வீட்டுக்கடனுக்கும் வட்டி இல்லை: இஸ்லாமிய வங்கிகள் வட்டியே வசூலிக்காமல் லாபம் ஈட்டுவது எப்படி தெரியுமா?
- எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ்
- பதவி, பிபிசிக்காக
வழக்கமாக, வங்கிகளில் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் வட்டி விகிதங்கள் முக்கியமானவை. ஆனால் இஸ்லாமிய வங்கியில் அப்படி எதுவும் இல்லை.
வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரும் வங்கிக்குச் செல்லும் போது தங்கள் வைப்புத் தொகையில் எவ்வளவு வட்டி பெறுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்கள்.
கடன் வாங்குபவர்கள், தாங்கள் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிடுகிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய வங்கிகளில், வட்டி வசூலிப்பது அல்லது செலுத்துவது என்ற நடைமுறை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையான அனைத்து வங்கிகளும் ஷரியா விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
பணத்தால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற மற்ற விதிகளும் இதற்குக் காரணம்.
“இதன் விளைவாக, இஸ்லாமிய நிதி நிறுவனங்கள், மது, புகையிலை அல்லது சூதாட்டத்தில் முதலீடு செய்வதில்லை” என்று இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளுக்கு கடன் வழங்குவதாக இங்கிலாந்து வங்கி தனது இணையதளத்தில் கூறுகிறது.
ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் வட்டி வசூலிக்க தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த வங்கிகள் எப்படி லாபம் ஈட்டுகின்றன?
பணம் உண்மையான பொருளாதாரம்
ஸ்பெயினின் IE பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய நிதியியல் துறைப் பேராசிரியரான செலியா டி அன்கா, வட்டி நிராகரிப்பு என்பது இஸ்லாமிய நிதியில் ஒரு கொள்கை மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளில் வரலாற்று வேர்களையும் கொண்டுள்ளது.
“ஜூதேயோ-கிறிஸ்தவ மரபு மற்றும் இஸ்லாமிய மரபுகளில் வட்டி தடைசெய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினிலும் பிரான்சிலும் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. மூன்று மரபுகளின் புனித நூல்களும் ‘அதிக’ வட்டியை தடை செய்கின்றன.
ஆனால் ‘அதிகமான வட்டி’ என்பதன் அளவு என்ன என்பது தான் கேள்வி?
இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, வட்டி வசூலிப்பது அதிகப்படியானது மற்றும் நியாயமற்றதாகக் கருதப்படுகிறது, அதனால்தான் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது என்று செலியா டி அன்கா பிபிசியிடம் கூறினார்.
மேற்கத்திய பாரம்பரியமும் வட்டியைத் தடை செய்கிறது.
பின்னர், அதுவே சட்டமாக மாறியது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அதிக வட்டி வசூலிப்பதற்கு எதிராக இன்றும் சட்டங்கள் உள்ளன என்று டி அன்கா கூறினார்.
இஸ்லாமிய வங்கித் துறை வட்டி வசூலிப்பதில்லை ஆனால் நிதி அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் லாபம் ஈட்டுகிறது.
“இஸ்லாமிய வங்கிகளின் நிதி பரிவர்த்தனைகள், பணத்திற்கு மதிப்பு இல்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம் இஸ்லாமில் மதிப்பிடப்படுகிறது” என்று இங்கிலாந்து வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
செயின்ட் தாமஸ் அக்வினாஸ் போன்ற கிறிஸ்தவ இறையியலில் முன்னணி நபர்கள் கூட வட்டியை நிராகரிக்கச் சொன்னார்கள் என்று டி அன்கா விளக்கினார்.
“ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த நோக்கம் மற்றும் பரிமாற்ற மதிப்பு உள்ளது என்பதை செயின்ட் தாமஸ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஒரு இடைத்தரகர் அல்லது முகவர் இல்லாமல், பணத்தின் மதிப்பு அதிகரிக்க முடியாது” என்றும் பணம் குறித்து தாமஸ் கருதினார் என மெக்சிகன் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஹெக்டர் ஜுகல் அரகோன்.
இஸ்லாமிய வங்கிக் கொள்கைகள் உண்மையில் எந்த முயற்சியும் இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தை நிராகரிக்கின்றன. மாறாக, அவை பொருளாதார நடவடிக்கைகள் மூலம் லாபத்தைப் பெற ஊக்குவிக்கின்றன.
இஸ்லாமிய வங்கிகள் எப்படி வியாபாரம் செய்கின்றன?
இஸ்லாமிய வங்கியில் வட்டி இல்லை, லாபம் மட்டுமே இருக்கிறது.
இஸ்லாமிய வங்கிகள் வட்டி வசூலிக்கவில்லை என்றாலும், வேறு பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றன.
“வட்டியும் லாபமும் வெவ்வேறானவை. இஸ்லாமிய வங்கி முறையும் லாபம் ஈட்டுவதற்கு உகந்தது. இஸ்லாமியர்களின் உலகம், வணிகப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அது எப்போதும் வணிகத்துடன் நெருக்கமாக உள்ளது,” என்று டி அன்கா கூறினார்.
எடுத்துக்காட்டாக, வங்கிகள் வணிக ரீதியான கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கடன்களை வழங்கலாம் அல்லது பொருட்களின் உற்பத்தியில் பங்குதாரர்களாக முதலீடு செய்யலாம். அதாவது, லாபம் வந்தாலும் இல்லாவிட்டாலும், பொருட்களின் உற்பத்தியில் வங்கித் துறை பங்கேற்கிறது.
“திட்டங்களில் வங்கிகள் முதலீடு செய்கின்றன. அந்த திட்டங்களின் லாபத்தை வங்கிகளும் எடுத்துக்கொள்கின்றன. அது, அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் போது அல்லது முடிந்த பிறகு இருக்கலாம். லாபத்தில் பாதிக்குப் பாதி பங்கு என்று எதுவும் இல்லை. சில நேரங்களில் அது 80:20 என்ற கணக்கில் மாறுபடலாம். அல்லது வேறு விதமாகக் கூட இருக்கலாம். அது முதலீட்டாளர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் பொறுத்தது” என்று டி அன்கா விளக்கினார்.
“இஸ்லாமிய வங்கி, கூட்டுறவை ஊக்குவிக்கிறது. எனவே, முடிந்தவரை அவர்கள் (நிறுவனங்கள் உட்பட) லாபம் மற்றும் நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் செய்யப்படுகிறது” என்று இங்கிலாந்து வங்கி கூறுகிறது.
தனிநபர்களுடனான பரிவர்த்தனைகளிலும் இதே விதி பொருந்தும்.
உதாரணமாக, ஒருவர் இஸ்லாமிய வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அதில் பணத்தை டெபாசிட் செய்தால், அதற்கு வட்டி கிடைக்காது.
ஆனால், இஸ்லாமிய வங்கியில், நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் போது, வங்கி அதை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறது. வட்டி சம்பாதிப்பதற்குப் பதிலாக, இந்த முதலீடுகளின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறலாம்
கடன் கொடுப்பதிலும் இதேபோன்ற வழிகள் உள்ளன
1. யாராவது வீடு வாங்க விரும்பினால், முதலில் அந்த வீட்டை வங்கி ‘வாங்கி’, அந்த நபருக்கு வாடகைக்கு கொடுக்கிறது.
ஒப்பந்தத்தின்படி, நபர் முழுத் தொகையையும் செலுத்திய பிறகு, வீட்டின் முழு உரிமையும் அந்த நபருக்கு மாற்றப்படும். இது ஒரு வகையில் குத்தகை முறையைப் போன்றது. வீட்டு வாடகையின் மூலம் வங்கி அதிக வருமானம் ஈட்டுகிறது.
2. இன்னொரு வழி, வங்கியும், வீட்டை வாங்க விரும்புகிறவரும் சேர்ந்து வீட்டை வாங்குவது. பின்னர் அந்த நபர் வீட்டை வாடகைக்கு விடுகிறார். அந்த வாடகையில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு வங்கிக்கு செல்கிறது. அந்த நபருக்கு சொந்தமாக வீடு இருக்கும் வரை இது செலுத்தப்படும். அதாவது, நேரடி வட்டியை விட வாடகையாக வங்கிக்கு அதிக பணம் வரும்.
3. மூன்றாவதாக வங்கி ஒரு சொத்தை வாங்கி மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்கிறது. சொத்தை வாங்குவதில் ஏற்படும் செலவுகள், லாபம் மற்றும் கமிஷன் அனைத்தையும் பார்த்து அதன் விலையை நிர்ணயிக்கிறது. இதனால் இந்த வங்கிகள் லாபம் ஈட்டுகின்றன.
இஸ்லாமிய வங்கியை விரிவுபடுத்துதல்
இஸ்லாமிய வங்கித் துறை ஷரியா விதிகளின்படி இயங்கினாலும், அது நவீன வழிகளிலும் இயங்குகிறது.
எகிப்து மற்றும் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் 1950 மற்றும் 1960 களில் இஸ்லாமிய வங்கிகள் உருவாகத் தொடங்கின. 1970 களில் கச்சா எண்ணெய் துறையில் ஏற்றமடைந்த பிறகு இஸ்லாமிய வங்கிகளின் முக்கியத்துவம் அதிகரித்தது.
“கச்சா எண்ணெய் தேவை அதிகரித்த பிறகு, பல வணிகர்கள் தங்கள் பணத்தை பாரம்பரிய மேலாளர்களிடம் கொடுத்துள்ளனர், அவர்கள் பணத்தை வட்டி வாங்காமல் இஸ்லாமிய வழியில் வர்த்தகம் செய்து லாபம் ஈட்டச் சொன்னார்கள்,” என்கிறார் வங்கி நிபுணர்.
இதன் மூலம் இஸ்லாமிய வங்கியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வங்கி, மக்களின் தேவைக்கேற்ப செயல்படத் தொடங்கியது.
“இஸ்லாமிய மதிப்புகளின்படி பணத்தை முதலீடு செய்து, அதில் லாபம் ஈட்ட விரும்புவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, வங்கித் துறையில் இருந்து புதிய வழிகள் நடைமுறைக்கு வந்துள்ளன,” என்றும் அவர் கூறினார்.
ஷரியா நடத்தும் வங்கிகள் செழித்து லாபம் ஈட்டுவதால், இதேபோன்ற போக்கு உலகளவில் அதிகரித்துள்ளது.
மேலும் கூறிய அவர், “இஸ்லாமிய நாடுகளில் உள்ள வங்கிகள் பாரம்பரியமான முறைகளில் இயங்குகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் வங்கி சேவைகளில் இருந்து விலகி உள்ளனர். இதன் காரணமாக வங்கிகளும் இஸ்லாமிய முறைகளுக்கு எதிராக செயல்பட வேண்டியுள்ளது,” என்று தெரிவித்தார்.
வங்கிகள் வைப்புத்தொகைக்கு வட்டி கொடுப்பதாலும், கடனுக்கான வட்டியை வசூலிப்பதாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பெரும்பாலான மக்கள் வங்கியில் இருந்து விலகி இருக்கிறார்கள். இஸ்லாமிய வங்கியின் வருகைக்குப் பிறகும் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே.
2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் இஸ்லாமிய விதிகளின் கீழ் இயங்கும் இஸ்லாமிய வங்கிச் சொத்துக்களின் மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் ஆகும். ஸ்பெயின் SCIEF – Casa arabeஇன் இஸ்லாமிய நிதி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மதிப்பு, 2027 ஆம் ஆண்டளவில் 6.7 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சொத்துகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இஸ்லாமிய வங்கி மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது இஸ்லாமிய வங்கிகள் 77 நாடுகளில் இயங்குகின்றன.
லத்தீன் அமெரிக்காவில் ஏன் இஸ்லாமிய வங்கி இயங்கவில்லை?
ஸ்பெயின் SCIEF – Casa Árabe இன் இஸ்லாமிய நிதி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் லத்தீன் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
கன்சல்டன்சி தினார் ஸ்டாண்டர்ட் தயாரித்த, குளோபல் ஸ்டேட் ஆஃப் தி இஸ்லாமிக் எகனாமி ரிப்போர்ட் 2023-2024 அறிக்கையின்படி, ஷரியா விதிமுறைகளின்படி வங்கிகளின் நிர்வாகத்திற்கு வழங்கப்படும் ‘சுகுக்'(ஷரியா விதிமுறைகளுடன் கூடிய பத்திரங்கள்) வழங்குவதை மெக்சிகோ பரிசீலித்து வருகிறது. “சுகுக்” என்பது இஸ்லாமிய வங்கித் துறையில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு போன்றது.
ஆனால் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் விரைவில் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.
“லத்தீன் அமெரிக்காவில் இஸ்லாமிய வங்கிகள் எதுவும் இல்லை அல்லது அதற்கான சாத்தியம் இல்லை” என்கிறார் IE பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கொன்சாலோ ரொட்ரிகஸ் மார்டின்.
இலத்தீன் அமெரிக்காவில் இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்களை மார்டின் விளக்கினார்.
“லத்தீன் அமெரிக்காவில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் இல்லை, எனவே இங்கு இஸ்லாமிய வங்கிக்கான கோரிக்கை இல்லை. இஸ்லாமிய வங்கி அமைப்பதற்கு, நிர்வாக ஒப்புதல் வழங்க அரசியல் ரீதியான நகர்வுகளைத் தொடங்க வேண்டும். இது லத்தீன் அமெரிக்க அரசியல் கட்சிகளின் திட்டத்தில் இல்லை. ஏனெனில் ஒரு இஸ்லாமிய வங்கி ஏன் தேவை என்பதை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று ரோட்ரிகோ மார்ட்டின் விளக்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு