வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? – ஓர் ஆய்வு
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய நிருபர்
இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன.
ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு.
மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த சதவீதம் வலுவாக இருந்தாலும், இது மந்தநிலையைக் குறிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பல காரணிகளால் ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
நுகர்வோர் தேவை பலவீனமடைந்துள்ளது, தனியார் முதலீடு பல ஆண்டுகளாக மந்தமாக நடைபெறுகிறது மற்றும் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சியின் முக்கிய தூண்டுகோலாக இருந்த அரசாங்க செலவுகள் குறைந்துள்ளன.
மேலும் உலகளாவியப் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. 2023 இல் 2 சதவீதம் மட்டுமே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சரிவு குறித்து நிதி அமைச்சர் கூறுவது என்ன?
பொருளாதார நிபுணர் ராஜேஸ்வரி சென்குப்தா, சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன, இதனால் சில காலமாக பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.
பொருளாதார மந்தநிலை மற்றும் தேவையின் அளவில் குறிப்பிடத்தக்க பிரச்னை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதை வேறு மாதிரியாக அணுகுகிறார். கடந்த வாரம், ‘இந்த பொருளாதார சரிவு முறையாக ஏற்படவில்லை’ என்று அவர் விளக்கினார். மேலும் தேர்தலை மையமாகக் கொண்ட காலாண்டில் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதால் இந்த சரிவு ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி, சமீபத்திய சரிவுக்கு ஈடுசெய்யும் என்றும் அவர் எதிர்பார்த்தார். உள்நாட்டு நுகர்வு, உலகளாவிய தேவை குறைதல் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் காலநிலை சீர்குலைவுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
மத்திய அரசின் மூத்த அமைச்சர், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் உட்பட சிலர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கியின் கவனம், அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்களுக்கு வழிவகுத்தது, அது வளர்ச்சியைத் தடுக்கிறது என்று வாதிடுகின்றனர்.
அதிக வட்டி விகிதங்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் கடன்களை அதிக செலவு கொண்டதாக மாற்றுகின்றன. இது குறைந்த முதலீடுகள் மற்றும் குறைந்த செலவினங்களுக்கு வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இரண்டு காரணிகளும் முக்கியமானவை.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிக்க வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் அக்டோபரில் 6.2% ஆக உயர்ந்தது. இது, மத்திய வங்கி இலக்காக வைத்திருந்த உச்சவரம்பை (4%) மீறியது மற்றும் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி 14 மாத உயர்வை எட்டியது.
நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக, காய்கறி விலைகள், அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மற்ற அன்றாடச் செலவுகளைப் பாதிப்பது அல்லது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன.
ஆனால் வளர்ச்சி குறைவதை, அதிக வட்டி விகிதங்கள் மட்டும் முழுமையாக விளக்க முடியாது.
பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலை
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஹிமான்ஷு கூறுகையில், “நுகர்வுத் தேவை வலுவாக இல்லாவிட்டால், வட்டி விகிதங்களைக் குறைப்பது வளர்ச்சியைத் தூண்டாது. முதலீட்டாளர்கள், தேவை இருக்கும்போது மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள், இப்போது அப்படி இல்லை” என்கிறார்.
இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு தனது பதவி காலத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்தியாவின் “வளர்ச்சி அப்படியே உள்ளது” என்று நம்புகிறார், மேலும் “பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையே சமநிலை நன்றாக உள்ளது” என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றார்.
உயர்ந்த சில்லறைக் கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை, அதிக வட்டி விகிதங்களுக்கு மத்தியிலும் தங்கள் தேவைகளுக்காக மக்கள் கடன் வாங்குவதைக் காட்டுகிறது.
நகர்புறங்களில் கடன் தேவை பலவீனமடைந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நல்ல பருவமழை மற்றும் அதிகரித்துள்ள உணவுப் பொருட்களின் விலைகளின் மூலம் கிராமப்புற தேவை பிரகாசமாக உள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட இந்திரா காந்தி வளர்ச்சிப் பொருளாதார நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான சென்குப்தா, பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரம், ‘பழைய பொருளாதாரம் மற்றும் புதிய பொருளாதாரம் எனப்படும் இரண்டு வழிப் பாதையில்’ இயங்கி வருவதால், தற்போதைய நெருக்கடியை வெளிப்படுத்துகிறது என்றார்.
நடுத்தர மற்றும் சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் பாரம்பரிய தனியார் துறை உட்பட பரந்த முறைசாரா துறையை உள்ளடக்கிய பழைய பொருளாதாரம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களுக்காக இன்னும் காத்திருக்கிறது.
மறுபுறம், புதிய பொருளாதாரம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, சேவைகள் ஏற்றுமதியில் 2022-23 இல் வலுவான வளர்ச்சியைக் கண்டது. அவுட்சோர்சிங் 2.0 அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும்.
மேலும் உலகளாவிய திறன் மையத்திற்கான (GCCs) ஒரு முக்கிய இடமாக இந்தியா மாறியுள்ளது.இது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் முக்கிய சேவைகளை கையாளுவதாகும்.
வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கோரிக்கைகள்
உலகின் 50% உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) இப்போது இந்தியாவில் அமைந்துள்ளதாக Deloitte எனும் ஆலோசனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவை.
அந்த மையங்கள் 46 பில்லியன் டாலர் (36 பில்லியன் பவுண்டு ) வருவாயை ஈட்டுகிறது மற்றும் 2 மில்லியன் உயர் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றது.
“உலகளாவிய திறன் மையங்களின் இந்த வருகையானது ஆடம்பர பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் எஸ்யுவி கார்களின் தேவையை ஆதரிப்பதன் மூலம் நகர்ப்புற நுகர்வுக்கு ஊக்கமளித்தது. மேலும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2-2.5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற செலவினங்களில் ஒரு உயர்வை ஏற்படுத்தியது. அது தற்போது மறைந்து கொண்டிருக்கிறது” என்கிறார் சென்குப்தா.
எனவே புதிய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் அதே வேளையில், விவசாயம் உள்ளிட்ட பழைய பொருளாதாரத் துறைகள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. தனியார் முதலீடு முக்கியமானது, ஆனால் வலுவான நுகர்வு தேவை இல்லாமல், நிறுவனங்கள் முதலீடு செய்யாது.
வேலைகளை உருவாக்க மற்றும் வருமானத்தை அதிகரிக்க முதலீடு இல்லாமல், நுகர்வுத் தேவையை மீட்டெடுக்க முடியாது. “இது மோசமான சுழற்சி முறை” என்கிறார் சென்குப்தா.
மேலும், வேறு சில குழப்பமான அறிகுறிகளும் உள்ளன. 2013-14ல் 5% ஆக இருந்த இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி இப்போது 17% ஆக உயர்ந்துள்ளது, இது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிய நாடுகளை விட அதிகம்.
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன.
இந்த உலக வர்த்தக சங்கிலியில், பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி, அதன் விலையை அதிகப்படுத்தி, உலகளாவிய சந்தையில் நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்குகின்றன.
பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் “கதையில் ஒரு புதிய திருப்பம்” என்று இதனைக் கூறுகிறார்.
வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கும் கோரிக்கைகள் வளர்ந்தாலும் கூட, மத்திய வங்கி டாலர்களை விற்பதன் மூலம் ரூபாய் வீழ்ச்சியடைவதிலிருந்து தடுத்து வருகிறது, இதுவே பணப்புழக்கம் இறுக்கமடைவதற்கும் காரணமாகிறது.
‘பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தான கொள்கைகள்’
கடந்த அக்டோபர் முதல் ரூபாய் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது.
டாலர்களை வாங்குபவர்கள் ரூபாயில் பணம் செலுத்த வேண்டும், இது சந்தையில் பணப்புழக்கத்தை குறைக்கிறது. வலுவான ரூபாய் மதிப்பை பராமரிக்க ரிசர்வ் வங்கியின் தலையீடு, உலகச் சந்தையில் இந்திய பொருட்களின் மதிப்பை அதிகரித்து போட்டித்தன்மையை குறைக்கிறது. இது ஏற்றுமதிக்கான தேவை குறைவதற்கு வழிவகுக்கிறது.
“மத்திய வங்கி ஏன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்கிறது? இங்குள்ள கொள்கைகள் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தானது. ஒருவேளை இந்திய ரூபாய் குறித்து நேர்மறையான பிம்பத்தை காட்டுவதற்காக அவர்கள் இப்படி செய்யலாம். அவர்கள் இந்திய ரூபாய் பலவீனமாக இருப்பதாக காட்ட விரும்பவில்லை” என்று பிபிசியிடம் பேசிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறினார்.
இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற ‘கதையாடலை அதிகமாக நிகழ்த்துவது’ முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசிய சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
“நாம் இன்னும் ஒரு ஏழை நாடாகவே இருக்கிறோம். நமது தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது, அதே சமயம் அமெரிக்காவில் இது 86,000 டாலராக உள்ளது. நாம் அவர்களை விட வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று நீங்கள் சொன்னால், அதில் எந்த அர்த்தமும் இல்லை” என்கிறார் சென்குப்தா.
வேறு விதமாகக் கூறுவதானால், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது.
வளர்ச்சி மற்றும் நுகர்வை அதிகரிப்பது குறுகிய காலத்தில் எளிதானது அல்ல.
தனியார் முதலீடு போதுமான அளவு இல்லாத நிலையில், வருமானத்தை அதிகரிக்கவும், நுகர்வைத் தூண்டவும், அரசு வேலைவாய்ப்புத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் ஊதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஹிமான்ஷு பரிந்துரைக்கிறார்.
சென்குப்தா போன்றவர்கள் வரிகளைக் குறைப்பதன் மூலம், சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மடைமாறி வரும் முதலீடுகளை நாம் ஈர்க்க முடியும் என்று வாதிடுகின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரசு நேர்மறையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. நாட்டில் வங்கிகள், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் நிதி நிலை ஆகியவை வலுவாக உள்ளன. தீவிர வறுமையும் குறைந்துள்ளது.
தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி ஆனந்த நாகேஸ்வரன், சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை மிகைப்படுத்தக் கூடாது என்கிறார்.
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருக்கும்போது, ஒரு சில காரணங்களை முன்னிறுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிராகரிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போதுமான வேகத்தில் முன்னேறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறும் சென்குப்தா, “இந்தியா வளர்ச்சியடைவதற்கான இலக்குகள் இருந்தாலும் கூட அவற்றை நிறைவேற்றப் போதுமான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கவில்லை” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
“இதற்கிடையில், நிகழ்கால வளர்ச்சியின் அடையாளமாக இந்தியா பல்வேறு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் வேளையில், உண்மையில் அந்த வளர்ச்சியைக் காண காத்திருக்கிறேன்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு