் பெயர் தரவுகளை மதிப்பாய்வு செய்கிறோம். அதே போன்று மனித மேம்பாட்டு குறியீட்டு தரவுகளையும் (Human Development Index) ஆய்வுக்கு உட்படுத்தினோம். மத்திய, உயர்ந்த மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளை கொண்ட நாடுகளுக்கு, வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்வது மிகவும் கடினமாக உள்ளது என்பதை நாங்கள் அவதானித்தோம்” என்கிறார் மேரி மெகலிஃப். அவர் ஐநாவின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் புலம்பெயர்வு ஆராய்ச்சி மற்றும் பதிப்பகத்தின் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார்.
“இது மிகவும் தெளிவான ஒரு போக்கை காட்டுகிறது. புலம்பெயர்வுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பாதைகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன,” என்றார் அவர்.
ஒரு செல்வ செழிப்பான நாட்டில் இருந்து மற்றொரு செல்வ செழிப்பான நாட்டிற்கு செல்வது தான் சர்வதேச அளவில் அதிகமாக நடைபெறும் புலம் பெயர்வாக உள்ளது என்று மேரி கூறுகிறார்.
சுதந்திரமாக இயங்க தேவையான ஏற்பாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS), தெற்கத்திய பொதுச்சந்தையாக அறியப்படும் மெர்கோசுர் (MERCOSUR) போன்ற கூட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர்வுகள் எளிமையாக நடைபெறுகின்றன என்று கூறுகிறார் அவர். தெற்காசியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயரும் போக்கு அதிகரித்து உள்ளது என்றும் அவர் கூறினார்.
2022-ஆம் ஆண்டு 70 லட்சம் சர்வதேச மாணவர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள 60 லட்சம் சிரிய மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிரிய அதிபர் பஷர் அல்-அசத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த பின், துருக்கி எல்லையில் சிரிய மக்கள் நீண்ட வரிசையில் தங்களின் வீடுகளுக்கு திரும்ப காத்திருக்கின்றனர்.
சிரியாவில் பாதுகாப்பு விவகாரங்கள் எப்படியாக மாறும்? நிச்சயமற்ற சூழலைக் கொண்டுள்ள சிரியாவில் ஆட்சி அதிகாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுவதால் இந்த போக்கு இப்படியே தொடருமா என்பதை உறுதியாகக் கூற இயலாது.
டிரம்பின் இரண்டாவது ஆட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் கட்சியினருக்கு புலம் பெயர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரச்னையாக உள்ளது.
உலக அரங்கில் அமெரிக்கா, புலம்பெயரும் மக்களின் முக்கிய இலக்காக உள்ளளது. இந்த புலம் பெயர் விவகாரமே 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது.
டிரம்பின் பேரணிகளில், ‘சுவர்கள் கட்டி எழுப்பப்படும்’ என்ற முழக்கம் கேட்ட வண்ணம் இருந்தது. சட்டத்திற்கு புறம்பாக மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் வருவதை தடை செய்வதற்காக எல்லையில் சுவர் கட்டப்படும் என்பதை குறிக்கும் வகையில் அந்த கோஷம் எழுப்பப்பட்டது.
தன்னுடைய முதல் ஆட்சியின் போது அந்த சுவரின் நீளத்தை டிரம்பால் அதிகரிக்க இயலவில்லை. ஆனால் புலம்பெயர்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
அதில் முதலாவது, அவர் 2017-ஆம் ஆண்டு அதிபரான பிறகு 7 நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்கா வருவதற்கு பயணத்தடை விதித்தார். இரான், இராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, மற்றும் ஏமன் ஆகிய அந்த 7 நாடுகளும் இஸ்லாமியர்களை பெரும்பான்மையைக் கொண்ட நாடுகளாக உள்ளன. அந்த முடிவு, ‘இஸ்லாமியர்களுக்கு தடை’ என்று பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது.
இந்த உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட போது, இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த 2 ஆயிரம் பேர், விமானங்களில் இருந்து இறங்கிய போது அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அடுத்த கொள்கை ரீதியான மாற்றம், டைவர்சிட்டி இமிகிரண்ட் விசா திட்டத்தை ரத்து செய்தது. ஆண்டுக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அமெரிக்காவில் வாழவும் பணியாற்றவும் உரிமையை வழங்கிய திட்டம் இது.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில், அமெரிக்காவின் வேலையாட்கள் சந்தையை (protecting the US labour market) பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய முடிவை மேற்கொண்டதாக தன்னுடைய ஆட்சியின் இறுதி ஆண்டில் அவர் தெரிவித்தார்.
ஆனால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவில் வாழ காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பேரடியாக அமைந்தது இந்த முடிவு.
இந்த குலுக்கலில் பங்கேற்க என்னுடைய பெயரை 2019-ஆம் ஆண்டு கொடுத்தேன். முடிவுகள் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. நான் அதில் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார் 27 வயதான இர்மக். அவர் துருக்கியைச் சேர்ந்தவர். (பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“இருபாலின ஈர்ப்பு கொண்ட, கடவுள் நம்பிக்கையற்ற பெண்ணான நான், என்னுடைய நாட்டில் இயல்பாக இருப்பதும் பேசுவதும் பாதுகாப்பானதாக தோன்றவில்லை. அமெரிக்காவில் எனக்கு பிடித்தது என்னவென்றால் தனியுரிமைக்கு அங்கே இடம் உண்டு. மரியாதை உண்டு. அமெரிக்காவில் என்னுடைய வாழ்க்கை எளிமையானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்” என்று கூறுகிறார் இர்மக்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ரீதியாக போராடிய மக்களோடு இணைந்து தன்னுடைய போராட்டத்தை துவங்கினார் இர்மக். ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கு தோல்வியை தழுவ, அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்ற பலரின் கனவு பொய்த்துப் போனது.
டிரம்ப் நிர்வாகம் ஒரு பொது சுகாதார நடவடிக்கை போல் தோன்றும் ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை செயல்படுத்தியது. இது புகலிடம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் உட்பட பலரையும் அந்த நாட்டில் இருந்து விரைவாக வெளியேற்ற அமெரிக்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
கிட்டத்தட்ட 4,00,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, டொனால்ட் டிரம்ப் ஆட்சி நிறைவடைந்த காலகட்டத்தில் 4 லட்சம் பேர் தடுத்து வைக்கப்பட்டு பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
டிரம்பின் இரண்டாம் ஆட்சியில் என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் வைத்த முக்கிய வாக்குறுதி பாரிய அளவில் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்தவர்களை நாடு கடத்துவது.
“இது விலைவாசி குறித்த கேள்வி அல்ல. எங்களுக்கு வேறு வழிகள் இல்லை,” என்று டிரம்ப் கூறினார். தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அமெரிக்க ராணுவத்தினரை தன்னுடைய திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
10 லட்சம் பேரை வெளியேற்றுவது ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜே.டி. வான்ஸ் கூறினார். இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
“10 லட்சமாக அந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஆரோன் ரெய்ச்லின்-மெல்னிக் கூறுகிறார். அவர் அமெரிக்க குடியேற்ற கவுன்சிலின் கொள்கை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பல நூறு பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையையும் டிரம்பால் வெற்றிகரமாக குறைக்க முடியும்.
ஜெர்மனியில் எத்தகைய மாற்றங்கள் நிகழும்?
உலகில் இரண்டாவது முக்கிய புகலிடமாக இருக்கும் ஜெர்மனியில் புதிய அரசு, 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும்.
வேலைக்கு தேவையான ஆட்களை நியமிக்க, குடியேற்றம் தொடர்பான கொள்கைகளை சமீப காலங்களில் எளிமையாக்கியது ஜெர்மனி. ஆனால் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நிகழும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
குடியேற்ற கொள்கைகளை ஜெர்மனி அரசாங்கம் சமீபத்தில் ஏற்படுத்தியது. ஆனால் ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சி (Social Democratic Party) கருத்துக் கணிப்பில் மூன்றாம் இடமே வகிக்கிறது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரி கட்சியான ஏ.எஃப்.டி. கட்சிகளுக்கு ஐந்து வாக்காளர்களில் ஒருவரின் ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போது தேர்தல் களத்தில் முதன்மை பெற்றுள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, சட்டத்திற்கு புறம்பாக குடியேறுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரசாரங்களில் கூறி வருகிறது. அந்த கட்சி மட்டுமின்றி தீவிர வலதுசாரியான ஏ.எஃப்.டி. மற்றும் தீவிர இடதுசாரியான பி.எஸ்.டபிள்யூ போன்ற கட்சிகளும் இதையே வலியுறுத்தி பிரசாரம் செய்வதாக கூறுகிறார் விக்டோரியா ரியேடிக். ஜெர்மன் கவுன்சில் ஆஃப் ஃபாரின் ரிலேஷன்ஸ் செண்டர் ஃபார் மைக்ரேஷன் அமைப்பின் தலைவராக அவர் இருக்கிறார்.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, சட்ட ரீதியான குடியேற்றங்களுக்கு எதிராக குறைவாகவே விமர்சனங்களை முன்வைக்கின்றன ஜெர்மானிய கட்சிகள். ஜெர்மனியில் பத்தில் 6 பேர் மேற்கூறிய மூன்று கட்சிகளை ஆதரிக்கின்றனர்.
இந்த அரசியல் சூழல் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் தேர்தலைத் தொடர்ந்து கடுமையான குடியேற்றக் கொள்கைகளாகவும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கமாகவும் மாறும் என்பது உறுதி என்று ரியேடிக் கூறுகிறார்.
மற்ற நாடுகளில் நிலை என்ன?
ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறுவது சிக்கல் மிக்கதாக இருக்கலாம். மற்ற நாடுகளிலும் கூடுதல் தடைகள் ஏற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய கூட்டமைப்புகளில் உள்ள நாடுகள் மற்றும் தெற்காசியா முதல் வளைகுடா நாடுகளுக்கிடையே நடைபெறும் புலம்பெயர்வில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
“தெற்காசியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நடைபெறும் புலம்பெயர்வு, பணிக்கான புலம்பெயர்வாக உள்ளது. அங்கு தேவை தொடர்வதால் இந்த புலம்பெயர்வு நீடிக்கும். தொழிலாளராக புலம்பெயர்ந்தோர் வளைகுடா நாடுகளில் நம்ப முடியாத அளவிற்கு முக்கியமானவர்கள் மற்றும் அவர்கள் முக்கியமான சேவைகளை செய்கிறார்கள்,” என்கிறார் புலம் பெயர்தல் பற்றிய சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த மேரி.
“நான் எந்த மாற்றங்களையும் பார்க்கவில்லை. முக்கியமாக பெரிய அளவில் இடம் பெயரும் மக்களைக் கொண்ட நாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயமாக எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து அவர் மேலும் பேசும் போது, மக்கள் மத்தியில் குடியேற்றம் தொடர்பாக அவநம்பிக்கையை ஏற்படுத்த தவறான தகவல்களை உள்ளடக்கிய பிரசாரங்கள் நடைபெறுவதையும் மேற்கோள் காட்டினார்.
“தவறான செய்திகள் மூலம் மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதை நான் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கின்றேன்,” என்றும் அவர் கூறினார்.
போர் மற்றும் இயற்கை பேரிடர்கள் காரணமாக ஏற்படும் புலம் பெயர்வுகளை தவிர்த்து சர்வதேச புலம்பெயர்தல் கணிக்கக் கூடியதாகவும் நிலையாகவும் தான் உள்ளது. அவை கொள்கை அளவில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்பையில் தாக்கத்தை கொண்டுள்ளது.
சர்வதேச அளவிலான புலம்பெயர்வு என்பது விதிவிலக்கானது என்பதை நாங்கள் அறிவோம். ஏன் என்றால் பெரும்பாலான மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளிலேயே வாழ்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.