ரஷ்யா

பட மூலாதாரம், Southern Transport Prosecutor’s Office

படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட காணொளி ஒரு எண்ணெய் கப்பல் பாதியாக பிளவுபட்டதைக் காட்டுகிறது
  • எழுதியவர், டாம் பென்னட்
  • பதவி, லண்டனில் இருந்து

கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின்றன. பிபிசியால் அந்த வீடியோவை சரிபார்க்க முடியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் ஒருவர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

இரண்டாவது கப்பல் சேதம் அடைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கும், யுக்ரேனிடம் இருந்து ரஷ்யா ஆக்ரமித்துள்ள கிரைமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் நீரிணையில் (Kerch Strait) இந்த சம்பவம் நடந்துள்ளது.

இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இன்று, கருங்கடலில் ஏற்பட்ட புயலின் விளைவாக, வோல்கோன்ஃப்ட்-212 மற்றும் வோல்கோன்ஃப்ட்-239 ஆகிய இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கின” என்று ரஷ்யாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிறுவனமான ரோஸ்மோரெக்ஃப்ளாட் (Rosmorrechflot) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இரு கப்பல்களிலும் 15 மற்றும் 14 பேர் குழுக்கள் இருந்துள்ளனர். கடலில் எண்ணெய் கசிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது” என்று அது தெரிவித்துள்ளது.

இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் சுமார் 4,200 டன் எண்ணெய் ஏற்றும் திறன் கொண்டவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைத் தெரிவித்துள்ளது.

எண்ணெய் கசிவுகளின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், வோல்கோன்ஃப்ட்-139 என்ற எண்ணெய்க் கப்பல், கெர்ச் நீரிணையில் நங்கூரமிட்ட போது புயலின் தாக்கத்தால் பாதியாக உடைந்தது. அப்போது, கடலில் 1,000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கசிந்தது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு