பெங்களூரு பொறியாளர் அதுல் சுபாஷ் வழக்கு

பட மூலாதாரம், DCP, Whitefield/ATULSUBHAS/X

படக்குறிப்பு, பெங்களூரு பொறியாளர் அதுல் சுபாஷ் (இடது), கைது செய்யப்பட்ட அவரது மனைவி
  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர்.

மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

“ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்”, என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார்.

“அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்”, என்றும் அவர் கூறினார்.

அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார்.

அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

“வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.”

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை.

மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், “இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது” என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், ATULSUBASH/X

படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

‘நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)’ என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார்.

அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார்.

கடிதத்தில் என்ன இருக்கிறது?

அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் ‘நீதி கிடைக்க வேண்டும்’ என்ற பெரிய தலைப்பு உள்ளது.

தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன?

  • அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள்.
  • இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
  • பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன.
  • ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை.

அதுலின் கோரிக்கைகள் என்ன?

அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள்  மற்றும் வேறு  சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
  • அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும்.
  • உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும்.
  • அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், “என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள்.

அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர்.

அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, ​​நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார்.

ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது.

இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா?

இந்தியா - தற்கொலை - திருமண உறவில் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், “காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது” என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன.

ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன.

அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது.

அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது.

ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை

குறிப்பாக இந்தியச்  சமூகத்தில் பெண்களை துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்,  காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டதாக வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

“தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?” என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார்.

“ஒன்றல்ல இரண்டல்ல… அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது,” என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார்.

இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது

திருமண உறவில் சிக்கல் - தற்கொலை விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார்.

“சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,” என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

” விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்,” என விளக்கமளித்தார்.

“அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்” என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

‘பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார்.

அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார்.

“நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு பேசியவர், “எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும்.

இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. ” என்று பிபிசியிடம் தேவி கூறினார்.

“தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்,” என்று தேவி கூறினார்.

முக்கியத் தகவல்

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.