நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் – சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?
- எழுதியவர், ஃபெராஸ் கிலானி
- பதவி, சிறப்பு செய்தியாளர், பிபிசி அரபு சேவை
-
சிரியாவில் பஷர் அல்- அசத்தின் ஆட்சியின் போது அடைத்து வைப்பு, சித்திரவதை ஆகியவற்றை நிகழ்த்தப்பட்ட ரகசிய தளத்திற்கு பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் ஃபெராஸ் கிலானி சென்றார்.
நிலத்துக்கு அடியில் உள்ள இந்த இடம் சிரியா மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருந்தது. இந்த இடத்திற்குச் செல்ல மிகச் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
சிரியாவின் அரசு பாதுகாப்பு அமைப்பினுடைய தலைமையகத்தின் அடித்தளத்தில், அந்நாட்டின் ரகசியப் உளவு நெட்வொர்க் பற்றிய அச்சமூட்டும் விஷயங்களை கண்டறிந்தோம். பல தசாப்தங்களாக மிகவும் மோசமான ஆட்சியாளரை பதவியில் வைத்திருக்க இந்த நெட்வொர்க் உதவியது
அங்கு வரிசையாக, தடிமனான எஃகு கதவுகள் கொண்ட சிறிய சிறைகள் இருந்தன. கைதிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட சிறைகள் அவை. அது இரண்டு மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டது. அழுக்கு படிந்த சுவர்கள் கொண்ட அந்த சிறையில், சிறிய ஓட்டையில் இருந்து மட்டுமே சிறிதளவு சூரிய ஒளி உள்ளே வருகின்றது.
பல மாதங்களாக, கைதிகள் அங்கு அடைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த இடம், மத்திய டமாஸ்கஸின் பரபரப்பான பகுதியிலுள்ள அரசு பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்தின் தரைதளத்திற்குக் கீழே இருக்கிறது.
தங்கள் நாட்டு மக்கள், இங்கு அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை அறியாமலே, தினமும் ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய இந்தச் சாலை வழியாகச் சென்றார்கள்.
அங்கு ஒரு பகுதியில், தற்போது பதவியில் இருந்து அகற்றப்பட்ட பஷர் அல் அசத்தின் சிதைந்த படங்களும், கோடிக்கணக்கான மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உளவு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்ட கோப்புகளின் குவியல்களும் சிதறிக் கிடக்கின்றன.
தற்காலிகமாக இங்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர், கைதிகள் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள செட்னயா சிறை போன்ற மோசமான சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள்.
மனித உரிமைகளுக்கான சிரியா நெட்வொர்க் (SNHR) என்னும் ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழு, 2011-ஆம் ஆண்டு அசத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நாட்டின் சிறைகளில் சித்திரவதை காரணமாக 15,102 பேர் இறந்துள்ளதாக கூறுகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 130,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் பஷர் அரசு தனது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பைத் தடுக்க சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போக வைப்பது போன்ற வேலைகளைச் செய்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.
அதோடு, அந்நாட்டில் உள்ள உளவு அமைப்புகள் ”யாருக்கும் பதில் கூறுவேண்டிய தேவையற்ற” ஒரு அமைப்பாக இருக்கின்றன எனவும் அம்னெஸ்டி தெரிவித்துள்ளது
அரசுப் பாதுகாப்புத் தலைமையகத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில், உளவு அமைப்புகளின் நெட்வொர்க்கின் மற்றொரு பகுதியான பொது உளவு இயக்குநரகத்தை வந்தடைந்தோம்.
மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் உளவு பார்க்கும் அமைப்புகளில் இதுவும் ஒன்று என்று அசத் அரசின் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு உள்ளே ஒரு கணினி சர்வர் அறையைக் கண்டோம். அதன் சுவர்கள் மற்றும் தரை முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தது. மேலும் அங்கு வரிசையாக கருப்பு நிறத்தில் உள்ள தகவல் சேமிப்புக் கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து மெல்லிய ஒலி வந்து கொண்டிருந்தது.
டமாஸ்கஸின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் மிகவும் முக்கியமானதால், அதற்கென சொந்தமாக மின்சார விநியோக அமைப்பு ஒன்று இருந்தது.
டிஜிட்டல் அமைப்புகள் இருந்தபோதிலும், ஏராளமான காகித கோப்புகள் அங்கு குவிந்து கிடந்தன. மேலும் அவை இன்னும் பாதுகாப்பாக அப்படியே இருப்பது போல இருந்தது.
ஓர் அறையின் சுவரை ஒட்டி இருந்த இரும்பு அலமாரிகளில் கோப்புகள் நிரப்பப்பட்டு இருந்தன. மற்றொரு வரிசையில் புத்தகங்கள் தரையில் இருந்து கூரை வரை குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, சிரியாவில் ஆட்சி கவிழ்ந்த பிறகு தப்பி ஓடுவதற்கு முன், இந்தக் கோப்புகளை அழிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போலத் தெரிகிறது.
இந்தப் பதிவுகள் பல ஆண்டுகள் பழமையானவை. அவை எதுவும் அழிக்கப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.
மற்றொரு பகுதியில் மோர்ட்டார் எனப்படும் சிறிய வகை பீரங்கி, கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
டமாஸ்கஸை கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) குழுவைச் சேர்ந்த ஒருவரும் எங்களுடன் வந்திருந்தார். இந்த ஆயுதங்கள் எதற்கு என்று நான் அவரிடம் கேட்டேன்.
அசத் ஆட்சியில் ரஷ்யாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, “அனைத்து அரசு நிறுவனங்களும் சிரியாவில் உள்ள மக்களை அடக்குவதற்கும் எதிர்ப்பதற்குமான தனித்த தலைமையகமாக மாற்றப்பட்டது” என்றார் அவர்.
சிரியாவில் உள்ள பொது உளவு இயக்குநரகம் (GID) ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளைக் குவித்து வைத்துள்ளது.
சிரியா குடிமக்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்தவர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு இந்தப் பதிவுகள் முக்கியமானதாக இருக்கும்.
“கடந்த ஆட்சியின்போது கைதிகளை சித்திரவதை செய்தவர்கள் அல்லது கொலை செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு மன்னிப்புக்கு இடமில்லை” என்று ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின்(HTS) தலைவர், அபு முகமது அல்-ஜோலானி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்த்துள்ளது.
“அவர்களை நாங்கள் சிரியாவில் பின்தொடர்வோம். தப்பியவர்களை ஒப்படைக்குமாறு பிற நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம். அதன்மூலம் எங்களால் நீதியை நிலைநாட்ட முடியும்” என்று அவர் டெலிகிராமில் வெளியிடப்பட்ட மேசெஜில் கூறியுள்ளார்.
ஆனால் சிரியா பாதுகாப்பு அமைப்பினுடைய வீழ்ச்சியின் தாக்கம், நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் பரவக்கூடும். ஜோர்டன், லெபனான், இராக் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல ஆவணங்களையும் நாங்கள் காண்கிறோம்.
இந்த ஆவணங்கள் பொதுவெளியில் பகிரங்கமாகி, அந்த நாடுகளில் உள்ள முக்கிய நபர்களுக்கும் அசத்தின் பாதுகாப்பு சேவைகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தினால், அவை பிராந்தியம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தக்கூடும்.
அசத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைப்பு பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் வெளியானால் அதன் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.