‘தனிப்பட்ட முறையில் அன்பு, கடுமையான விமர்சனம்’ – நெருக்கடி காலத்தில் காங்கிரசை வழிநடத்திய ஈவிகேஎஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவு, காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நெடிய அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இரண்டு முறை இருந்திருக்கிறார்.

இந்த இரு காலகட்டங்களிலும், அரசியல் நிகழ்வுகள் மற்றும் விவாதங்களில் விளிம்பில் இருந்த தமிழக காங்கிரஸை தவிர்க்க முடியாத முக்கியப் புள்ளியாக நகர்த்திக்காட்டினார் இளங்கோவன்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு முறை மத்திய இணையமைச்சர் ஆகிய பதவிகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வகித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக அவரது துடிப்புமிக்க செயல்பாடுகளே, அவரது முக்கிய அடையாளமாக இருந்துவந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தி.மு.கவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ஈ.வே.கி. சம்பத் – சுலோசனா ஆகியோரின் மகனாக 1948ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார் இளங்கோவன்.

பள்ளிக் கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் படித்த அவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் காங்கிரஸின் மாணவரணி செயலாளராக இருந்த இளங்கோவன், அதன் பின்னர் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என உயர்ந்தார்.

ஈ.வி.கே. சம்பத் 1977ல் மறைந்த நிலையில், கட்சிக்குள் அவரது நண்பராக இருந்த சிவாஜி கணேசனின் ஆதரவாளராக தீவிரமாகச் செயல்பட்டார் இளங்கோவன்.

சிவாஜியின் பரிந்துரையின்பேரில் 1984-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இளங்கோவனுக்குக் கிடைத்தது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் இளங்கோவன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் திரும்பிய இளங்கோவன்

ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசன் காங்கிரசை விட்டுவிலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் துவங்கியபோது, அவருடன் இணைந்துகொண்டார் இளங்கோவன். 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஜானகி அணியுடன் தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியின் சார்பில், பவானி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி தோல்வியடைந்தார் இளங்கோவன்.

இந்தத் தேர்தலில் கிடைத்த தோல்வியையடுத்து தனது கட்சியைக் கலைத்த சிவாஜி கணேசன், ஜனதா தளத்தில் இணைந்தார். ஆனால், ஜனதா தளத்திற்குச் செல்ல விரும்பாத இளங்கோவன், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். இதற்குப் பிறகு இறுதிவரை காங்கிரஸ்காரராவே வாழ்ந்தார் அவர்.

1996 பொதுத் தேர்தல் நெருங்கியபோது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் இருந்தது. மூத்த தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி, திவாரி காங்கிரசிற்குச் சென்றுவிட்டார். காங்கிரஸ் – அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து மூப்பனார், ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து பிரிந்து, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கியிருந்தனர்.

அப்போதும் இளங்கோவன் காங்கிரசைவிட்டு வெளியேறவில்லை. அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தலைமை சொன்னபடி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார் இளங்கோவன். ஆனால், இந்த முறையும் தோல்வியே கிடைத்தது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2009 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இளங்கோவன்

1990களின் பிற்பகுதியில் நெருக்கடி மேலும் முற்றியது. 1998, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் மோசமான தோல்வி, பெருந்தலைவர்கள் வெளியேறியிருந்தனர் என்ற நிலையில்தான் 2000வது ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

அடுத்த சில மாதங்களிலேயே தனது செயல்பாட்டால் அரசியல் களத்தில் விறுவிறுப்பைக் கூட்டினார் அவர்.

“ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2000களின் துவக்கத்தில் தலைவராக இருந்தபோது, அவர் அலுவலகத்திற்கு வருகிறார் என்றால் செய்தியாளர் சந்திப்பு இருக்கிறதோ, இல்லையோ செய்தியாளர்கள் அங்கே இருப்பார்கள். தொண்டர்களும் குவிந்திருப்பார்கள். அந்த இடமே ஒரே கலகலப்பாக இருக்கும். தலைவருக்கான அறைக்குள் உட்கார்ந்திருக்காமல், எங்கெங்கிருந்தோ வந்திருக்கும் தொண்டர்களுக்கு நடுவில் நின்று பேசிக்கொண்டிருப்பார். அதுதான் அவருடைய முக்கியமான அடையாளமாக இருந்தது” என அந்த நாட்களை நினைவு கூர்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய இணை அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன்

மூன்றாவது அணி

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.கவுடன் உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்தத் தருணத்தில் துணிச்சலாக கருத்துகளைச் சொன்னதோடு, மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தார் இளங்கோவன்.

“தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைவரையும்விட சோனியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது எனது கருத்து. இது ஏனோ மேலிடத்திற்குப் புரியவில்லை” என அந்தத் தருணத்தில் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் இளங்கோவன்.

விரும்பியபடியே, அடுத்துவந்த உள்ளாட்சித் தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கினார்.

அவரது இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் இருந்தது. சென்னை மேயருக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான வசந்தகுமார், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வென்றார். 3 நகராட்சிகளையும் 20 பஞ்சாயத்துகளையும் அக்கட்சி பிடித்தது. காங்கிரசிற்கு 15 சதவீத வாக்குகள் கிடைத்தன.

அதேபோல, 2001-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு த.மா.கா. – காங்கிரஸ் இணைப்பு குறித்து பேச்சுகள் அடிபட ஆரம்பித்திருந்தன. ஆனால், ஜி.கே. மூப்பனார் மறைந்து சில நாட்களில், சத்யமூர்த்தி பவன் உள்ளிட்ட சொத்துகளை நிர்வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளைக்கான டிரெஸ்டிகளை சோனியா காந்தி அதிரடியாக நியமித்தது, த.மா.கா. – காங்கிரஸ் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தத் தருணத்தை மிக சிறப்பாகக் கையாண்டு, முரண்பாடுகள் முற்றாமல் பார்த்துக் கொண்டார் இளங்கோவன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தார் இளங்கோவன்.

“தமிழ்நாடு காங்கிரசின் மிகக் கடுமையான காலகட்டங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸை வழிநடத்தினார். தான் தலைவராக இருந்தபோது, கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்பதற்காக காங்கிரசிலிருந்து பிரிந்துசென்றவர்களை இணைப்பதில் தீவிரம் காட்டினார். அதில் தனது மாநிலத் தலைவர் பதவியை பறிகொடுத்தாலும் அவர் வருந்தியதில்லை” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோலப்பன்.

கட்சிக்கு கட்டுப்பட்டு, தலைவர் பதவியிலிருந்து விலகல்

இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்த 2000 – 2002 காலகட்டத்தில்தான் வாழப்பாடி கே. ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் இணைந்தது.

அதற்கடுத்து தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தபோது தனது ஆதரவாளரான சோ. பாலகிருஷ்ணனை மாநிலத் தலைவராக்க விரும்பினார் ஜி.கே. வாசன். அந்தத் தருணத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதன் மூலம் மாநிலத்தில் கட்சியை பேசுபொருளாக்கியிருந்தார் இளங்கோவன். இருந்தாலும் கட்சியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜவுளித் துறையினர் கடுமையாக எதிர்த்துவந்த சென்வாட் வரி, இவர் இணை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நீக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதி, 2014ல் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் இளங்கோவன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜி.கே. வாசன் மீண்டும் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரசைத் துவங்கினார்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டது. அப்போது மறுபடியும் காங்கிரசின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் இளங்கோவன். அடுத்துவந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கென தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்றார் அவர். ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரசிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியினரைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத் தலைவர் எப்படியிருக்கவேண்டுமோ அப்படியிருந்தார் இளங்கோவன் என்கிறார்கள்.

“தன்மானமும் சுயமரியாதையும்மிக்க தலைவர் அவர். காந்தி குடும்பம் குறித்த அவதூறுகளை ஒருபோதும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். கடுமையாக பதிலடி தருவார். எதிர்வினைகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். கட்சி மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் அளவிட முடியாதது. கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊராகப் பயணம் செய்து கடுமையாக வேலை பார்த்தார். தமிழ்நாடு அரசியலில் அவர் தீவிரமாக செயல்பட்டபோது, ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி.

ஆனால், முன்னாள் முதலமைச்சர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா குறித்து இளங்கோவன் தெரிவித்த சில கருத்துகளும் 2022-ஆம் ஆண்டு மோடியும் அம்பேத்கரும் புத்தகம் வெளியானதையொட்டி, இசையமைப்பாளர் இளையராஜா பற்றி அவர் தெரிவித்த கருத்துகளும் ஜாதி ரீதியானதாகவும் பாலினம் சார்ந்தும் இருந்தன. அவருடைய நெருக்கமான ஆதரவாளர்கள்கூட நியாயப்படுத்த முடியாதவகையில் இந்தப் பேச்சுகள் இருந்தன.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘காந்தி குடும்பம் குறித்த அவதூறுகளை ஒருபோதும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார்’

“கட்சி மீதான விமர்சனங்களுக்கும் தலைவர்கள் மீதான விமர்சனங்களுக்கும் கடுமையாக எதிர்வினையாற்ற விரும்புவார். இதுபோன்ற தருணங்களில் அவருடைய கருத்துகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தால் கேட்டுக்கொள்வார். கட்சியில் சாதாரண நிலையில் உள்ளவர்கள்கூட அதை அவரிடம் சொல்ல முடியும்” என்கிறார் ஜோதிமணி. பல தருணங்களில் இளங்கோவனின் இதுபோன்ற பேச்சுகள் அவருடைய கட்சியினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால், தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்புடன் பழகியவராகவே பலரும் அவரைக் குறிப்பிடுகின்றனர்.

“தனிப்பட்ட முறையில் பிரியமாக இருப்பார். ஈரோட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தபோது, தன் பேத்தியையும் அழைத்துவந்திருந்தார். உங்கள் பேச்சைக் கேட்பதற்காக அழைத்துவந்தேன் என்று சொன்னதும் நினைவிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை கட்சிதான் எல்லாம். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி நடந்துகொள்வார். கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்” என்கிறார் தி.மு.கவின் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

படக்குறிப்பு, ‘மகனின் இழப்பிலிருந்து அவர் கடைசிவரை மீளவில்லை’

அவருடைய குடும்பத்தில் தந்தை, தாய், சகோதரர், மகன் என பலரும் அரசியலில் இருந்தாலும் மத்திய அமைச்சர் அளவுக்கு உயர்ந்தது இளங்கோவன்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ப்ரியன்.

உலுக்கிய மகன் மரணம்

“அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் அவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக கருத்து சொல்லலாம், அல்லது தனிப்பட்ட முறையில் சொல்லலாம். ஆனால், கண்டிப்பாக எதிர்வினையாற்றியாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்” என நினைவுகூர்கிறார் அவர்.

2019-ஆம் ஆண்டு தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதி அவருக்கென ஒதுக்கப்பட்டபோது அவர் விருப்பமின்றியே அதில் களமிறங்கினார் என்கிறார் ப்ரியன்.

“தேர்தல் நடக்கும் முன்பே தோற்றுவிடுவோம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவருடைய மகன் திருமகன் ஈவேராவின் திடீர் மரணம் அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினரான பிறகு, அரசியலில் இருந்தே ஓய்வுபெற்றவரைப்போலத்தான் இருந்தார். ஆனால், அந்த மரணம் அவரை உலுக்கிவிட்டது. பிறகு, முதல்வரின் வலியுறுத்தலால் அதே தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெற்றி கிடைத்தாலும்கூட மகனின் இழப்பிலிருந்து அவர் கடைசிவரை மீளவில்லை” என்கிறார் ப்ரியன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.