தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள் , சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ! on Sunday, December 15, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதற்குப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார்.
வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரைக்கும் அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள்.
கடந்த காலத்தில் அரசமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசுக் கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே. அது எங்களுடைய நிலைப்பாடு என்றார்