பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தது? – அந்த பணம் இனி என்னவாகும்?

பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர் கடன் கொடுத்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்

இரானில் 1979 இல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் இலக்காக இரான் திகழ்ந்தது. அது மட்டுமல்லாமல், அதன் அண்டை நாடுகள் உடனான விரோதமும் அதிகரித்தது.

ஒரு வருடம் கழித்து, 1980இல் இராக் இரானைத் தாக்கியது, இந்தப் போர் 1988 வரை தொடர்ந்தது.

செளதி அரேபியா உடனான இரானின் உறவுகளும் கசப்பானப் பின்னணியை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை இன்றுவரை மீட்டெடுக்கப்படவில்லை.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, சிரியா, ஏமன், லெபனான், பாலத்தீனம் மற்றும் இராக்கில் ஆயுதக் குழுக்களை இரான் விரிவுபடுத்தியது, இதுவே அதன் பலமாக இருந்தது.

இரானின் இந்த சக்தி இப்போது பலவீனமடைந்து வருகிறது. மிக சமீபத்தில் சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததே இதற்கு சிறந்த உதாரணம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பஷர் அல்-அசத் வெளியேறியது இரானுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. சிரியாவில் அசத்தை ஆட்சியில் வைத்திருக்க இரான் ஒரு பெரிய முதலீடுகளை செய்தது.

இரானின் முதலீடுகள் என்ன ஆனது என்பதே அந்நாட்டு மக்கள் முன்வைக்கும் முக்கிய கேள்வி.

இரானுக்குள் இருந்து இத்தகைய குரல்கள் எழுவது, ஒரு வகையில், இரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயின் கொள்கைகள் மீதான ஒரு கேள்விக் குறியாகும்.

”பஷர் அல்-அசத் கடந்த தேர்தலில் 95 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார், ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, சிரியா குடிமக்களில் ஒருவர் கூட அவரைப் பாதுகாக்க முன் வரவில்லை.” என்று இரானிய பத்திரிகையாளர் முகமது மொஹஜெரி கடந்த வாரம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.

முகமது மொஹஜெரி பின்னர் எந்த விளக்கமும் கொடுக்காமல் அசத் பற்றிய தன் பதிவை நீக்கிவிட்டார்.

இரான் மக்களின் கேள்விகள்

இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 14 ஆண்டுகளில் சிரியாவுக்கு இரான் கொடுத்த கடன்கள் என்ன ஆகும் என்று இரான் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிரியாவில் ஆட்சிக்கு வந்துள்ள கிளர்ச்சிக் குழு, இரான் உடன் அசத்தின் அதே அணுகுமுறையைக் கொண்டிருக்காது என்பது உறுதி.

இரானும் ரஷ்யாவும் அசத்துடன் நின்றன. கிளர்ச்சிக் குழுக்கள் அவர்களுக்கு எதிராகப் போராடினர். இருப்பினும், இப்போது இரானும் ரஷ்யாவும் சிரியாவில் உள்ள புதிய ஆட்சியுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கின்றன.

அசத் சிரியாவை விட்டு வெளியேறி ரஷ்யாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, இரான் ஒரு அளவான எதிர்வினையை ஆற்றியது.

”சிரியா ஒரு கடினமான கட்டத்தில் நிற்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து சிரிய குடிமக்களின் பாதுகாப்பும் முக்கியமானது. பொதுவான நலன்களின் அடிப்படையில் சிரியாவின் புதிய அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகள் தொடரும் என்று நம்புகிறோம் ” என்று இரான் கூறியது.

இரான் சிரியாவுக்கு எவ்வளவு கடன் வழங்கியது?

சிரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவில் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகம் தாக்கப்பட்டது.

பஷர் அல்-அசத்துக்கு இரான் எவ்வளவு கடன் வழங்கியது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இரான் மக்கள் இதைப் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய விவாதித்து வருகின்றனர்.

டிசம்பர் 7 அன்று, முன்னாள் இரானிய எம். பி. பஹ்ராம் பர்சேய், இரான் அசத்துக்கு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன் கொடுத்திருப்பதாக பதிவிட்டார்.

உண்மையான தொகை இதை விட அதிகம் என்று கூறப்படுகிறது. சிரியாவில் அசத்தின் அரசாங்கத்தை காப்பாற்ற 2011 முதல் இரான் மொத்தம் 50 பில்லியன் டாலர்களை செலவிட்டதாக சிரியா எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை இரான் மக்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது, அசத்தை காப்பாற்ற இரானிய அரசாங்கம் 30 பில்லியன் டாலர் செலவழித்ததாக அவர் கூறினார்.

“இரான் மக்களின் உணர்வு இப்போது எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சிரியாவில் அசத்தை காப்பாற்ற இரானின் சர்வாதிகார அரசாங்கம் 30 பில்லியன் டாலர்களை செலவிட்டது. இவ்வளவு செலவு செய்தும் அந்த நபர் வெறும் 11 நாள் போரில் வீழ்த்தப்பட்டார். அதே போல் காஸாவில் ஹமாஸுக்கு ஆதரவளிக்க இரான் அரசாங்கம் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது ” என நெதன்யாகுப் பேசினார்.

“ஹமாஸும் முடக்கப்பட்டுள்ளது. லெபனானில் ஹெஸ்பொலாவைக் காப்பாற்ற உங்களின் இரான் அரசாங்கம் 20 பில்லியன் டாலர்களை செலவழித்தது. சில வாரங்களுக்குள் ஹெஸ்பொலா வீழ்த்தப்பட்டது. உங்கள் அரசாங்கம் உங்கள் பணத்தை திருடி வீணடிக்கிறது. இந்த பணத்தை இரானில் சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம்” என்று அவர் விமர்சித்தார்.

இரான் செலவிட்டப் பணம் என்னவாகும்?

பஷர் அல்-அசத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானில் துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன

பஷர் அல்-அசத்தின் ஆட்சியின் போது இரானுக்கும் சிரியாவுக்கும் இடையே ஆழமான வர்த்தக உறவுகள் இருந்தன.

எரிசக்தியை ஏற்றுமதி செய்வதைத் தவிர, இரான் சிரியாவுக்கு பிற பொருட்களையும் அனுப்பியது.

இரானும் சிரியாவில் பல முதலீடுகளை செய்தது. இது தவிர, மத யாத்திரைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் செழித்து வளர்ந்தது.

வர்த்தக புலனாய்வு நிறுவனமான கிப்லரின் தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக இரான் ஒவ்வொரு நாளும் 70,000 முதல் 80,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பீப்பாய்கள் மற்றும் ஒரு பீப்பாயின் மதிப்பிடப்பட்ட விலை 50 டாலர்கள் என்று நாம் கருதினால், இரான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை சிரியாவுக்கு வழங்கி வருகிறது.

அதாவது, 2011 முதல் 2024 வரை, இரான் சிரியாவுக்கு 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வழங்கியுள்ளது.

இது தவிர, சிரியாவுக்கு ஆயுதங்கள், தொழில்துறை பொருட்கள், வாகன பொருட்கள் மற்றும் மருந்துகளையும் இரான் வழங்கியுள்ளது.

இந்த பொருட்களுக்காக சிரியா எப்போதாவது இரானுக்கு பணம் கொடுத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது தவிர, சிரியா வழியாக லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவுக்கு அத்தியாவசிய பொருட்களை இரான் வழங்கி வந்தது.

டிசம்பர் முதல் வாரத்தில் கிளர்ச்சிக் குழுக்கள் பஷர் அல்-அசத்தின் படைகளைத் தோற்கடிக்கத் தொடங்கியபோது கூட, இரானில் இருந்து கச்சா எண்ணெய் சிரியாவுக்கு வந்துக் கொண்டிருந்தது.

இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கி வந்தது

டிசம்பர் 8 அன்று, டேங்கர் டிராக்கர்ஸ் (tanker trackers) எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில், “அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, இரானிய சூயஸ்மேக்ஸ் டேங்கர் (எண்ணெய் டேங்கர்) சூயஸ் வளைகுடாவில் யு-டர்ன் எடுத்து திரும்பியது. இந்த இரானிய கப்பல் சிரியாவுக்கு 7,50,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வழங்கவிருந்தது, ஆனால் அசத் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அது இரானுக்கு திரும்பியது” என குறிப்பிடப்பட்டிருந்தது

இரானின் ராணுவ மற்றும் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் சிரியா ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

சிரியாவில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையிலும் இரான் முதலீடு செய்துள்ளது. இது தவிர, இரானில் இருந்து ஏராளமான மக்கள் டமாஸ்கஸில் உள்ள ஷியா வழிப்பாட்டு தலங்களுக்கு வருவார்கள்.

பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்தபோது சிரியாவுடன் சுதந்திர வர்த்தக திட்டத்தில் இரான் செயல்பட்டு வந்தது.

இது தொடர்பான மசோதாவையும் இரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவில் தொடங்கும் கட்டுமானப் பணிகளால் தாங்கள் பயனடைவோம் என்று இரான் நம்பியது. இதற்காக, இரான் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகளை சிரியாவுக்கு அனுப்பியது.

இரான் இதற்கு பின்பும் செலவிடுமா?

சிரியாவில் 10,000க்கும் மேற்பட்ட இரானியர்கள் இருப்பதாக இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுவின் உறுப்பினர் யாகூப் ரெசாசாதே தெரிவித்துள்ளார்.

சிரியா மீதான இரானின் கடன் குறித்து கேட்டபோது, “30 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது என்ற கூற்றுக்கு என்னிடம் எந்த உறுதியான தகவலும் இல்லை, ஆனால் அது உண்மையாக இருக்காது” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற விஷயங்களில் இரானிய அரசாங்கம் ரகசிய காக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தகவல்கள் வெளிவரவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், இரான் மக்கள் அரசாங்கத்திடம் விளக்கம் கோருகின்றனர். இரானின் சீர்திருத்தவாத பத்திரிகையாளர் அப்பாஸ் அஃப்டி பாரசீக நாளேடான ‘ஹம்-மிஹானில்’ ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளார்.

அஃப்டியின் தலையங்க செய்தியில், “முதலாவதாக, சிரியா விஷயத்தில் இரான் எந்த இடத்தில் தவறு செய்தது? சிரியாவில் இரான் எவ்வளவு பணம் செலவழித்தது என்பதை பற்றி தெளிவான மற்றும் வெளிப்படையான முறையில் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நம்பகமான மற்றும் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இது நடக்காவிட்டால், எதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகள் தொடரும் “என்று எழுதியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசியா ஆய்வுகள் மையத்தின் பேராசிரியரான அஃப்தாப் கமல் பாஷா, அசத்துக்காக இரான் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டதாகவும், இந்த பணத்தை மீட்டெடுப்பது கடினம் என்றும் கூறுகிறார்.

ஆனால் இரான் இப்போது அனைத்து பொறுப்புகளிலிருந்து விடுபட்டுள்ளது, எனவே அது இப்போது தன்னை வலுப்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

“லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் சிரியாவில் அசத் மீது பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுவதில் இருந்து இரான் இப்போது விடுபட்டுள்ளது. இரான் தற்போது இழப்புகளைச் சந்தித்து வருகிறது, எனவே இனி இரான் இந்த பணத்தை தனக்குத்தானே பயன்படுத்தும் ” என்றார் அவர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு