டெல்லி செல்ல விடாமல் தொடர்ந்து தடுக்கும் போலீஸ் – விவசாயிகளின் அடுத்த திட்டம் என்ன?
- எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால்
- பதவி, பிபிசி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தில் ஹரியாணாவின் எல்லையில் உள்ள ஒரு கிராமம் தான் ஷம்பு. இங்கு விவசாயிகள் குழு ஒன்று டெல்லிக்கு பேரணியாக செல்ல முயன்ற போது பதற்றம் ஏற்பட்டது.
இரு மாநில எல்லையில் ஹரியாணா போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, விவசாயிகள் குழுவின் தலைவர் சர்வான் சிங் பாந்தர் செய்தியாளர் சந்திப்பின் போது, 100 பேர் கொண்ட குழு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை மத்திய அரசிடம் இருந்து அறிய விரும்புவதாக கூறினார்.
விவசாயிகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கிய அவர், ”டிசம்பர் 16-இல், பஞ்சாப் தவிர, நாடு முழுவதும், டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும். மேலும், டிசம்பர் 18ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.” என்றார்.
சர்வான் சிங் ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் மீது ரசாயனம் கலந்த அசுத்தமான தண்ணீரை போலீஸார் பீய்ச்சி அடித்ததாக குற்றம் சாட்டினார். இதில், 17 விவசாயிகள் காயமடைந்ததாக அவர் கூறினார்.
101 விவசாயிகள் அடங்கிய போராட்டத்தின் மூன்றாவது குழு டிசம்பர் 14 அன்று ஷம்பு எல்லையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. ஷம்பு எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது அங்கு நடந்த காட்சிகளை விவரித்த பிபிசி செய்தியாளர் சரப்ஜித் சிங் தலிவால், பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடினர் என்றார்.
“விவசாயிகளைத் தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன. ஹரியாணா காவல்துறையினர் பாதுகாப்பான கூண்டு போன்ற இடங்களில் இருந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்” என்றார் அவர்.
டிசம்பர் 14 ஆம் தேதிக்கு முன்பே, விவசாயிகள் குழுக்கள் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் டெல்லிக்கு பேரணியாக செல்ல முயன்றன. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹரியாணா காவல்துறையினரால் இரண்டு முறையும் ஷம்பு எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால், விவசாயிகள் திரும்பிச் சென்றனர்.
விவசாயிகளை டெல்லிக்கு செல்ல விடாமல் ஹரியாணா போலீசார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?
ஷம்பு மற்றும் கானௌரி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்கள் குறித்து டிசம்பர் 13 அன்று, உச்ச நீதிமன்றம் முக்கியமான கருத்துகளை தெரிவித்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது என பிபிசி செய்தியாளர் உமாங் கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராட்டக் குழுவின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருவதையும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் போராட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜக்ஜித் சிங் தலேவாலுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்குமாறும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பஞ்சாப் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
உயர்மட்டக் குழு விவசாயிகளிடம் பேசி, போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் அல்லது போராட்டத்தை நெடுஞ்சாலையை விட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
காந்திய அணுகுமுறையை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விவசாயிகள் காந்திய போராட்ட முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் ஷம்பு, கானௌரி எல்லைகளில் விவசாயிகள் தங்களின் நியாயமான `குறைந்தபட்ச ஆதரவு விலை’ (Minimum support price ) கோரிக்கைக்காக போராட்டம் நடத்தத் தொடங்கி 10 மாதங்கள் ஆகின்றன.
விவசாயிகள் நியாயமான `குறைந்தபட்ச ஆதரவு விலை’ உள்ளிட்ட 12 கோரிக்கைகளுடன் டெல்லிக்கு பேரணி செல்ல விரும்புகின்றனர். ஆனால் ஹரியாணாவிற்குள் நுழைய முடியாததால், விவசாயிகள் பிப்ரவரி 13, 2024 முதல் ஷம்பு மற்றும் கானௌரி எல்லைகளில் அமர்ந்துள்ளனர்.
அதன் பிறகு, நாடாளுமன்ற தேர்தலுடன், ஹரியாணா சட்டசபை தேர்தலும் நடைபெற்று முடிந்தது.
மத்தியிலும் ஹரியாணாவிலும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.
10 மாதங்களுக்குப் பிறகும், விவசாயிகள் பஞ்சாப் எல்லையில் அமர்ந்திருக்கின்றனர்.
டிசம்பர் 6-ம் தேதி நடந்தே டெல்லிக்கு பேரணி செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில், ஹரியாணா காவல்துறையினரால் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நாட்டின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள்
- அனைத்து பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
- டாக்டர் சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின்படி பயிர்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
- டிஏபி உர (DAP fertilizer) பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்களின் கடன்களை தள்ளுபடி செய்து, ஓய்வூதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றிய லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
- விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.
- `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ (MNREGA) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 200 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் மற்றும் தினசரி ஊதியம் நாளொன்றுக்கு ரூ.700 வழங்கப்பட வேண்டும்.
- போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை விற்கும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
- மிளகாய், மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களுக்காக ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்துவதன் மூலம் பழங்குடி நிலங்களை சூறையாடுவதை நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தின் கடைசி 10 மாதங்களில் என்ன நடந்தது?
பிப்ரவரி 13 அன்று, விவசாயிகள் ஐக்கிய கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத) மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய அமைப்புகளின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட 12 பிற கோரிக்கைகளுடன் டெல்லிக்கு புறப்பட்டனர்.
ஆனால் விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் டிராலிகளுடன் ஷம்பு மற்றும் கானெளரி எல்லைகளை அடைந்தபோது, ஹரியாணா காவல்துறை அமைத்த தடுப்புகள் காரணமாக அவர்கள் அங்கு நிற்க வேண்டியிருந்தது.
பிப்ரவரி 21 அன்று, விவசாயிகள் கானெளரி எல்லை வழியாக ஹரியாணாவுக்குள் மீண்டும் நுழைய முயன்றபோது, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் சுப்கரன் சிங் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்தார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த குற்றச்சாட்டில் பல விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இதற்குப் பிறகு, இந்த விவகாரம் மார்ச் 10 அன்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தை எட்டியது, நீதிமன்றம் இது குறித்து விசாரணைக் குழுவை அமைத்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கோரியது.
மார்ச் 16 அன்று, பொதுத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அந்த சமயத்திலும் விவசாயிகள் வீடு திரும்புவதற்குப் பதிலாக, சாலையிலேயேப் போராட்டத்தை நடத்தினர்.
விவசாயிகள் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தங்கள் தோழர்களை விடுவிக்கக் கோரி விவசாயிகள் மே 6 அன்று ரயில் தடங்களில் அமர்ந்தனர்.
மே 20 அன்று, விவசாயிகள் ரயில் பாதைகளை காலி செய்தனர், ஆனால் ஷம்பு மற்றும் கானெளரி எல்லைகளில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.
ஜூலை 10 அன்று, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம், இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த போது, ஒரு வாரத்திற்குள் ஷம்பு எல்லையை திறக்க ஹரியாணா அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், விவசாயிகள் மீண்டும் டெல்லிக்குச் செல்வதாக அறிவித்தனர். ஆனால் ஜூலை 16 அன்று, ஹரியாணா அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி எல்லையைத் திறக்க மறுத்தது.
ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று, ஷம்பு எல்லையைத் திறக்க விவசாயிகள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா அதிகாரிகளுக்கு இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது, ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை.
இதற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பரில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. நவம்பர் 18 அன்று, விவசாயிகள் டிசம்பர் 6 ஆம் தேதி மீண்டும் டெல்லிக்குச் செல்வதாக அறிவித்தனர்.
இதற்குப் பிறகு, நவம்பர் 26 அன்று, பஞ்சாப் போலீசார், விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலை கானெளரி எல்லையில் இருந்து கைது செய்தனர்.
டிசம்பர் 6 ஆம் தேதி, விவசாயிகள் ஷம்பு எல்லையிலிருந்து டெல்லிக்குச் செல்ல முயன்றபோது, ஹரியாணா எடுத்த கடுமையான நடவடிக்கையால் பல விவசாயிகள் காயமடைந்தனர்.
அதன்பிறகும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் விவசாயிகள் டெல்லிக்குச் செல்வது தடுக்கப்பட்டது.
–இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு