ஹெட், ஸ்மித் சதம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா – உலக டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஸ்டீவ் ஸ்மித் சதம், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சதங்களால் பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. டிராவிஸ் ஹெட் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்- ஸ்மித் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் முத்தாய்ப்பாகும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கோட்டை விட்டது எங்கே? இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியுமா?
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3வது ஆட்டம் பிரிஸ்பேன் காபாவில் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கி 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.
வலுவான பார்ட்னர்ஷிப்
2வது நாளான இன்று பும்ராவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டர்கள் சற்று கலக்கத்துடனே பேட் செய்தனர். பும்ரா காலையில் வீசிய 5 ஓவர்களில் 16 பந்துகளை மட்டுமே ஆஸ்திரேலிய பேட்டர்கள் எதிர்கொண்டு ஆடினர், ஆனால், 14 பந்துகளை அவர்களால் ஆட முடியாத அளவுக்கு நெருக்கடியை அளித்தது.
கவாஜாவுக்கு பும்ரா வீசிய ஓவரில் 3 பந்துகள் தொடர்ந்து ” பீட்டன்” ஆகிய நிலையில் 4வது பந்தை சற்று உள்நோக்கி வீசினார். இதை எதிர்பாராத கவாஜா தடுக்க முயல, பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்சானது. கவாஜா 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனியும் பும்ரா பந்துவீச்சில் தவறான ஷாட்டை ஆடி கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி வீசிய ஓவரில் கவர் டிரைவ் ஷாட்டுக்கு லாபுஷேன் முயன்றபோது பேட்டின் நுனியில் பட்டு கோலியிடம் கேட்சானது. லாபுஷேன் 12 ரன்களில் வெளியேறினார். 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது.
ஆனால், 4-வது விக்கெட்டுக்கு ஸ்மித்-டிராவிஸ் ஹெட் கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி, கையில் எடுத்தனர். நிதானமாக ஆடத் தொடங்கிய இருவரும் தங்களை நிலைப்படுத்தியபின் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
கடந்த அடிலெய்ட் டெஸ்டைப் போல் அதிரடியாக ஆடிய ஹெட் 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஸ்மித் நிதானமாக பேட் செய்து 128 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
ஆனால், ஹெட்டின் பேட்டிங்கிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும், நெருக்கடியையும் இந்தியப் பந்துவீச்சாளர்களால் அளிக்க முடியவில்லை. 13 பவுண்டரிகளுடன் 115 பந்துகளில் ஹெட் சதத்தை எட்டினார். 128 பந்துகளில் அரைசதம் கண்ட ஸ்மித், அடுத்த 57-வது பந்தில் சதம் கண்டார். 22 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஸ்மித் சதம் அடித்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ய இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலவாறு வியூகங்களை மாற்றியும், விதவிதமாகப் பந்துவீசியும் அவருக்கான சரியான லென்த்தை கண்டறிந்து பந்துவீச முடியவில்லை. 157 பந்துகளில் ஹெட் 150 ரன்களை எட்டினார். ஸ்மித், ஹெட்டின் அற்புதமான பேட்டிங்கால் 2வது செஷனில் ஆஸ்திரேலிய அணி எந்த விக்கெட்டையும் இழக்கவில்லை.
12 பந்துகளில் 3 விக்கெட்
புதிய பந்து அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே பும்ரா பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மார்ஷ் நிலைக்கவில்லை. பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் டிராவிஸ் ஹெட்டும் 152 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த கேப்டன் கம்மின்ஸ் 20 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று 87.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய 377 ரன்கள் சேர்த்தது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. அலெக்ஸ் கேரே 47 ரன்களுடனும், ஸ்டார்க் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய பந்துவீச்சு எப்படி?
இந்தியத் தரப்பில் பும்ரா மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா பந்துவீச்சு மட்டுமே ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடியை அளித்தது. 2வது புதிய பந்து மாற்றப்பட்டதும். 12 பந்துகளில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
ஆகாஷ் தீப் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்து வீசினாலும் அவருக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
எடுபடாத ஜடேஜா பந்துவீச்சு
நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரது பந்துவீச்சும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிதாக நெருக்கடி அளிக்கவில்லை. இருவரும் சேர்ந்து 29 ஓவர்களை வீசி 141 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் இருவரும் சராசரியாக 5 ரன் ரேட் என்கிற அளவில் ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் ஒரு வெற்றி இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. ஆனால், 2வது இடத்துக்கு முன்னேற ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை இந்த டெஸ்ட் உள்பட 3 வெற்றிகள் அவசியமாகும். அப்போதுதான் எந்தவிதமான சிக்கலும் இன்றி பைனலுக்கு முன்னேற முடியும்.
ஆட்டத்தின் 2வது நாளிலேயே ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையை எட்டி விட்டதால், இந்திய பேட்டர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு தீராத தலைவலியாக திகழும் டிராவிஸ் ஹெட்
இன்றைய ஆட்டத்தின் ஹைலைட்டான அம்சமே ஸ்மித்-டிராவிஸ் ஹெட் பார்ட்னர்ஷிப்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே டிராவிஸ் ஹெட் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக மாறிவிடுகிறார். ஐசிசி உலகக் கோப்பையிலிருந்து இந்த நிலை தொடர்கிறது.
கடந்த அடிலெய்ட் டெஸ்டில் சதம் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஹெட் இந்த டெஸ்டிலும் சதம் அடித்தார். கடந்த பல டெஸ்ட் போட்டிகளாக சதம் அடிக்காமல், ஃபார்மின்றி கடும் விமர்சனத்துக்கு ஸ்மித் ஆளாகி இருந்தார். அவரும் நீண்ட இடைவெளிக்குப்பின் சதம் அடித்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.
டிராவிஸ் ஹெட்டுக்கு எப்படிப் பந்துவீசுவது என்பது புரியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறுவது தொடர்கிறது. ஹெட்டுக்கு எந்த லென்த்தில் வீசுவது, ஆஃப் சைடில் வீசுவதா, ஸ்விங் செய்வதா என்பது புரியாமல் குழம்பிய நிலையேயே இந்திய வீரர்கள் பந்துவீசியதைக் காண முடிந்தது. பல்வேறு வியூகங்களை அமைத்தும், பலவாறு பந்துவீசியும் இந்தியப் பந்துவீச்சு ஹெட்டுக்கு துளியும் அச்சுறுத்தலையும், நெருக்கடியையும் தரவில்லை.
ஸ்மித் தொடக்கத்தில் நிதானமாக ஆடத் தொடங்கி, களத்தில் நன்றாக காலூன்றிய பிறகு இயல்பான ஆட்டத்துக்கு மாறினார். இந்திய அணிக்கு எதிராக 10-வது டெஸ்ட் சதத்தையும், ஒட்டுமொத்தத்தில் 33வது சதத்தையும் ஸ்மித் பதிவு செய்தார்.
மழை மீண்டும் குறுக்கிடுமா?
பிரிஸ்பேனில் 3வது முதல் கடைசி நாள்வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தனியார் வானிலை மையங்கள் தெரிவித்துள்ளன. ஆதலால், ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பதில் வானிலையின் பங்கு முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே இருக்கும். இந்திய அணி பேட்டிங்கில் சரியான பதிலடி கொடுக்காவிட்டால், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே இந்த டெஸ்டிலும் தொடர வாய்ப்புள்ளது.
புதிய மைல்கல்லை நோக்கி பும்ரா
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் கபில்தேவ் 51 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் பும்ரா 49 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். கபில்தேவின் சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு இன்னும் 3 விக்கெட்டுகள்தான் தேவை. இதை இந்த டெஸ்டில் பும்ரா புதிய மைல்கல்லை எட்டுவார் என நம்பலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு