சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்
சனிக்கிழமை, அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த விவாதத்தில், பிரதமர் மோதி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.
காந்தி குடும்பத்தை குறிவைத்து, “காங்கிரசின் ஒரு குடும்பம் அரசியலமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த கால கட்டத்தில் நாட்டில் என்ன நடந்தது என்பதை அறிய அனைவருக்கும் உரிமை உள்ளது” என்றார் மோதி.
முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அரசியல் சாசனத்தைப் பற்றி பேசுகையில், சாவர்க்கரின் கட்டுரையை மேற்கோள் காட்டி மோதி அரசாங்கத்தை விமர்சித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை எழுப்பி மோதி அரசை குறிவைத்து பேசினார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றியதும், பாஜக தலைவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான கிரண் ரிஜிஜு, சாவர்க்கரைப் பற்றி அவர் கூறியது தவறானது என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு ஆவண நகலைப் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் தனது அரசு நிறைவேற்றிய மசோதாவை அன்றைய தினம் ராகுல் காந்தி கிழித்தது, அரசியல் சாசனத்தை கிழித்தெறிந்ததற்கு சமம் என்று பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் கூறினார்.
அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை, ராகுல் காந்தியின் சகோதரியும், கேரளாவின் வயநாடு மக்களவை எம்.பி.யுமான பிரியங்கா காந்தி அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது அரசாங்கத்தை விமர்சித்தார்.
பிரதமர் மோதி பேசியது என்ன?
சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தியின் உரைக்குப் பிறகு பிரதமர் மோதி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோதி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
காங்கிரசை குறிவைத்தும், அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு பற்றியும் பேசினார்.
`காந்தி குடும்பம்’ என்று அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரசின் ஒரு குடும்பம் ஒவ்வொரு மட்டத்திலும் நாட்டிற்கு சவாலாக உள்ளது என்று கூறினார்.
“1947 முதல் 1952 வரை, இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று ஒன்று இல்லை. தேர்தல்கள் நடத்தப்படவில்லை, ஒரு இடைக்கால ஏற்பாடாக ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. 1952க்கு முன்பு மாநிலங்களவையும் அமைக்கப்படவில்லை. மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மக்களுக்கு ஒழுங்குமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை” என்று மோதி கூறினார்.
“இருப்பினும், 1951 ஆம் ஆண்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இல்லாத போது, அவர்கள் அரசியலமைப்பை மாற்றினர். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டமியற்றுபவர்களை அவமதிப்பதாகும்” என்றும் பேசினார்.
அவர் தனது உரையில், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் பெயர்களை குறிப்பிட்டு, சுமார் 60 ஆண்டுகளில் அரசியல் சாசனம் 75 முறை மாற்றப்பட்டது என்று கூறினார்.
“நாட்டின் முதல் பிரதமர் விதைத்த விதையை மற்றொரு பிரதமர் நீர் பாய்ச்சி உரம் போட்டு பயிராக்கினார்” என்றார்.
“1971 இல், உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு வந்தது, அந்த முடிவு அரசியலமைப்பை மாற்றியமைத்ததன் மூலம் ரத்து செய்யப்பட்டது. இந்த அரசியலமைப்பு திருத்தம் 1971-இல் செய்யப்பட்டது. அவர்கள் நம் நாட்டின் நீதித்துறையின் சிறகுகளை வெட்டினார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்களை குறிப்பிட்டு மோதி விமர்சனம்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, “சட்டவிரோத கொள்கைகளால் `இந்திரா ஜி’யின் தேர்தலை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் எம்பி பதவியை விட்டு விலக வேண்டியிருந்தது. அவர் கோபமடைந்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் மீது அவசரநிலையை அமல்படுத்தினார். இது மட்டுமின்றி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்டத் தேர்தலை எதிர்த்து யாரும் நீதிமன்றம் செல்ல முடியாது என்ற 39வது சட்டத் திருத்தத்தை 1975-இல் செய்தார். ஆம், அவர் தான் இதைச் செய்தார்.”
“இங்கு அமர்ந்திருக்கும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ராஜீவ் காந்தி அரசமைப்புச் சட்டத்திற்கு மற்றொரு அடி கொடுத்தார். ஷா பானோ வழக்கில் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராஜீவ் காந்தி வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் சாசனத்தை தியாகம் செய்து, நாட்டை அடிப்படைவாதிகள் முன் தலைகுனிய வைத்தார்.” என்று பிரதமர் மோதி விமர்சித்தார்.
“ராஜீவ் காந்தி அடிப்படைவாதிகளை ஆதரித்தார். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை ரத்து செய்யப்பட்டது.” என்றும் பிரதமர் மோதி பேசினார்.
பொது சிவில் சட்டம் மீதான அரசாங்கத்தின் நோக்கம்
நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தனது அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
” பொது சிவில் சட்டம் குறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாங்கமும் அதை முடிவு செய்து செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனிநபர் சட்டங்களை ஒழிக்க ஒரு வலுவான வாதம் முன்வைக்கப்பட்டது” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
“அரசியலமைப்பு சபையின் விவாதத்தில், கே.எம். முன்ஷிஜி நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது அவசியம் என்று கூறினார். பொது சிவில் சட்டத்தை விரைவில் நாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது. அரசியலமைப்புச் சட்டமியற்றுபவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் நாங்கள் முழு பலத்துடன் ஈடுபட்டுள்ளோம்.” என்று பிரதமர் மோதி விவரித்தார்.
சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன?
சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கும் போது, ராகுல் காந்தி, சாவர்க்கரைப் பற்றி குறிப்பிட்டு, “இந்திய அரசியலமைப்பின் மோசமான விஷயம் என்னவென்றால், அதில் `இந்தியர்கள்’ என்று எந்த வார்த்தையும் இல்லை என்று சாவர்க்கர் எழுதியுள்ளார். வேதங்களுக்குப் பிறகு, மனுஸ்மிருதி நமது இந்து தேசத்திற்கு மிகவும் மதிக்கப்படும் நூலாக கருதப்படுகிறது. இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், எண்ணங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையாக இருந்து வருகிறது. இன்று மனுஸ்மிருதி தான் சட்டம். இவை சாவர்க்கரின் வார்த்தைகள்” என்றார்.
“நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியத்தன்மை என்ற எந்தக் கூறும் இல்லை என்பதை சாவர்க்கர் தனது எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த புத்தகத்தால் ((அரசியலமைப்புச் சட்டம்) இயங்க வேண்டியதில்லை, இந்த புத்தகத்தால் (மனுஸ்மிருதி) இயங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.” என்று ராகுல் குறிப்பிட்டார்.
“தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், சாவர்க்கரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஏனென்றால், அரசியலமைப்புக்கு ஆதரவாக நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசுகையில், சாவர்க்கரை அவதூறாகப் பார்த்து கேலி செய்வதாக அர்த்தம்.” என்றார்.
மற்ற விவகாரங்கள் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன?
ராகுல் காந்தி தனது உரையில், சாவர்க்கரைத் தவிர, அக்னிவீர், வினாத்தாள் கசிவு, விவசாயிகள் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் பேசினார்.
“நீங்கள் மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் பிற பெரிய தலைவர்களைப் புகழ்ந்து பேசுகிறீர்கள், ஆனால் தயக்கத்துடன் பேசுகிறீர்கள். உண்மை என்னவென்றால், இந்தியா முன்னதாக எப்படி நடத்தப்பட்டதோ அப்படித்தான் நீங்கள் நடத்த விரும்புகிறீர்கள்.” என்றார்.
மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் என்ற கதாபாத்திரத்தை குறிப்பிட்ட ராகுல் காந்தி, “ஏகலைவன் தயார் ஆனதைப் போலவே, இந்தியாவின் இளைஞர்கள் காலையில் எழுந்து வெவ்வேறு தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள். ஆனால் அக்னிவீரன் என்னும் திட்டத்தின் மூலம் அந்த இளைஞர்களின் விரல்களை வெட்டினீர்கள்.” என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து பேசிய அவர், “இன்று விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளீர்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை கோருகிறார்கள், ஆனால் நீங்கள் அதானி-அம்பானிக்கு பலனளிக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள்” என்றார்.
ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியின் எம்.பி.யான அவர் தனது உரையில், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை குறிவைத்தும் விமர்சித்தார்.
ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை பற்றிப் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்பு நான் ஹத்ராஸ் சென்றிருந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஹத்ராஸில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றம் செய்தவர்கள் இன்று வெளியில் சுற்றித் திரிகிறார்கள், அதே நேரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் வீட்டில் அடைப்பட்டுள்ளனர். எங்கள் மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட எங்களை அனுமதிக்கவில்லை என்றும், குற்றங்களை முதல்வர் பொய்யாக்கிவிட்டார் என்றும் குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர்.” என்றார்.
“உ.பி.யில் அரசியலமைப்புச் சட்டம் பொருந்தாது. அங்கு மனுஸ்மிருதி பயன்படுத்தப்படுகிறது. உ.பி. அரசு உங்களுக்கு வேறு இடத்தில் வசிக்க நிலம் தருவதாக உறுதியளித்ததாகவும், நான்கு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அந்த குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர்.” என்று ராகுல் காந்தி விவரித்தார்.
“இந்தியா கூட்டணி அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை நான் கூற விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இடத்தை மீட்டுத் தரவில்லை என்றால், நாங்கள் அனைவரும் சேர்ந்து அந்தக் குடும்பத்தை மீண்டும் குடியமர்த்துவோம்.” என்றார்.
ராகுல் காந்தி தனது உரையில் இடஒதுக்கீடு பிரச்னையை எழுப்பி, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற வரம்பு நீக்கப்படும் என்றார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். நாட்டில் பொருளாதார, சமூக சமத்துவம் இல்லை என்றால் அரசியல் சமத்துவமும் ஆபத்தில் இருக்கும் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். இன்றைய சூழல் என்னவென்பது அனைவருக்கும் தெரியும். அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது சமூக சமத்துவமும் இல்லை, எனவே எங்கள் அடுத்தக்கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.” என்றார்.
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு பாஜக தலைவர்களின் பதில்
ராகுல் காந்தியின் பேச்சு முடிந்ததும் பாஜக தலைவர்கள் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசினர்.
பாஜக எம்பி ஜகதாம்பிகா பால், “மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நிறைவேற்றிய மசோதாவை தன் கையால் கிழித்தெறிந்த தினத்தை ராகுல் காந்தி மறந்துவிட்டார். ராகுல் காந்தி அன்று அரசியல் சாசனத்தை கிழித்தெறிந்ததாக அர்த்தம்” என்றார்.
இதற்கிடையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரின் பாஜக எம்பி அனுராக் தாக்கூர், “கடந்த முறை நான் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் அரசியல் சாசனத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன என்று கேட்டிருந்தேன். யாரும் என்னிடம் சொல்ல பதில் சொல்லவில்லை.” என்று கூறினார்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணனின் புத்தகத்தை அவையில் காட்டி கிண்டல் அடித்த அனுராக் தாக்கூர், ” நாட்டின் அறிவார்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த புத்தகம் (அரசியலமைப்புச் சட்டம்) நேருவின் சிந்தனையால் பாதிக்கப்படவில்லை.” என்று கூறினார்.
பாஜக எம்பி கிரிராஜ் சிங்கும் ராகுல் காந்தியை விமர்சித்தார்.
“ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது. அவரது குடும்பத்தினரால் அரசியலமைப்பு பலமுறை மீறப்பட்டது. காங்கிரஸ் அரசியல் சாசனத்தை நாடியது சர்வாதிகாரத்துக்காகத்தான்.” என்றார்.
சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறியது தவறானது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அவர் சமூக ஊடகங்களில் ஒரு ஆவணத்தையும் பகிர்ந்துள்ளார், அதன்படி, 1980 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரின் 100வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு அவரை ‘இந்தியாவின் மகன்’ என்று அழைத்திருக்கிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.