நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து எம்.பிக்களின் தகவல்களும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை
இடம்பெற்றுவருகின்றது. இதனை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்க நாடாளுமன்ற அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
இணையத்தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக ‘டாக்டர்’ என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் நாடாளுமன்றுக்கு வழங்கிய தகவல்களில் ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடவில்லை ஆனால், அமைச்சரின் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ தலைப்பு தோன்றியதற்கு, தொடர்புடைய தரவை உள்ளிடுவதில் ஏற்பட்ட பிழையின் விளைவாகும். அதன்படி, இந்த தவறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோலவே நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வழங்கிய கோப்பில் அவருடைய சமயம் இந்து என கொடுத்த போது நாடாளுமன்ற இணையத்தில் பௌத்தம் என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பின்னர் சரிசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.