- எழுதியவர், ஆலிஸ் டேவிஸ்
- பதவி, பிபிசி
-
ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து பின்னர் ரகசியங்களை அம்பலப்படுத்துபவராக மாறிய சுச்சிர் பாலாஜி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 வயதான சுச்சிர் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பதை பார்க்குமாறு தங்களுக்கு வந்த அழைப்பதை தொடர்ந்து நவம்பர் 26-ஆம் தேதி அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ உடற்கூராய்வு அலுவலகம் அவரது மரணத்தை தற்கொலை என்று தீர்மானித்துள்ளது. இந்த மரணத்தில் சதித்திட்டம் தொடர்பாக எந்த ஆதாரங்களும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்-ஏஐயின் செயல்பாடுகளுக்கு எதிராக சுச்சிர் பாலாஜி பகிரங்கமாக பேசிவந்தார்.
தனது தரவு சேகரிப்பு செயல்பாடுகள் தொடர்பாக பல வழக்குகளை ஓபன் ஏஐ எதிர்கொண்டுள்ளது.
அக்டோபரில், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் சுச்சிர் பாலாஜியுடன் ஒரு நேர்காணலை வெளியிட்டது. ஓபன் ஏ.ஐ நிறுவனம் தனது பிரபல ChatGPT எனப்படும் ஆன்லைன் சாட்பாட்டை உருவாக்கும்போது அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக அவர் நேர்காணலில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, “ChatGPT-யை உருவாக்க ஓபன்-ஏஐ நிறுவனம் பதிப்புரிமை பெற்ற தரவைப் பயன்படுத்தி, சட்டத்தை மீறியது. ChatGPT போன்ற தொழில்நுட்பங்கள் இணையத்தை சேதப்படுத்துகின்றன”, என்ற முடிவுக்கு சுச்சிர் பாலாஜி வந்ததாக அந்த கட்டுரை குறிப்பிடுகின்றது.
பொதுவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்தே தங்களது செயற்கை நுண்ணறிவு மாடல்கள் பயிற்சி பெறுவதாக ஓபன்-ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது
கடந்த ஆகஸ்ட் மாதம், ஓபன் ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறிய சுச்சிர் பாலாஜி அதற்கு பின் தனியாக பணியாற்றிவருவதாக நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
அவர் கலிபோர்னியாவின் குபடினோவில்வளர்ந்தார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.
“இன்று இந்த நம்பமுடியாத சோகமான செய்தியை கேட்டதும் மனமுடைந்து போனது. இந்த கடினமான நேரத்தில் சுச்சிரின் அன்புக்குரியவர்களுக்காக எங்களது மனம் வருந்துகிறது”, என்று ஓபன்-ஏஐ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக சிஎன்பிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் உட்பட பல அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் செய்தி நிறுவனங்களும் ஜான் க்ரிஷாம் போன்ற பிரபல எழுத்தாளர்களும், ஓபன் ஏஐ நிறுவனம் தனது மென்பொருளுக்கு பயிற்சி அளிக்க தங்களது படைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக கூறி வழக்கு தொடுத்துள்ளனர்.
அதன் மென்பொருள்,”நியாயமான முறையில் செயல்படுகிறது. சர்வதேச பதிப்புரிமை சட்டங்களை பின்பற்றி செயல்படுகிறது. புதுமைகளை வளர்ப்பதை ஆதரிக்கிறது” என்று ஓபன்-ஏஐ நிறுவனம் நவம்பர் மாதம் பிபிசியிடம் தெரிவித்தது.
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.