மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது! on Saturday, December 14, 2024
காலி – ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
உயிரிழந்த நபர் கடந்த 9ஆம் திகதி மாத்தறை பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த நபர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் இது தொடர்பில் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நபர் மண்டோரவல பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, சைக்கிளை அங்கேயே வைத்துவிட்டு, அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வயல்வெளிக்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் உள்ள கழிவறை குழியில் இருந்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதேவேளை, அப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக மின்சார வேலிகளை பொருத்தியிருந்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரும் உயிரிழந்தவரின் சடலத்தை அருகில் உள்ள கழிவறை குழியில் வீசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.